You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசிய பொதுத் தேர்தல்: வாக்காளர்களை கவர பணம், தமிழ் சினிமா பாடல்கள்
- எழுதியவர், சதீஷ் பார்த்தீபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலேசிய மக்கள் எதிர்பார்த்த நிகழ்வு எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றுதான் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மலேசியா சுதந்திரம் பெற்ற பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு வரை 14 பொதுத்தேர்தல்களை மலேசியர்கள் சந்தித்துள்ளனர். கடந்த தேர்தலைத் தவிர, மற்ற தேர்தல்கள் அனைத்துமே பெரும்பாலும் அதிக பரபரப்புகளோ, எதிர்பார்ப்புகளோ இன்றிதான் நடந்துள்ளன.
பாரிசான் நேசனல் எனப்படும் தேசிய முன்னணி கூட்டணியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகளில் மட்டுமே வென்று வந்துள்ளன.
2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அன்றைய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய பக்காத்தான் ஹராப்பான் எனப்படும் நம்பிக்கை கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்து. மலேசியாவில் முதன் முறையாக நிகழ்ந்த ஆட்சி மாற்றம் என்பதால் உலக நாடுகளின் பார்வை அதன் மீது பதிந்தது. அதன் பிறகும் மலேசிய அரசியல் களத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் மலேசிய குடிமக்கள் நான்கு பிரதமர்களைப் பார்த்துவிட்டனர். அரசியல் குழப்பத்தின் உச்சமும், பொருளாதார வீழ்ச்சியும் மலேசியர்களை அதிகம் யோசிக்க வைத்தது எனில், கொரோனா தொற்றுப் பரவலும் சுயநல அரசியலும் அம்மக்களிடம் அச்சத்தையும் ஒருவித கோபம் கலந்த சலிப்பையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம்.
வரலாறு காணாத போட்டி
மலேசியாவில் இம்முறை தேர்தல் களம் தொடக்கம் முதலே களைகட்டி உள்ளது. சிறிதும் பெரிதுமாக நான்கு கூட்டணிகள் களமிறங்கி உள்ளன. மலேசியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட தற்போது நான்கு பேர் களத்தில் உள்ளனர். நால்வருமே இன்று வெவ்வேறு அரசியல் கட்சிக் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள போதிலும், கடந்த காலத்தில் ஒரே கட்சியில் இருந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்க அம்சம்.
மகாதீர் மொஹம்மத், அன்வார் இப்ராகிம், நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், மொஹிதின் யாசின் ஆகிய நால்வரும் பிரதமராகும் கனவுகளோடு, வியூகங்களை வகுத்துள்ளனர். அதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மலேசிய வரலாற்றில் இதுபோன்ற கடும் போட்டி நிறைந்த தேர்தல் நடைபெற்றதில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பிரசாரக் கூட்டங்களின்போது மேடைக்கு எதிரே உள்ள இருக்கைகள் காலியாக காட்சியளிக்கின்றன.
அதேசமயம் சமூக ஊடகங்கள் வழி அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பிரசார நடவடிக்கைகள் களைகட்டி உள்ளன. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அனைத்துவிதமான வாய்ப்புகள் மூலமாக வாக்காளர்களிடம் 'பேசி' வருகிறார்கள் வேட்பாளர்கள்.
கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மலேசியா இத்தகைய காட்சிகளைக் காணவில்லை. மாறாக பிரசார கூட்டங்களில் அனல் பறந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
தலைவர்கள் எதிர்த்தரப்பின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினர். குறிப்பாக அன்றைய ஆளும்தரப்பின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பொதுவெளியில் பரவலாக விவாதிக்கப்பட்டன. இதற்கு சமூக ஊடகங்களும் கைகொடுத்தன.
மூலை முடுக்குகளில் எல்லாம் விவாதங்கள் நடைபெற்றன. ஊழலுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகவும், மலேசியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றும் பலர் ஆவேசப்பட்டனர்.
இத்தனைக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவரான அன்வார் இப்ராகிம் அச்சமயம் சிறையில் இருந்தார். எனினும் அன்வார் அலை வீசியது.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப, மலேசிய அரசியல் களத்தில் திடீர்த் திருப்பங்கள் நிகழ்ந்தது. பரம எதிரிகள் என்று கருதப்பட்ட அன்வாரும் மகாதீரும் நேசக்கரங்களை நீட்டினர், இணைந்து செயல்பட முடிவெடுத்தனர். தமது 93ஆவது வயதில் மீண்டும் மலேசியாவின் பிரதமரானார். இதை யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?
அதன் பின்னர் அன்வாருக்கு அரச மன்னிப்பு கிடைத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானதும், தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரிடம் மகாதீர் பிரதமர் பதவியை ஒப்படைக்கத் தவறியதும் மலேசிய அரசியல் வரலாற்றின் குழப்ப பக்கங்களுக்குச் சொந்தமானவை.
40 லட்சம் இளம் வாக்காளர்கள்
மலேசிய பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 18ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை 21 வயது பூர்த்தியானவர்களே வாக்களிக்க முடியும். எனவே நான்கு மில்லியன் இளம் வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர் பிரிவு உள்ள போதிலும், இன்றைய இளம் வாக்காளர்களின் மனப்போக்கு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை என்றே பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
எனவே நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இளம் வாக்காளர்கள் உருவெடுக்கக்கூடும்.
"எதிர்வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் 21 மில்லியன் மலேசிய குடிமக்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கட்சி, வேட்பாளர்களை சார்ந்துதான் வாக்களிக்கக்கூடும். எனினும் நாட்டின் பொருளாதாரம், ஸ்திரமான அரசியல் சூழல், புதுத்திட்டங்கள் ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிப்பதற்கும் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் காத்திருக்கக்கூடும்," என்று மலேசிய ஊடகங்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
பொருளாதாரச் சூழல் குறித்து அதிகம் கவலைப்படும் மலேசியர்கள்
அண்மையில் மெர்டெக்கா சென்டர் என்ற தனியார் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் பங்கேற்றவர்களில் சுமார் 75 விழுக்காட்டினர் நாட்டின் பொருளாதாரச் சூழல்தான் தங்களை அதிக கவலையில் ஆழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இந்த அம்சம் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வெகுவாக சரிந்திருப்பது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மந்தப்படுத்தி உள்ளது என்பதுடன், ஏற்றுமதி-இறக்குமதியையும் பாதித்துள்ளது.
அதேசமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்துள்ளதை மேற்கோள் காட்டி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவதாகச் சொல்கிறார் மலேசிய மத்திய வங்கி (பேங்க் நேகாரா) ஆளுநர் நோர் ஷம்சியா யூனுஸ் (Nor Shamsiah Yunus). கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 14.2% அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாமானிய மக்களோ, முட்டை தொடங்கி கோழிகள் வரை, சமையல் எண்ணெய் தொடங்கி காய்கறிகள் வரை அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மனநிறைவை அளிக்கவில்லை என்றும் சமூக ஊடகங்களில் கொந்தளிக்கின்றனர்.
அணிவகுத்து நிற்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்
நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழல் மோசமடைய முன்னாள் பிரதமர் நஜிப் தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடுகளும் ஊழல் முறைகேடுகளும் முக்கியக் காரணம் என பெரும்பாலானோர் கருதுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் நஜிப்புடன் தொடர்புடைய 1எம்டிபி ஊழல், அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள், அம்னோ கட்சித் தலைவர் சாஹித் ஹமிடி மீதான ஊழல் புகார்கள், அம்னோவில் உள்ள மற்ற மூத்த தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இப்போது அம்னோ கட்சியை உள்ளடக்கிய, தேசிய முன்னணிக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றன.
ஊழல் வழக்கில் நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகால சிறைத்தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து அவர் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். அவரது மனைவி ரோஸ்மாவும் கடும் நெருக்கடியில் உள்ளார்.
கடந்த 2018ஆம் பொதுத்தேர்தலின்போது நஜிப்பையும் ரோஸ்மாவையும் எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடின. இருவரது ஊழல்களையும் அம்பலப்படுத்துவோம் என அன்வார் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி உரக்கக் குரல் கொடுத்தது. இதற்கு ஆதரவு கிடைத்ததால்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
இந்நிலையில், மீண்டும் ஊழல் தலைவிரித்தாடக் கூடாது என நினைக்கும் மலேசியர்கள் அன்வாரை ஆதரிக்க வேண்டும் என்ற பழைய முழக்கத்தை அவரது தரப்பு இப்போது முன்வைக்கிறது. ஆனால் இதற்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?
மலேசியாவில் உள்ள எல்லா இனங்களும் எல்லா வேளைகளிலும் சரிசமமாக நடத்தப்படுவதில்லை என்பதை மறுக்க இயலாது என 'மலேசியா இன்று' இணையத்தள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் அரசியல் விமர்சகர் இராகவன் கருப்பையா.
"ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் இன ரீதியாக வரையப்படுவது மலேசியாவில் மட்டுமே நிகழும் ஓர் அதிசயம் என பொருளாதார வல்லுநர்கள் அண்மைய காலமாக கருத்துரைத்து வருவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகக் காண முடிகிறது.
"ஒரே மலேசியா (சத்து மலேசியா), மலேசிய குடும்பம் (கெலுவார்கா மலேசியா), போன்ற பல்வேறு முழக்கங்களை தலைவர்கள் முன்வைக்கின்றனர். ஆனால் அவையெல்லாம் அந்தந்த சமயங்களில் பதவியில் இருங்கும் பிரதமர்களின் அரசியல் விளம்பரத்திற்கு மட்டும்தான் பயன்படுகின்றன," என்கிறார் இராகவன் கருப்பையா.
இந்தியர்களின் உருமாற்றப் பிரிவு, இந்திய தொழில் முனைவோர் மேம்பாடு, தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாடு ஆகியவற்றுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குறைபாடு குறித்து இந்தியர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இம்முறை வாக்களிக்க உள்ள 21 மில்லியன் (2.1 கோடி) வாக்காளர்களில் சுமார் 13 மில்லியன் (1.3 கோடி) பேர் மலாய்க்காரர்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்கிறார் மூத்த செய்தியாளர் தமிழ்மணி.
மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் மலாய்க்காரர்களின் வாக்குகள் 150 முதல் 160 தொகுதிகளின் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என்பது இவரது கணிப்பு.
எனவே தேர்தல் களத்தில் உள்ள கூட்டணிகள் மலாய்க்காரர்களை மையப்படுத்தியே எத்தகைய அறிவிப்பையும் வாக்குறுதியையும் வெளியிடுவார் என்பதை தமிழ்மணி கோடிகாட்டுகிறார். "நீண்ட நெடிய காலமாக தேசிய முன்னணி கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள அம்னோ கட்சிக்கு இன வாதமே முக்கியமான அரசியல் முதலீடாகியுள்ளது. இருப்பினும் அக்கூட்டணியில் மலேசிய சீனக் சங்கமும், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் அடிமைகள் போல் உள்ளதால், அவ்வப்போது அக்கூட்டணி தேசியம் குறித்தும் பேசும். அது வெறும் நாடகம்தான்.
"அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்குள் இனவாதமும் மதவாதமும் அறவே இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆட்சியில் அமர்ந்து அரசாங்க நிர்வாக இயந்திரத்தை இயக்கும் போதுதான் அதனுடைய முழுமையான சுயரூபமும் வெடிக்க வாய்பிருக்குமென்று," என்கிறார் தமிழ்மணி.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் துணைப் பிரதமராக்க இன்றுள்ள அரசியல் கூட்டணிகள் முன்வருமா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பி உள்ளார்.
வாக்காளர்களைக் கவர பயன்படும் தமிழ்த் திரைப்பாடல்கள்
இணையம் வழி மேற்கொள்ளப்படும் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால், பெரும்பாலான வேட்பாளர்கள் அதில் கவனம் செலுத்துகிறார்கள்.
பிரசாரப் பாடல்களும், வாக்கு சேகரிக்கும் காணொளிகளால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன.
தொகுதி மக்களுக்காக ஆற்றிய பணிகள், புதிய வாக்குறுதிகள், பல்லின மக்களுக்கான திட்டங்கள் குறித்த விவரங்களைப் பாடல் வரிகளாக மாற்றியுள்ளனர். இம்முறை தேர்தல் பிரசாரத்தில் 'டிக்டாக்' செயலியும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
இளைய தலைமுறையினரைக் கவர இச்செயலிதான் வேட்பாளர்களுக்கு வெகுவாகக் கைகொடுக்கிறது.
நன்கு அறிமுகமான சில வேட்பாளர்களை பல லட்சம் பேர் 'டிக்டாக்'கில் பின்தொடர்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரின் ரசிகர். அதனால் இந்தியர்கள் மத்தியில் அவர் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு எம்ஜிஆர் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக 'நான் ஆணையிட்டால்' பாடல் பின்னணியில் ஒலிக்க வாக்கு சேகரிக்கிறார் அன்வார். சில இடங்களில் அந்தப் பாடலின் சில வரிவகளை அவர் பாட முயற்சி செய்கிறார். இதேபோல் மற்ற தமிழ் வேட்பாளர்களும், தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடி வாக்கு சேகரிப்பதைக் காண முடிகிறது.
வாக்களிக்க பணம் தரப்படுவது உண்மையா?
தமிழகத்தில் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகப் பரவலாகப் பேசப்படுவதுபோல், மலேசியாவிலும் தேர்தல் சமயங்களில் வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த பொதுத்தேர்தலின்போது கேமரன் மலை தொகுதியில் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சிவராசா. எனினும் அத்தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர், தேர்தல் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுத்தார். விசாரணையின் முடிவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த புகார் நிரூபணமானதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால் சிவராசா தமது எம்பி பதவியை இழந்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, போட்டி கடுமையாக உள்ள தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை, அன்றைய ஆளும் கட்சிகளில் ஒன்றான அம்னோ தலைமை சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், நடப்புத் தேர்தலிலும், வாக்களிக்கப் பணப் பட்டுவாடா நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
அரசாங்கம் முன்பே அளித்த திட்டங்களின் அடிப்படையிலும் வேறு சில காரணங்களை முன்வைத்தும் ஆளும் தரப்பினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
தபால் வாக்குகளை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் முந்நூறு மலேசிய ரிங்கிட் விநியோகிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
தேர்தல் களத்தில் யார் அலை வீசுகிறது?
தேர்தல் அறிக்கையில் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தும் விதமாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்).
அன்வார் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) சமூகப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.
கடந்த 2018 பொதுத்தேர்தலில் அன்வாருக்கு ஆதரவான அலை வீசியது என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பு அன்றைய ஆளும் கட்சிக்கு எதிரான வீசியது என்றும் இன்றளவும் கூறி வருகின்றனர்.
அன்வாரின் முழக்கங்களை ஏற்றுக்கொண்டு அவரது தரப்பிடம் ஆட்சிப் பொறுப்பை மலேசியர்கள் ஒப்படைத்தனர். எனினும் அவர் அந்த வாய்ப்பை, ஆட்சியை பாதுகாக்கத் தவறிவிட்டார் என்ற விமர்சனம் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே உள்ளது.
தற்போதுள்ள ஆட்சியாளர்கள் இம்முறையும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். பிரசார கூட்டங்கள், நடவடிக்கைகளில் ஏராளமானோர் பங்கேற்காவிட்டாலும், தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை மலேசியர்கள் முன்பே தீர்மானித்துவிட்டனர். எனவே மலேசியாவில் எந்தத் தலைவர், அரசியல் கட்சி, கூட்டணிக்கு ஆதரவான அலை வீசியது என்பது தேர்தல் முடிவடைந்த பிறகே தெரிய வரும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்