You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகாவில் பசு காவலர்களால் கொல்லப்பட்ட இஸ்லாமியர் - தேர்தல் நேரத்தில் மாநில அரசியலில் வெடித்திருக்கும் சர்ச்சை
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில், உரிய ரசீதுகளுடன் ஒரு சந்தையிலிருந்து மற்றொரு சந்தைக்கு எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற வாகன ஓட்டுனர் மீது பசு காவலர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம், விரைவில் தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில், தற்போது பசு காவலர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்த ஓட்டுநர் இட்ரீஸ் பாஷாவின் உடல் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டது. ஏப்ரல் 1ஆம் தேதி, இரவு 12.30 மணியளவில், ராம்னகர மாவட்டத்தின் சாந்தனூர் பகுதிக்கு அருகே, சாந்திமாலாவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இட்ரீஸ் பாஷாவுடன் இருந்த அவரது உதவியாளர்கள், இர்ஃபான் மற்றும் செய்யத் சாகீர் ஆகியோரும் பசு காவலர்களால் துரத்தப்பட்டு, தாக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுடைய சொந்த ஊரான மாண்டியா மாவட்டத்தின், மத்தூர் பகுதியில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த வழக்குகளை விசாரிக்க ராம்னகர மாவட்டத்தின் காவல்துறையினர் இரண்டு குழுக்களை நியமித்துள்ளனர். மூன்று வழக்குகளில் ஒரு வழக்கு, சம்பவத்தில் ஈடுபட்ட பசு காவலர் புனித் கெரிஹல்லிக்கு எதிராக பதியப்பட்டுள்ளது. இரண்டாம் வழக்கு, சம்பவத்தில் உயிரிழந்த இட்ரீஸ் பாஷாவின் மீட்கப்பட்ட உடல் குறித்து பதிவாகியுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட புனித் கெரிஹல்லியால் மூன்றாம் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இட்ரீஸ் மற்றும் அவரது உதவியாளர்கள் பசு வதைக்காக கால்நடைகளை கடத்தினார்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேசமயம் இட்ரீஸ் பாஷாவின் சகோதரர் யூனிஸ் பாஷா கொடுத்துள்ள புகாரில், "மத்தூர் சந்தையில், கால்நடை வியாபாரி ஒருவரால் அந்த கால்நடைகள் அனைத்தும் வாங்கப்பட்டு, அருகிலிருக்கும் தமிழகப் பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மற்றொரு சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கொண்டிருந்தன. அப்படி கால்நடைகளை ஏற்றிகொண்டு, சென்ற வாகனத்தை புனித் மற்றும் அவரது கூட்டாளிகள் பவன், கோபி, பில்லிங்கா ஆகியோர் நிறுத்தியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய பெங்களூரின் ஐ.ஜி.பி ரவிகாந்தே கௌடா , “சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களின் மீது இருக்கும் பழைய வழக்குகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்
ராம்னகர மாவட்டத்தில் நிலவி வரும் அரசியல் சூழல்
கர்நாடகாவின் தலைநகர் பகுதியான பெங்களூரில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். பெங்களூரில் மிகுதியாக காணப்படும் லிங்காயத் சமூகத்தை தவிர, ராம்னகர மாவட்டத்தின் ஒரு பகுதியான சாந்தனூரில் வொக்கலிகர்கள் என்ற சாதியினரும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
இவர்களை தவிர, இதே பகுதியில் இஸ்லாமியர்களும் சிறிய எண்ணிக்கையிலான அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் இந்த இரு சமூகத்திற்கு இடையிலான உறவு மிகவும் நல்ல முறையில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
ஆனால் அதேசமயம், இந்தப் பகுதியில் கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டிகே.சிவகுமார் ஆதரவாளர்களுக்கும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசுவாமியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் அரசியல் ரீதியில், நீண்டகாலமாக பிரச்னைகள் நிலவி வருகின்றன. அதேபோல் பழைய மைசூரின் ஒரு பகுதியாக அறியப்படும் ராம்னகர மாவட்டத்தில் தங்களது கட்சியை வலுவாக நிலைநிறுத்துவதற்கு கர்நாடகாவின் ஆளுங்கட்சியான பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதேபோல் கர்நாடகாவின் கடலோர பகுதிகள் பெரும்பாலும், இந்துத்துவாவின் கூடாராமாகவே அறியப்படுகிறது. அங்கு ஏற்கனவே பசுகாவலர்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. 2016 ஆம் ஆண்டு, பிரவீன் பூஜாரி என்பவர், பஜ்ரங் தளம் மற்றும் இந்து ஜாகர்னா வேதிக்கே என்ற இந்து அமைப்புகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இறைச்சிகாக கால்நடைகளை கடத்தினார் என்று பிரவீன் பூஜாரி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அப்போதிலிருந்து, பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறு சிறு தாக்குதல்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.
இட்ரீஸ் பாஷா வழக்கில் என்ன நடந்தது?
கடந்த சனிக்கிழமையன்று காலை, இட்ரீஸ் பாஷாவின் உடல் சாந்திமாலா பகுதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. முன்னதாக சம்பவம் நடைபெற்ற அன்று, இட்ரீஸ் மற்றும் அவருடன் சென்றவர்களை சிறைபிடித்த புனித் மற்றும் அவரது கூட்டாளிகள், தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதில், ”உனக்கு நான் யாரென்று தெரியுமா? தெரியவில்லை என்றால் இப்போது தெரிந்துகொள். என் பெயர் புனித் கெரிஹல்லி. எனக்கு நீ இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால்தான், உன்னை நான் இங்கிருந்து போகவிடுவேன்” என்று புனித் கெரிஹல்லி கூறுகிறார்.
அதற்கு பதிலளிக்கும் இட்ரீஸ் மற்றும் அவரது உதவியாளர்கள், “நாங்கள் வெறும் இந்த வாகனத்தின் ஓட்டுநர்கள்தான். இந்த எருமை மாடுகளை ஒரு சந்தையிலிருந்து மற்றொரு சந்தைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறோம். அதற்கு முறையான ரசீது எங்களிடம் உள்ளது” என்று கூறுகின்றனர்.
ஆனால் அவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்து கொண்டிருக்கும்போது, துப்பாக்கியை எடுக்கும் புனித், அவர்கள் மூவரையும் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு மிரட்டுகிறார்.
”முறையான ரசீதுகளை அவர்கள் காண்பித்த பிறகும் கூட, இட்ரீஸ் மற்றும் அவருடன் இருந்தவர்களை, புனித் மற்றும் அவரது கூட்டாளிகளை துரத்தி, தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலின்போது இர்ஃபான் மற்றும் சாகீர் தப்பித்து விட்டனர். ஆனால் அவர்களிடம் மாட்டிகொண்ட இட்ரீஸை, புனித் மற்றும் அவரது கூட்டாளிகள் புதர்களுக்கு இடையே இழுத்துச் சென்று, அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
இட்ரீஸின் தலையிலும், நெஞ்சிலும் காயங்கள் இருந்தன. இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக இந்த பகுதிகளில் நடைபெற்று வருகின்றன” என்று இட்ரீஸின் மைத்துனர் அப்துல் மஜீத் பிபிசி ஹிந்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
இட்ரீஸ் உடல் மீது இருக்கும் காயங்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், உடற்கூறாய்வுக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவால் இட்ரீஸின் உடற்கூறாய்வு மேற்கொள்ளபடவிருக்கிறது. இந்த வழக்கின் மீதான தீவிர தன்மையை உணர்ந்தே நாங்கள் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளோம்” என்று ரவிகாந்தே கௌடா தெரிவித்துள்ளார்.
”சம்பவத்தில் ஈடுபட்ட 5 நபர்களும் தப்பித்துவிட்டனர். ஆனால் அவர்களை நாங்கள் விரைவில் கைது செய்துவிடுவோம். அதேசமயம், இந்த வழக்கின் மீதான விசாரணை மிக நியாயமான முறையில் நடைபெறும் என்பதை நான் உறுதியாக தெரிவித்துகொள்கிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் புனித் என்பவர், வலது சாரி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இந்து மக்கள் இஸ்லாமியர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட கூடாது எனவும், ஹலால் முறையில் தயாரிக்கப்படும் இறைச்சிகளை புறக்கணிக்க வேண்டும் எனவும் முன்னதாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அவர், சமீபத்தில் ’ராஷ்டிர ரக்ஷனா பதே’ என்ற இயக்கத்தையும் உருவாக்கியுள்ளார். மேலும் பல்வேறு வழக்குகளிலும் அவர் சம்பந்தபட்டிருக்கிறார்” என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் அதேநேரத்தில், புனித் கெரிஹல்லி சமூக வலைதளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அதிகாலை 5.30 மணி வரை காவல்துறையினருடன் இருந்து, கால்நடைகளை கடத்திச் சென்றவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளேன். அதேபோல் கடத்தப்பட்ட கால்நடைகள் முறையாக கோஷாலாவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் நான் விசாரித்து வருகிறேன். கோமாதாக்களை பாதுகாப்பதற்காக என்னுடைய பிரசாரங்களை தொடர்ச்சியாக மேற்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசியலில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புனித் கெரிஹல்லி, பாஜக மற்றும் ஸ்ரீ ராமா சேனா இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்துள்ளார்.
”இது போன்ற செயல்கள், கர்நாடக மாநில முதலமைச்சர் பாசவராஜ் பொம்மையால் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. சிறுபான்மை சமூகத்தினர் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்த்தி,சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்துவதற்கு அவர்கள் முயற்சித்து வருகின்றனர். முதலமைச்சர் அவரது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்” என்று டிகே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசுவாமி இதுகுறித்து கூறும்போது, “இந்த சம்பவம் தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஒரு சதி. அந்த நபர் கால்நடைகளை ஏற்றி சென்றுகொண்டிருப்பது குறித்து அதிகாரிகளிடம் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்தலின்போது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியாகவே இதை பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து, கர்நாடக முதலமைச்சர் பாசவராஜ் பொம்மை இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்