You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ; தேர்தல் வேண்டாம் எனப் பதறும் எதிர்க்கட்சிகள்
மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும்.
பல்வேறு எதிர்ப்புகள், சிக்கலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மலேசிய பிரதமர்.
எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், இஸ்மாயில் சப்ரி யாகூப் தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள் சிலவும்கூட, இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
கொரோனா நெருக்கடி காரணமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு பல மில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாகும் என்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளன.
மாறாக, இந்தத் தொகையை மக்கள் நலப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவை வலியுறுத்தின.
பருவ மழை அச்சத்துக்கு மத்தியில் வெளியான அறிவிப்பு
மேலும், அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் பருவ மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சமயம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கம்போல் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுவதால், பொதுத்தேர்தலை நடத்த இது உகந்த நேரமல்ல என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இந்நிலையில், நடப்பு கூட்டணி அரசாங்கத்தில் அதிக பலம் கொண்ட அம்னோ கட்சித் தலைமை தங்களுக்குச் சாதகமான சூழல் நிலவுவதாக கருதுவதை அடுத்து, பொதுத்தேர்தலை நடத்துமாறு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்புக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. பிரதமரும்கூட அம்னோ கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராவார்.
இதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஊழல் வழக்கில் சிக்கி 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். அவர் அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேளையில் அம்னோவின் நடப்பு தேசியத் தலைவரான சாஹித் ஹமிதி, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அண்மையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இதை சாதகமான அம்சமாகக் கருதும் அம்னோ, கடந்த ஒரு மாதமாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்புக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்ததை அடுத்து, அவர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக இன்று அறிவித்தார்.
அரசியல் மோதலால் ஆட்சியை இழந்த மகாதீர்
மலேசிய நாடாளுமன்ற, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அந்நாட்டு மாமன்னரின் ஒப்புதலைப் பெற்று நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் அம்னோ கட்சித் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணிதான் ஆட்சியில் நீடித்து வந்தது.
எனினும், 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் எனும் எதிர்க்கட்சிக் கூட்டணி, தேசிய முன்னணியை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது.
அம்னோ கட்சியின் தேசியத் தலைவராக பல்லாண்டுகள் பொறுப்பு வகித்த முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான கூட்டணி அரசுக்கு தலைமை ஏற்றார். (முன்னதாக அரசியல் கள மாறங்களின் காரணமாக அம்னோ கட்சியில் இருந்து அவர் விலகிவிட்டார்.)
இதன் மூலம் உலகின் ஆக வயதான பிரதமர் எனும் பெருமை அவருக்குக் கிடைத்தது. எனினும், 22 மாதங்கள் மட்டுமே அவரது தலைமையிலான ஆட்சி நீடித்தது.
அன்வார் இப்ராகிமுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க மறுத்ததால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு, அதன் முடிவில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
அதன் பிறகு, அன்வாரும் மகாதீரும் எதிரெதிர் துருவங்களாக மாறியுள்ளனர்.
பிரதமர் பதவிப் போட்டியில் மூன்று பேர்
தற்போது 95 வயதைக் கடந்துவிட்ட மகாதீர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய பக்காத்தான் ஹராப்பான் சார்பில் அன்வார் இப்ராகிம் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
அம்னோ சார்பில் நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற கலைப்பு குறித்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடம் முதலே, இந்தப் பொதுத்தேர்தலில் மலேசிய இந்தியர்கள் எந்த அணியை ஆதரிப்பார்கள் என்பது குறித்த விவாதங்கள் தொடங்கி உள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்