சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகல் - என்சிபியில் என்ன நடக்கிறது?

தேசியவாத காங்கிரஸின் (என்சிபி) நிறுவன தலைவர் சரத் பவார், அக்கட்சியின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சரத் பவார் தமது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று என்சிபி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் அவரது வீடு மற்றும் அலுவலகம் முன்பாகத் திரண்டு முழக்கமிட்டனர்.

முன்னதாக, சரத் பவார் மே 1ஆம் தேதி தமது கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாகவும், ஆனால் மகா விகாஸ் அகாதியின் பேரணி காரணமாக, அவர் தனது முடிவை ஒத்திவைத்ததாகவும் அஜித் பவார் கூறியிருந்தார்.

கட்சியின் அடுத்த தலைவர், சரத் பவாரின் வழிகாட்டுதலின்படி செயல்படுவார் என்றும் அஜித் பவார் கூறினார்.

தேசியவாத காங்கிரஸில் நடக்கும் இந்த நிகழ்வுகள் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரஷித் ஆல்வி கூறுகையில், "சரத் பவார் மரியாதைக்குரிய தலைவர். இது அவரது கட்சியின் உள்விவகாரம். ஆனால் எதிர்க்கட்சி ஒற்றுமையில் அவர் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார். நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

முன்னதாக தமது பதவி விலகல் முடிவை சரத் பவார் அறிவித்தபோது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களைக் கொண்ட குழு, கட்சியின் எதிர்கால வியூகத்தை முடிவு செய்யும் என்று கூறினார்.

"இந்த குழுவில் பிரஃபுல் படேல், சுனில் தாக்கரே, பி.சி. சாக்கோ, நர்ஹரி ஜிர்வால், அஜித் பவார், சுப்ரியா சுலே, ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால், திலீப் வால்ஸ் பாட்டீல், அனில் தேஷ்முக், ராஜேஷ் தோபே, ஜிதேந்திர அவ்ஹாத், ஹசன் முஷ்ரிப், தனஞ்சய் எம். , ஜெய்தேவ் கெய்க்வாட் மற்றும் கட்சியின் அனைத்து அணிகளின் தலைவர்களும் இடம்பெறுவர்," என்று அவர் தெரிவித்தார்.

ராஜிநாமா செய்வதாக அறிவித்த சரத் பவார், "கடந்த 60 ஆண்டுகளில் நீங்கள் அனைவரும் என்னுடன் உறுதியாக நின்றிருக்கிறீர்கள். இதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்" என்றார்.

அரசியல், சமூக மற்றும் கலாசார துறைகளில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று சரத் பவார் கூறினார்.

சரத் பவார் சொல்லும் காரணம்

சரத் பவாருக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் உள்ளது. இந்நிலையில் இனி நான் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

1960-ம் ஆண்டு மே 1-ம் தேதி அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சரத் பவார், "இந்த நீண்ட அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு, எங்கேயாவது நிறுத்த நினைக்க வேண்டும். பேராசை கொள்ளக் கூடாது" என்றார்.

82 வயதான சரத் பவார், மகாராஷ்டிராவின் அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தினார். மகாராஷ்டிராவில் நான்கு முறை முதலமைச்சராகவும், பல முறை மத்திய அமைச்சராகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார் சரத் பவார். அவரது 6 தசாப்தங்களுக்கும் மேலான அரசியல் வாழ்க்கை இந்திய அரசியலில் ஆழமான தடம் பதித்த பல மைல்கற்களைக் கண்டது.

அமலாக்கத்துறை அழைப்பும் சரத் பவாரின் முடிவும்

2014 சட்டமன்ற தேர்தலில் என்சிபி 41 இடங்களை பெற்றது. 2019இல் அக்கட்சிக்கு 54 இடங்கள் கிடைத்தன. அப்போது, 78 வயதான சரத் பவாரின் போர்க்குணம் விவாதப்பொருளாக பேசப்பட்டது.

அதேவேளையில் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கின. ஆனால் ஆரம்ப காலத்தில் சரத் பவாரை எங்கும் காணவில்லை. அவர் தொடர்பான அமலாக்க இயக்குநரக நோட்டீஸ் விவகாரம் சர்ச்சையானது. இதனால் அவர் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வந்தன.

இதற்குப் பிறகு முன்னுக்குப் பின் முரணாக சரத் பவாரின் செயல்பாடுகள் குறித்து பட்டிதொட்டியெல்லாம் விவாதிக்கப்பட்டது.

தேர்தலின் போது, மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில் சரத் பவாருக்கு எதிராக அமலாக்க இயக்குநரகம் முதல்நிலை விசாரணை அறிக்கையை பதிவு செய்ததாக தகவல் வந்தபோது, அவரது நிலைப்பாடு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு தாமாகவே செல்வதாக அவர் அறிவித்தார். பின்னர், மும்பை காவல் ஆணையரின் வேண்டுகோளுக்குப் பிறகு, அவர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்குச் செல்லவில்லை. அவர் அலுவலகத்திற்கு வரத் தேவையில்லை என்று அமலாக்கத்துறையே அவரிடம் கூறியது.

மகாராஷ்டிர அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் பல வல்லுநர்கள், அமலாக்க இயக்குநரகத்திற்கும், சரத் பவாருக்கும் இடையேயான இந்த நிகழ்வு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை முற்றிலும் தலைகீழாக மாற்றியது என்று நம்புகிறார்கள்.

மூத்த பத்திரிகையாளர் பிரதாப் அஸ்பே சரத் பவாரின் அரசியல் மற்றும் வியூகத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார். “பவாரின் இந்த வடிவமும் போர்க்குணமும் புதிதல்ல” என்கிறார் அவர்.

1980ஆம் ஆண்டு மகாராஷ்டிர முதல்வராக சரத் பவார் இருந்தார்.

அப்போது அவர் டெல்லியில் இந்திரா காந்தியை சந்தித்தார். இந்திரா காந்தி அவரிடம் யஷ்வந்த்ராவ் சவானின் தலைமையில் பணியாற்றாமல் சஞ்சய் காந்தியின் தலைமையில் பணியாற்ற அறிவுறுத்தினார்.

ஆனால் இந்திரா காந்தியின் இந்த திட்டத்தை பவார் நிராகரித்தார்.

இந்திரா காந்தியின் வாய்ப்பை நிராகரிப்பதன் தாக்கங்களை அவர் நன்கு அறிந்திருந்தார். ஆனால் அவர் சரியான முடிவை எடுத்தார்.

இதற்குப் பிறகு, பவார் மறுநாள் மகாராஷ்டிராவுக்குத் திரும்புவதற்குள், மாநிலத்தில் அவரது அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

சோசலிஸ்ட் காங்கிரஸ் தொடர்பாக பவார் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நேரமும், அந்த நெருக்கடியான சூழ்நிலையை பவார் தனது திறமையால் எப்படி சமாளித்தார் என்பதையும் அஸ்பே குறிப்பிடுகிறார்.

"1980 சட்டமன்ற தேர்தலில், பவாரின் சோசலிஸ்ட் காங்கிரஸ் 54 இடங்களை வென்றது. ஆனால் யஷ்வந்த்ராவ் சவான் பல சோசலிஸ்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்துக்கொண்டதால், பவாருக்கு வெறும் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே எஞ்சினர்.

இது பவாருக்கு மிகவும் கடினமான சூழ்நிலையாக இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் விட்டுக்கொடுக்காமல் பவார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மக்களை சந்தித்தார். விவசாயிகளின் பேரணிக்கு ஏற்பாடு செய்தார். இந்த முயற்சிகளின் மூலம், அவர் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற்றார்," என்கிறார் அஸ்பே.

சரத் பவார் உண்மையில் நேரில் தோன்றுவதை விட 'ஆக்ரோஷமானவர்' என்று அஸ்பே மேலும் கூறுகிறார்.

அரசியலில் நாடாளுமன்ற அமைப்பால் மிகவும் செல்வாக்கு பெற்றவர் என்று நம்பும் அஸ்பே பவாரின் ஆக்ரோஷமான வடிவம் பொதுவெளியில் முன்னுக்கு பின் முரணாக வருவது அரிதாகவே நிகழ்கிறது என்கிறார்.

புற்றுநோய்க்கு எதிரான அவரது போராட்டம் அவரது உயிர்ச்சக்திக்கு மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு.

மூத்த பத்திரிகையாளர் மிலிந்த் காண்டேகர் இது பற்றி நம்மிடையே ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

"சில காலத்திற்கு முன்பு, 2004 மக்களவை தேர்தல் நடந்த நேரம். நான் சரத் பவாரின் பேரணியில் செய்தி சேகரிக்க புனேவில் இருந்தேன். இந்த பேரணி முடிந்ததும், அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய மருத்துவமனைக்கு நேராக செல்வதாக பவார் அறிவித்தார். அங்கிருந்து மும்பை சென்றார். நேர்காணலுக்காக நான் அவருடன் காரில் இருந்தேன். அவர் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பவாரின் உடல் நலக்குறைவு குறித்த செய்தி வெளியானதும், இனிமேல் அவர் சுறுசுறுப்பாக பணியாற்ற மாட்டார் என்று நம்பப்பட்டது, ஆனால் இப்போது இருப்பது போலவே அவர் புற்றுநோயை எதிர்த்து அன்றும் போராடினார். இது அவருடைய தன்னம்பிக்கை இல்லையென்றால் வேறென்ன..." என்கிறார் மிலிந்த் காண்டேகர்.

"அம்மாவிடம் இருந்து உத்வேகம் கிடைத்தது"

தனது தாயார் சாரதாய் பவாரிடமிருந்து தான் இந்த போராட்ட குணத்தை பெற்றதாக தமது வாழ்க்கை வரலாற்றில் சரத் பவார் கூறியிருந்தார்.

தமது சுயசரிதையில் அவர், "எங்கள் கிராமத்தில் ஒரு வழி தவறிய காளை இருந்தது. அதனால், கிராம மக்கள் பல பிரச்னைகளை சந்திக்க நேரிட்டது. ஒரு நாள் யாரோ ஒருவர் அதற்கு தீ வைத்து விட்டார். அது எரிந்த நிலையில், பக்கவாட்டில் விழுந்தது.

மறுநாள் என் அம்மா கண் விழித்துப் பார்த்தபோது காயம்பட்ட அந்த காளையை பார்த்தார். அதன் உடலில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. என் அம்மா அதனிடம் சென்று மிகவும் மென்மையான முகபாவங்களுடன் அதன் முதுகில் தட்டினார். இதற்கிடையில், காளை எழுந்து நின்று, தனது முழு பலத்துடன் என் அம்மாவைத் தூக்கி ஒருபுறம் தள்ளியது.

அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு, காளை தனது முழு எடையையும் சேர்த்து அழுத்திக்கொண்டே இருந்தது. இதனால், அவரது தொடை எலும்புகள் அனைத்தும் உடைந்தன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர் அவரது ஒரு காலில் இருந்து சுமார் ஆறு அங்குல எலும்பை அகற்ற வேண்டியிருந்தது.

அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருந்தது ஆனால் அந்த விபத்துக்குப் பிறகு அம்மாவால் துணையின்றி நடக்கவே முடியவில்லை. இவ்வளவு நடந்தாலும் கூட என் அம்மா வருத்தம் தெரிவிக்கவே இல்லை. காளை மீது பரிவு காட்டவே செய்தார்," என்று குறிப்பிட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: