கனடா, பிரிட்டனில் 'வாழ்க்கைத் துணை விசா' பெற புதிய விதிகள் அறிவிப்பு
கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் வாழ்க்கைத் துணைக்கான விசா பெறுவதற்கான விதிகளை கடுமையாக்குவதாக அறிவித்துள்ளன. இதனால், அந்நாடுகளில் பணிபுரிவோர் தங்களது வாழ்க்கைத் துணையை உடன் அழைத்துச் செல்வது இனி கடினமாகலாம்.
வாழ்க்கைத் துணை விசா என்பது ஒரு வகையான சார்பு விசா அல்லது அனுமதிப் பத்திரமாகும். இது உங்களை குறிப்பிட்ட அந்த நாட்டில் வாழ அனுமதிக்கிறது.
வாழ்க்கைத் துணை விசா என்றால் என்ன?
வாழ்க்கைத் துணை விசாவைப் பெற விண்ணப்பதாரர் மற்றும் சார்ந்திருப்பவர் இருவரும் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இது தவிர, இருவருக்கும் திருமண சான்றிதழ் இருக்க வேண்டும்.
கூடுதலாக, ஒவ்வொரு நாடும் தனது துணையை அழைத்துக் கொள்பவருக்கு (ஸ்பான்சர் பார்ட்னர்) குறைந்தபட்ச ஆண்டு வருமானத்தை நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் இதற்கு வெவ்வேறு அளவு உள்ளது. இது மாறுபடலாம்.
இது தவிர, ஸ்பான்சர் செய்யும் பார்ட்னர் தனது மனைவியுடன் வாழ போதுமான ஏற்பாடுகளை வைத்திருக்க வேண்டும்.
சார்ந்திருக்கும் துணைவர், அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழித் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுவதும் அவசியம்.
இதுதவிர, சம்பள சான்றிதழ், வங்கி விவரங்கள், செல்லுபடியாகும் பாஸ்போர்ட் ஆவணம், திருமணச் சான்றிதழ் ஆகியவை வாழ்க்கைத் துணை விசாவிற்கு தேவை. விவாகரத்து செய்திருந்தால், விவாகரத்து சான்றிதழ் மற்றும் குழந்தைகள் இருந்தால், அவர்களின் விவரங்களும் தேவை.
இங்கு ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதிகளின்படி ஆவணங்களை அளித்தல் வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
கனடா என்ன மாற்றங்களைச் செய்துள்ளது?
கனடாவில் வாழ்க்கைத் துணை விசாவிற்கு விண்ணப்பித்து பெற எட்டு-ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும். இருப்பினும், அது பின்னர் ஏழு மாதங்களாகவும் பின்னர் ஆறு மாதங்களாகவும் இறுதியாக இரண்டு மாதங்கள் என்றும் குறைக்கப்பட்டது.
சில சந்தர்ப்பங்களில் இந்த விசாக்கள் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படுகின்றன.
இருப்பினும், முதுநிலை அல்லது முனைவர் பட்டத்திற்கு படிக்கும் சர்வதேச மாணவர்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கைத் துணையை அழைக்க வாழ்க்கைத் துணை விசாவைப் பயன்படுத்த முடியும் என்று கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதற்கும் குறைந்த படிப்புகளில் படிக்கும் மாணவர்கள், இந்த விசாவில் தங்கள் வாழ்க்கைத் துணையை கனடாவுக்கு அழைக்க முடியாது.
கூடுதலாக, ஸ்பான்சர் செய்யும் பார்ட்னர், கனடா குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளராகவோ இருக்க வேண்டும். இயலாமை தவிர வேறு காரணங்களுக்காக அவர்கள் சமூக உதவியைப் பெறவில்லை என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.
அவர் தன் வாழ்க்கைத் துணையின் நிதித் தேவைகளை மூன்று வருடங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டன் என்ன மாற்றங்களைச் செய்துள்ளது?
பிபிசியின் செல்சியா வார்டு மற்றும் விக்டோரியா ஷியர் கூறுகையில், ஏப்ரல் 2024 முதல் தங்கள் விசா மூலம் வாழ்க்கைத் துணையை பிரிட்டனுக்கு அழைத்துக்கொள்ள விரும்புவோருக்கு ஊதிய விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, பிரிட்டனில் ஸ்பான்சர் பார்ட்னர், வாழ்க்கைத் துணை விசாவுக் விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச ஆண்டு வருமானம் 18,600 பவுண்டுகளாக இருந்தது. இருப்பினும், புதிய விதிகள் இந்த குறைந்தபட்ச ஆண்டு வருமானத்தை ஏப்ரல் 2024-ல் 29,000 பவுண்டுகளாகவும், ஆண்டின் இறுதியில் 34,500 பவுண்டுகளாகவும் அதிகரிக்கும். இந்த குறைந்தபட்ச வருமானம் இறுதியாக 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்படும்.
கூடுதல் விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



