பெரியார் சொன்னபோது மறுத்த சமூக நீதி பாதையை காங்கிரஸ் இப்போது கையில் எடுக்க என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சமீபத்தில் சட்டீஸ்கரின் ராய்ப்பூரில் நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் 85வது சிந்தனை அமர்வில் பல முற்போக்கான சமூக நீதித் திட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்வைத்திருக்கிறது.
கட்சியின் முந்தைய தடுமாற்றங்களில் இருந்து விலகி, புதிய பாதையைத் தேர்வு செய்கிறது காங்கிரஸ். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? இது பலனளிக்குமா?
காங்கிரஸ் கட்சியின் 85வது சிந்தனை அமர்வு சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள், 2024ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது என்றாலும், மாநாட்டின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்தான் அகில இந்திய ரீதியில் பலரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோரின் கல்வியையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்த 'ரோஹித் வெமுலா சட்டம்' என்ற பெயரில் சட்டத்தை உருவாக்குவது, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்கென தனியான அமைச்சகம், தனியார் நடத்தும் தொழில் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினர் ஆகியோருக்கும் சம அளவில் வேலைவாய்ப்புகளை வழங்குவது, நீதித்துறையின் உச்ச அமைப்புகளில் இட ஒதுக்கீடு போன்ற சமூக நீதிக் கொள்கைகளை தீர்மானமாக காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியிருக்கிறது.
மேலும், தற்போது பொருளாதாரரீதியில் பின்தங்கியோருக்கு வழங்கப்படும் பத்து சதவீத இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பட்டியலினத்தோரையும் இணைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அதுதவிர, காங்கிரஸ் காரியக் கமிட்டியில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 50 சதவீத இடங்களைத் தரவும் கட்சி முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 'நியாய்' திட்டத்தின் மூலம் அடிப்படை வருமானத்திற்கான உரிமை, தனித்து வாழும் பெண்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ஓய்வூதியம் ஆகியவை குறித்தும் பேசியிருக்கும் காங்கிரஸ், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறது.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பதோடு நின்றுவிடாமல், அதைவிடக் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்குவது குற்றமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் பழங்குடியினர், பட்டியலினத்தோர், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோர் அடித்துக் கொல்லப்படுவது வெகுவாக அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் காங்கிரஸ், அதற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளே காரணம் என்றும் கூறியிருக்கிறது.
பா.ஜ.கவையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் தோற்கடிக்க வேண்டுமெனில் ஒழுக்கத்தோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் தேர்தல்கள் நடக்கவுள்ள ராஜஸ்தான், சட்டீஸ்கர், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மிஸோராம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலைவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறது.
சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் பா.ஜ.க. தனது கட்சியின் அடித்தளத்தை விரிவாக்கி வரும் நிலையில், தனது பாரம்பரிய ஆதரவாளர்களான சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோரை ஈர்க்க காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images
சமூகநீதி நெடுஞ்சாலையில் காங்கிரஸ் மாட்டு வண்டி
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, அதன் பயணத்தில் இதுவொரு குறிப்பிடத்தக்க மாற்றம். 1952ஆம் ஆண்டில் இட ஒதுக்கீட்டை அனுமதிக்கும் வகையில் செய்யப்பட்ட முதலாவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது என்றாலும்கூட, தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் மிகுந்த தயக்கத்துடனேயே செயல்பட்டது.
சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு சாதியை அளவுகோலாக ஏற்றுக்கொள்வதில் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த தயக்கம் இருந்து வந்தது. முதலாவது அரசமைப்பு சட்டத் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆராயவும் அதைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கவும் தத்தாத்ரேய பாலகிருஷ்ண கலேல்கர் என்பவர் தலைமையில் ஓர் ஆணையம் 1953இல் அமைக்கப்பட்டது.
முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்றும் கலேல்கர் ஆணையம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஆணையம் 1955இல் தனது பரிந்துரைகளை ஜவஹர்லால் நேருவிடம் சமர்ப்பித்தது. இந்தியா முழுவதும் 2,399 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் 837 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் இருப்பதாக இந்த ஆணையம் கூறியது.
இந்த சாதியினரிடம் கல்வியறிவு இல்லாமையே பின்தங்கிய தன்மைக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட ஆணையம், 6 வயது முதல் 14 வயது வரை கல்வியைக் கட்டாயமாக்க வேண்டுமென்று கூறியது.
தொழிற்கல்வி நிலையங்களில் 70 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் எனவும் இந்த ஆணையம் பரிந்துரைத்தது. பின்தங்கிய நிலையை அளவிட சாதியை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
ஆனால், இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த கலேல்கரே இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்களும் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆணையத்தின் பரிந்துரை மீதான அரசின் குறிப்பு 1956இல் அப்போதைய உள்துறை அமைச்சர் ஜி.பி. பந்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கலேல்கர் ஆணையத்தின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன.
சாதியை மட்டும் வைத்து பின்தங்கியவர்களை வரையறுக்க முடியாது என்று கூறிய மத்திய அரசு, மாநில அரசுகள் தங்களுக்கேற்ற அளவுகோல்களைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தது
இதற்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து அறிய எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், 1979ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணையத்தின் தலைவராக பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பி. மண்டல் நியமிக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு மண்டல் ஆணையம் தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது.
1931ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை வைத்து, இந்தியாவில் 52 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என இந்த ஆணையம் வரையறுத்தது.
ஏற்கெனவே பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு 22.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதாவது 52 சதவீத அளவுக்கு இட ஒதுக்கீடு அளித்தால், அது 50 சதவீதம் என்ற எல்லையைத் தாண்டிவிடும் என்பதால், வெறும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க ஆணையம் முடிவு செய்தது.
குடிமைப் பணி நியமனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அரசின் உதவியைப் பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்த இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நிதியால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டு விதி பொருந்தும் என்றது ஆணையம்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதுதான் இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்திரா காந்தியோ, அவருக்குப் பிறகு பிரதமரான ராஜீவ் காந்தியோ இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், 1990இல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, ஆணையத்தின் பரிந்துரையைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது.
1990 செப்டம்பரில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ராஜீவ் காந்தி, இதை எதிர்த்தே பேசினார். இருந்தபோதும், இதற்குப் பிறகு காங்கிரஸின் பார்வை மாற ஆரம்பித்தது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நரசிம்மராவ் பிரதமராக இருக்கும்போதுதான், மண்டல் கமிஷன் அறிக்கை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செயல்பாட்டிற்கு வந்தது. அப்போது வேலை வாய்ப்புகளில் மட்டும் இந்தப் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் கட்சியின் மனப்போக்கு மாறியது எப்படி?
மத்திய அரசில் மாநிலக் கட்சிகளின் பங்கேற்பு அதிகரிக்க ஆரம்பித்ததில் இருந்தே காங்கிரஸின் மனப்போக்கு சமூக நீதிப் பாதையை நோக்கி மாற ஆரம்பித்துவிட்டது என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் தொழிலாளர் சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளரான ஜி. கருணாநிதி.
"1980களுக்குப் பிறகு, மாநில கட்சிகளின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரிக்க ஆரம்பித்தது. 2004இல் மாநில கட்சிகளுடன் இணைந்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தபோது, கட்சியின் சிந்தனைப் போக்கு பெரிய அளவில் மாறியிருந்தது. 2007இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் அர்ஜுன் சிங் கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது கல்வி நிலையங்களிலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
மேலும், 2014இல் மோதி ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸ் தனித்து வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. தற்போது நாடாளுமன்ற செயல்பாடுகளுக்குப் பெரிதும் மாநில கட்சிகளையே சார்ந்திருக்கிறது காங்கிரஸ். தி.மு.க. ஆர்.ஜே.டி. போன்ற பெரும்பலான மாநில கட்சிகள், சமூக நீதிக் கொள்கையில் பிடிப்புள்ளவை. இதுபோன்ற மாநிலக் கட்சிகளுடன் தொடர்ந்து உரையாடல்களை நிகழ்த்தும்போது, அவற்றின் சிந்தனைப் போக்கு காங்கிரஸையும் பாதிக்கிறது.
இப்போது ராகுல் காந்தியே கூட்டாட்சி குறித்துப் பேசுகிறார். பட்டியலினத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே காங்கிரசின் தலைவர் பதவிக்கு வந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்குள் சமூக நீதி அரசியலைப் பேசுபவர்கள் வலுவடைய ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் இது," என்கிறார் ஜி. கருணாநிதி.
காங்கிரஸ் தனது தவறுகளை உணர்ந்து சரியான முடிவை எடுத்திருக்கிறது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார்.
"வரலாறு நெடுக சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினர் ஆகிய சமூகங்கள்தான் காங்கிரஸை உயர்த்திப் பிடித்து வந்தன. ஆனால், அவற்றின் கோரிக்கைகளையும் உணர்வுகளையும் காங்கிரஸ் தலைமை உதாசீனப்படுத்தியதால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. காங்கிரஸ் புத்துயிர் பெற வேண்டுமானால், இந்தப் பிரிவினரின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். இந்நிலையில் காங்கிரஸ் தனது தவறை உணர்ந்து, சரியான முடிவை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

பட மூலாதாரம், Getty Images
தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்பதற்காக 2004-2009ஆம் ஆண்டு ஐ.மு.கூ ஆட்சியில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், நடக்கவில்லை. இப்போது இது சரியான தருணம். காரணம், பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் மோதி அரசால் காலி செய்யப்பட்டுவிட்டன. அரசு வேலை வாய்ப்பு சுத்தமாக இல்லை. எனவே தனியார் துறையில் இட ஒதுக்கீட்டு என்பது முக்கியமானது," என்கிறார் து. ரவிக்குமார்.
ஆனால், சமூக தளத்தில் இந்த நடவடிக்கைகளைச் செய்வதோடு நிறுத்திவிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் ரவிக்குமார், அரசியல் தளத்தில் கூட்டாட்சி என்பதை ஒப்புக் கொள்கிறோம் என்பதையும் காங்கிரஸ் அறிவிக்கவேண்டும் என்கிறார்.
"இப்போது காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பது மாநிலக் கட்சிகள் தான். மாநில உரிமைகளை அங்கீரிக்க காங்கிரஸ் முன்வர வேண்டும். மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டவற்றை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவர வேண்டும்.
மத்திய - மாநில உறவுகள் குறித்த ராஜமன்னார், சர்க்காரியா, பூஞ்சி ஆணையங்களின் பரிந்துரைகளை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்க வேண்டும். பா.ஜ.கவுக்கு எதிர்நிலை என்பது, பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது மட்டுமல்ல; கொள்கை ரீதியாக எதிர்நிலை எடுக்கவேண்டும்," என்கிறார் அவர்.
காங்கிரசின் இந்த முடிவு, வரவிருக்கும் தேர்தல்களில் அந்தக் கட்சிக்கு உதவுமா? "நிச்சயமாக உதவும். பிற்படுத்தப்பட்டோருக்கும் நம்பிக்கை உண்டாகும். பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகளுக்கும் நம்பிக்கை உண்டாகும். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்," என்கிறார் கருணாநிதி. ரவிக்குமாரும் அந்தக் கருத்தையே எதிரொலிக்கிறார்.
ஆனால், நீதித்துறை நியமனங்கள், நீதிமன்றங்களே உருவாக்கும் கொலீஜியங்களால் செய்யப்படும் நிலையில், அவற்றில் இட ஒதுக்கீடு போன்ற மிகப் பெரிய மாற்றங்களை எந்த அளவுக்கு மத்திய அரசால் செய்ய முடியும்?
"நிச்சயம் செய்ய முடியும். உயர்மட்ட நீதித்துறையில் இட ஒதுக்கீடு கூடாது என அரசமைப்பு சட்டம் சொல்லவில்லை. ஒரு வலுவான அரசு நினைத்தால் சட்டம் இயற்றி அதைக் கண்டிப்பாகச் செய்ய முடியும். அதற்கு நீதிமன்றங்கள் தடைபோட்டால், அது மிகப் பெரிய அரசியல் பிரச்னையாக மாறிவிடும்," என்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.
தற்போதைய சூழலில் வழக்கறிஞர்களாக இருந்து, நீதிபதிகளாக உயர்த்தப்படுபவர்களில் பெரும்பலானவர்கள், உயர் சாதியினராக இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"பட்டியலினத்தைச் சேர்ந்தவரோ, வன்னியரோ இந்தப் பட்டியலில் இடம்பெறுவது மிக மிக அரிது. அப்படியிருக்கும்போது, இந்த மட்டத்திலும் இட ஒதுக்கீடு அவசியம். அதைச் செய்ய முடியும்" என்கிறார் ஹரி பரந்தாமன்.

பெரியார் முதல் கார்கே வரை
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த விவகாரத்தை முன்னிறுத்தி, பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினாரோ, 100 ஆண்டுகளுக்குப் பிறகு அதே விஷயத்தை தற்போது தீவிரமாக முன்வைக்க ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ்.
"தேசிய முன்னேற்றத்திற்கும் இந்து சமூகத்தாருக்குள்ளும் பரஸ்பர நம்பிக்கையும் துவேஷமின்மையும் ஏற்பட வேண்டுமாகையால் ராஜீய சபைகளிலும் பொது ஸ்தாபனங்களிலும் பிராமணர், பிராமணரல்லாதார், தீண்டாதார் எனக் கருதப்படுவோர் என்ற இம்மூன்று பிரிவினருக்கும் தனித்தனியாக பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்" என்ற தீர்மானத்தை 1919இல் இருந்தே எல்லா காங்கிரஸ் மாநாடுகளிலும் கொண்டு வருவதற்கு பெரியார் முயன்றார்.
1919இல் 25வது மாநாடு திருச்சியில் நடந்தபோது இந்த வகுப்புவாரி தீர்மானத்தை பெரியார் கொண்டு வந்தார். இதற்குப் பிறகு 1921, 22, 23, 24 ஆகிய ஆண்டுகளிலும் இதே தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 1925இல் காஞ்சிபுரத்தில் திரு.வி.க. தலைமையில் நடந்த மாநாட்டிலும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர முயன்றார் பெரியார். அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்படவே காங்கிரஸை விட்டு பெரியார் வெளியேறினார்.
இது நடந்து 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குள் சமூக நீதிச் சக்கரம் ஒரு முழுச் சுற்றை நிறைவு செய்திருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












