"விஜய், அஜித் இருவருமே சூப்பர் ஸ்டார் தான். ஆனால்..." - வாரிசு, துணிவு படங்கள் குறித்து நடிகர் மோகன்

விஜய் அஜித் இருவருமே சூப்பர் ஸ்டார் தான் - நடிகர் மோகன்

விஜய் அஜித் இருவருமே சூப்பர் ஸ்டார் தான். ஆனால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிகாந்துக்கே வழங்கப்பட்டது என நடிகர் மோகன் தெரிவித்துள்ளார்.

கோவை திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள நேரு கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட திரையரங்கம் திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு மினி திரையரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் திரைப்பட நடிகர் மோகனும் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் மோகன், திரைத்துறை தொடர்பாகப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் காட்சி தொடர்பியல் மாணவர்களுக்கு மல்டிபிளக்ஸ் திரையரங்கம் கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் கல்லூரி வளாகத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் என்பது இந்தியாவிலேயே முதல்முறை என்பது பாராட்டுக்குரியது எனவும் கல்லூரி நிர்வாகத்தைப் பாராட்டினார்.

பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள, அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்களில் எந்தப் படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு, துணிவு, வாரிசு எதற்கு முதல் டிக்கெட் கிடைக்கிறதோ அதைப் பார்ப்பேன் என்று மோகன் பதிலளித்தார்.

மேற்கொண்டு பேசியவர், "விஜய், அஜித் இருவரும் சூப்பர் ஸ்டார்கள் தான். ஆனால், ரஜினிக்குத்தான் 'சூப்பர் ஸ்டார்', அந்தப் பட்டம் அவருக்குத்தான் வழங்கப்பட்டது," எனத் தெரிவித்தார்.

மேலும் படத்தின் கதை இயக்கம் பிடித்தால் மட்டும் தான் படத்தில் நடிப்பேன் எனவும் தெரிவித்தார். தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சை குறித்த கேள்விக்கு, தனக்கும் அதற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார் நடிகர் மோகன்.

இதைத் தொடர்ந்து கல்லூரியின் மினி திரையரங்கு திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசியபோது, "ஹாரா திரைப்படத்தின் கதைக்களம் பிடித்ததால் தான் நடித்து வருவதாகவும் நாம் வாழும் நாட்டில் எல்லோருக்கும் அடிப்படை சட்டங்கள் தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும்" எனக் கூறினார் மோகன்.

மேலும், பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை சட்டங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டால் ஒவ்வொருவரும் எப்படி வாழ முடியும், எப்படி வாழ முடியாது என்பதைக் கற்றுக் கொண்டால் சமுதாயம் நன்றாக இருக்கும் எனவும் அதுதான் ஹாரா திரைபடத்தின் கதைக் கரு எனவும் கூறியதோடு, பள்ளி கல்லூரிகளில் அடிப்படை சட்டங்களைக் கற்றுக்கொள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார்.

தமிழ்நாடு- தமிழகம் தொடர்பாக எல்.முருகன் அளித்த விளக்கம்

இந்த நிகழ்ச்சியின்போது சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்திய சினிமா பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், 75வது சுதந்திர அமிர்தப் பெருவிழாவை கொண்டாடுகிறோம். தமிழ் சினிமா, சுதந்திரப் போராட்ட வீரர்கள் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்து பெருமை சேர்த்தது எனக் கூறினார்.

மேலும் சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில், 75 இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு அவர்களது படைப்புகள் உலக அளவில் கொண்டு செல்லப்பட்டது எனக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, "வெளிநாடுகளில் இருந்து திரைப்படம் எடுக்க வருபவர்களுக்கு மத்திய அரசாங்கம் சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கியுள்ளது. இன்று தென்னிந்திய திரைப்படங்கள் இந்தியாவைக் கடந்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.

வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு 3 கோடி வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆர்ஆர்ஆர், பாகுபலி போன்ற தென்னிந்திய படங்கள் இந்திய அளவில் கொண்டாடப்படுகின்றன. மொழிகளைக் கடந்து நல்ல கருத்து கொண்ட சினிமா மற்றும் தொழில்நுட்பம் என்பதால் அவை சர்வதேச அளவுக்கே சென்றுவிட்டன," என தெரிவித்தார்.

எல். முருகன்

மேலும் திரைப்படங்கள் எடுக்க அனுமதி பெற சிங்கிள் வின்டோ சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டவர்,படப்பிடிப்புக்கான அனுமதி எளிமையாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசு கருத்து சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது எனவும் தெரிவித்தார்.

"அரசியல் சார்ந்த திரைப்படங்களில் யாருக்கும் எந்த அழுத்தமும் கொடுப்பது கிடையாது. இது காங்கிரஸ் ஆட்சி மாதிரி இல்லை," என்றும் தெரிவித்தார்.

இதேபோன்று திரைப்படங்களுக்கு மொழிகள் பிரச்னை இல்லை. கதைக்கரு தான் முக்கியம். இன்றைய திரைப்படங்கள் இந்தியாவை சர்வதேச அளவுக்குக் கொண்டு செல்கின்றன" எனக்கூறிய எல்.முருகன், தொடர்ந்து திரையரங்களில் நடக்கும் வன்முறைகள் மாநிலத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு சம்பந்தமானது எனவும் தெரிவித்தார்.

"தமிழ்நாடு, தமிழகம் என்ற ஆளுநரின் கருத்து தொடர்பான கேள்விக்கு தமிழ்நாடு என்பது தமிழகம் என்று சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் தமிழகம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்," என்று விளக்கம் அளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: