You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: கொடூர சீரியல் கில்லரிடம் சிக்கிய இளம்பெண் உயிர் தப்பியது எப்படி? என்ன நடந்தது?
நீங்கள் கேத்தி க்ளீனர் ரூபினை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால், அவரைக் கொலை செய்ய முயன்றவர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவ்வுலகில் பல ஆபத்துகளில் இருந்து உயிர் பிழைத்தவர் என்று யாரேனும் கருடப்பட வேண்டுமென்றானல், அது கேத்தியாகத்தான் இருக்க முடியும்.
அவர் தனது 12 வயதில் லூபஸ் என்ற நாள்பட்ட ஆட்டோ இம்யூன் நோயால் (ஒருவரது நோய் எதிர்ப்பு அமைப்பு அவரது உடலையே தாக்கிக்கொள்ளும் நோய்) பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோது, தனது முதல் மரணத்தை எதிர்கொண்டார்.
குணமடைந்த பிறகு, 1978இல் ஃப்ளோரிடா மாகாண பல்கலைக் கழகத்தில் அவர் படித்துக்கொண்டிருந்த போது, ஒரு நாள் இரவு அவர் ஹாஸ்டலுக்குள் ஓர் அந்நியர் நுழைந்தார். அவர்தான் சீரியல் கில்லர் டெட் பண்டி.
அடுத்து நடந்த ஒரு பயங்கரமான தாக்குதலில் அவரது ஹாஸ்டல் அறை தோழிகள் இருவர் கொல்லப்பட்டனர். கேத்தியும் அவரது அறையில் இருந்த மற்றொரு தோழியும் படுகாயமடைந்தனர்.
அதற்குப் பிறகு, கேத்தி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்று மிகவும் உறுதியாக இருந்தார். அவர், தனது மகனுக்கு 37 வயதாகும் வரை, பண்டியால் தான் தாக்கப்பட்டதை வெளியில் சொல்லவில்லை.
கேத்தி தனது வாழ்க்கையைப் பற்றி எமிலி லு பியூ லுச்சேசியுடன் இணைந்து, 'A Light in the Dark: Surviving More than Ted Bundy' என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
பிபிசி உலக சேவையிடம் அவர் இந்த நிகழ்வுகள் குறித்துப் பேசினார்.
குழந்தைப் பருவத்திலேயே மரணத்தை எதிர்கொண்ட கேத்தி க்ளீனர் ரூபின்
கேத்தி க்ளீனர் ரூபின், அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில், ஒரு கியூபா நாட்டைச் சேர்ந்த தாய் மற்றும் ஒரு அமெரிக்க தந்தைக்குப் பிறந்தார். பல உறவினர்கள் சூழ வளர்ந்தார். அவருக்கு 5 வயதாக இருந்தபோது, அவரது தந்தை மாரடைப்பால் இறந்தார்.
இருப்பினும், அவரது தாயார் ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை மறுமணம் செய்து கொண்டார், அவருடன் கேத்தி நல்ல உறவைக் கொண்டிருந்தார். “அது நன்றாக இருந்தது. அவர் ஒரு சிறந்த தந்தை, நான் உண்மையில் அவரை சித்தப்பாவிற்கு பதிலாக அப்பா என்றுதான் அழைத்தேன்," என்றார்.
அவரது தாயார் மிகவும் கண்டிப்பானவராக இருந்தாலும், அவரது வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்தார். அவர் கேத்தி மற்றும் அவரது உடன்பிறப்புகளுக்கு வரம்புகளை விதித்தார், அதற்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. தாமதமாக வீட்டிற்கு வரக்கூடாது என்றும் அவர் கூறுவார்.
ஆனால் அவரது 12 வயதில், கேத்திக்கு திடீரென்று மர்மமான முறையில் உடல்நிலை சரியில்லாமல் போனது. "அது எனது ஆறாம் வகுப்பின் முடிவில் நடந்தது, நான் சோம்பலாகவும் சோர்வாகவும் உணர்ந்தேன், நான் எதுவும் செய்ய விரும்பவில்லை," என்றார் அவர்.
பள்ளி முடிந்து காய்ச்சலுடன் வீட்டிற்குச் சென்று உறங்கி விடுவார். ஒரு குழந்தை மருத்துவர் அவரை மியாமி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரைத்தார். அங்கு அவர் மூன்று மாதங்கள் இருந்தார். ஆனால் மருத்துவர்களால் அவருக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியவில்லை.
அவர் உடலை ஏதோ நோய் தாக்கியுள்ளது அவர்களுக்குத் தெரியும், ஆனால் அவருக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை. அவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர், ஏனென்றால் அவர் இன்னும் எவ்வளவு காலம் வாழ்வார் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
கேத்திக்கு லூபஸ் எனப்படும் குணப்படுத்த முடியாத நோய் இருந்தது, இந்த நோய் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான திசுக்களைத் தாக்குகிறது. அந்த நேரத்தில், பரிசோதனை கட்டத்தில் இருந்த சிகிச்சையின் மூலம் அறிகுறிகளை மட்டுமே கட்டுப்படுத்த முடிந்தது. கீமோதெரபியை முயற்சி செய்ய அவரது மருத்துவர் பரிந்துரைத்தார், ஆனால், அது 12 வயது சிறுமிக்கு மிகவும் கடினம்.
கேத்தி க்ளீனர் ரூபினின் தனிமையான வாழ்க்கை
"என் தலைமுடி உதிர ஆரம்பித்தது, நான் வழுக்கை ஆனேன்," என்று அவர் கூறுகிறார். "நான் ஏழாம் வகுப்பில் இருந்தேன், ஒரு ஆசிரியருடன் வீட்டிற்குச் சென்றேன். என்னால் ஜன்னலுக்கு வெளியே மற்ற குழந்தைகள் விளையாடுவதை பார்க்க மட்டுமே முடிந்தது," என்றார்.
அவர் மிகவும் தனியாக உணர்ந்தார். சில சமயங்களில் தொலைபெசி ஆபரேட்டரை அழைத்த்உப் பேசுவார். படுக்கையில் நிறைய நேரம் செலவிட வேண்டியிருந்தாலும், அவரது பெற்றோர் வீட்டிற்கு வருவதற்கு முன்பு, அவர் நல்ல ஆடை அணிந்து, எல்லாம் சரியாகிவிட்டது என்பதுபோல தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்.
ஆண்டின் இறுதியில், அவர் மேம்படத் தொடங்கினார். மருத்துவர்களின் ஒப்புதலுடன் அவர் தனது வழக்கத்தை இயல்பாக்கத் தொடங்கினார். "நான் வாழ்க்கையை வாழ விரும்பினேன். நான் லூபஸ் நோயிலிருந்து வெளியேறப் போகிறேன். மீண்டும் பள்ளிக்குச் சென்று, பெண்ணாக இருந்து ஷாப்பிங் செல்ல வேண்டிய நேரம் இது, என்று சொல்லிக்கொண்டேன்," என்றார் அவர்.
புதிய பல்கலைக்கழகத்தில் புதிய வாழ்க்கை
உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, அவர் கெயின்ஸ்வில்லில் உள்ள புளோரிடா ஸ்டேட் யுனிவர்சிட்டிக்கு(எப்.எஸ்.யூ) (FSU) செல்லத் தேர்வு செய்தார். இது "மியாமியில் இருந்து வெகு தொலைவில் உள்ள வளாகமாகும், அங்கு அவர் குடியிருப்பாளராக இருப்பதற்காக சலுகைகள் பெற முடியும்" என்று அவர் ஒப்புக்கொண்டார்.
"நான் பார்ட்டிகளுக்குச் சென்று கொஞ்சம் படிக்கவும், புதிய நண்பர்களை உருவாக்கவும், கல்லூரிக்குச் செல்லும்போது ஒரு புதிய மாணவி என்ன செய்கிறாள் என்பதை அனுபவிக்கவும் விரும்பினேன்," என்றார்.
கேத்தி பல்கலைக்கழகத்தில் முதல் வருடம் சிறப்பாகப் படித்தார். மேலும், பெண்களுக்கான சமூகக் கழகமான சமூகக் குழுவில் சேர அழைக்கப்பட்டதால், அவர் உற்சாகமடைந்தார்.
பாதுகாப்பான வீடு, ஆனால்…
அந்தக் கழகத்தினருக்கான தங்கிமிடம் ஒரு மாளிகைபோல இருந்தது, என்கிறார் அவர். "அது ஒரு பெரிய வீடு. எங்களுக்கென ஒரு உணவுகூடம், ஒரு பெரிய அறை, மற்றும் ஒரு பெரிய படுக்கை மற்றும் டிவி கொண்ட ஒரு அறை இருந்தது," என்று அவர் விவரிக்கிறார்.
"அழகான செதுக்கப்பட்ட மரத்தால் செய்யப்பட்ட படிக்கட்டு இருந்தது, அது ஒரு ஹால்வேக்கு வழிவகுத்தது, அங்கு சுமார் 30 படுக்கையறைகள் இருந்தன," என்கிறார்.
அவர் தனது ‘சகோதரிகளில்’ ஒருவருடன் பகிர்ந்து கொண்ட அவரது படுக்கையறையில், வீட்டின் வாகன நிறுத்துமிடத்தைக் காணும் ஜன்னல்கள் இருந்தன. "அந்த ஜன்னல்கள் வழியாக சூரியன் வரும்போது மிகவும் பிரகாசமாகவும் அழகாகவும் இருந்தது. அறை எப்போதும் ஒளிரும் வகையில் திரைச்சீலைகளைத் திறந்து வைக்க முடிவு செய்தோம்," என்றார்
முன் கதவின் உடைந்த பூட்டைத் தவிர, அது மகிழ்ச்சியான பாதுகாப்பான இடமாக இருந்தது.
அந்த நேரத்தில், நாடு முழுவதும், குறிப்பாக மேற்கு கடற்கரையில் பல மாநிலங்களில் பெண்களின் தொடர் கொலைகளால் அமெரிக்கா அச்சத்தில் இருந்தது. அந்த சீரியல் கில்லர் ‘டெட் பண்டி’ என்று பின்னர் அடையாளம் காணப்பட்டார்.
ஆனால், இவை அனைத்தும் புளோரிடாவில் கேத்தியின் அமைதியான உற்சாகமான வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் நடந்தன. மேலும் அவருக்கு ஜனவரி 14, 1978 இரவு வரை நாட்டின் மறுபுறத்தில் என்ன நடக்கிறது, டெட் பண்டி யார் என்று கூட தெரிந்திருக்கவில்லை.
அந்த சனிக்கிழமை, கேத்தி தனக்குத் தெரிந்த ஒரு ஜோடியின் திருமணத்தில் மற்றவர்களுடன் கலந்து கொண்டார். திருமண வரவேற்பு முடிந்ததும், அடுத்த திங்கட்கிழமை தனக்கு ஒரு தேர்வு இருந்தது. அதனால் அவர் படுக்கையறைக்குத் திரும்பினார். அங்கு அவருடைய அறைத் தோழியும் படித்துக்கொண்டிருந்தார்.
இரவு 11.30 மணியளவில் தூங்கச் சென்றனர். சில மணிநேரம் கழித்து, பூட்டு உடைக்கப்பட்ட கதவு வழியாக ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து படிக்கட்டுகளில் ஏறினார். நுழைவு வாயிலில் கிடைத்த ஒரு கட்டையைக் கையில் வைத்துக்கொண்டு படுக்கையறையின் தரையை சுற்றிப் பார்த்தார்.
அவர் அங்கு வசித்த மார்கரெட் போமன் என்ற மற்றொரு பெண்ணின் அறைக்குள் நுழைந்தார், "அவர் அவளை மரக்கட்டையால் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொன்றார்," என்று கேத்தி கூறுகிறார்.
பின்னர் அவர் லிசா லெவியின் என்ற பெண்ணின் அறைக்குச் சென்றார். அவர் கதவைத் திறந்து வைத்திருந்தார். அதே கட்டையால் அவளையும் அடித்து, பல்லால் கடித்துக் கொன்றார். "கடிப்பது கைரேகைகள் விட்டுச் செல்வது போன்றது," என்று கேத்தி குறிப்பிடுகிறார். கொலையாளியை பிற்காலத்தில் அடையாளம் காண இந்தப் பற்களின் அடையாளங்கள் முக்கியமானவை.
கொலையாளி ஹால்வேயை கடந்து, கேத்தியும் அவளுடைய தோழியும் தூங்கும் அறைக்குள் சத்தமின்றி நுழைந்தார். இருப்பினும், கதவு கம்பளத்துடன் உரசும் சத்தம் அவரை எழுப்பியது.
"நான் படுக்கையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் என் படுக்கைக்கு அருகில் ஒருவரின் நிழலைக் கண்டேன். நான் பார்த்தபோது, அவர் தலைக்கு மேல் கையை உயர்த்தி, அக்கையில் ஒரு மரக்கட்டை வைத்திருந்தார்,” என்று நினைவு கூர்ந்தார்.
அவர் மார்கரெட் மற்றும் லிசாவை கொன்ற அதே நபர்தான். அவர் கேத்தியின் முகத்தில் பலமாக தாக்கியதால் அவரது தாடை மூன்று இடங்களில் உடைந்தது. கேத்தி கத்த முயன்றார். ஆனால் அவரது வாயை கொலையாளி பிளந்திருந்ததால் அவளால் கத்த முடியவில்லை.
கொலையாளி, கேத்தியை மீண்டும் கொல்ல முயன்றான். ஆனால் மரக்கட்டையை உயர்த்தியபோது, திறந்த ஜன்னல் திரை வழியாக வந்த ஒரு பிரகாசமான ஒளி முழு அறையையும் நிரப்பியது. தாக்கியவன் ஒரு கணம் தயங்கி, படுக்கையறையை விட்டு வெளியே ஓடி, படிக்கட்டுகள் வழியாக இறங்கி, முன் கதவு வழியாக ஓடி மறைந்தான்.
இதற்கிடையில், காயம்பட்டிருந்த கேத்தி உதவி நாட எழுந்தார். "நான் என் முகத்தில் கத்தியால் குத்தப்பட்டதைப் போல உணர்ந்தேன். நான் என் கன்னத்தைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது." அவரது முகம் ரத்தம் தோய்ந்திருப்பதை அவரது தோழர்கள் பார்த்தார்கள், அவர்களில் ஒருவர் அவசர எண்ணுக்கு அழைத்தார்.
"அவர்கள் என்னை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து மரப் படிக்கட்டுகளில் இருந்து கீழே அழைத்துச் சென்றனர்," என்று கேத்தி நினைவு கூர்ந்தார்.
"போலீஸ் வாகனத்தின் விளக்குகள், தீயணைப்பு வண்டியின் சிவப்பு விளக்குகள், ஆம்புலன்ஸின் சிவப்பு மற்றும் வெள்ளை விளக்குகள் மற்றும் போலீஸ் ரேடியோக்களின் சத்தம் ஆகியவற்றை என்னால் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. என் மனதில் நான் ஒரு விழாவில் இருப்பது போல் தோன்றியது," என்றார்.
அவரது காயங்களுக்கு சிகிச்சை அளித்து ரத்தப்போக்கை நிறுத்தினார்கள். பின்னர் அவர் நேராக அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது தாடையில் ஒரு கம்பி பொருத்தப்பட்டு, ஆறு வாரங்கள் மருத்துவமனையில் அவருக்கு குழாய் மூலம் உணவளிக்க வேண்டியிருந்தது.
விசாரணையில் என்ன நடந்தது?
கேத்திக்கு பயங்கரமான காயங்கள் இருந்தபோதிலும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குணமடைவதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் முதலில், ஜூலை 1979இல் விசாரணையில் தன்னைத் தாக்கியவரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மார்கரெட் போமன் மற்றும் லிசா லெவியை கொன்று, கேத்தியையும் அவளது அறைத் தோழியையும் கடுமையாகக் காயப்படுத்திய சிறிது நேரத்திற்குப் பிறகு, டெட் பண்டி மத்திய புளோரிடாவுக்கு சென்றார்.
அங்கு அவர் கிம்பர்லி லீச் என்ற 12 வயது பள்ளிச் சிறுமியைக் கடத்திச் சென்று கொன்றார். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, அவர் இறுதியாக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இரண்டு கொலைகள் மற்றும் மூன்று கொலை முயற்சிகளில் டெட் பண்டியை குற்றவாளியாகக் கண்டறிய ஜூரிக்கு ஏழு மணிநேரத்திற்கும் குறைவான நேரமே தேவைப்பட்டது. பின்னர், அவர் மற்ற குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாள் என்ன நடந்தது?
டெட் பண்டிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆனது. அந்த நேரத்தில் கேத்தி திருமணம் செய்துகொண்டார், அவருக்கு மைக்கேல் என்றொரு மகன் பிறந்தார். அதன் பிறகு முதல் கணவரை விவாகரத்து செய்து, அவரது தற்போதைய கணவர் ஸ்காட்டை மணந்தார்.
ஜனவரி 1989இல் புளோரிடாவில் மின்சார நாற்காலியில் அமர வைகப்பட்டு பண்டி கொல்லப்பட்டார். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைக் காண்பற்கான அழைப்பை கேத்தி நிராகரித்தார். ஆனால் தனது கணவரோடு அவரது வீட்டில் இருந்து தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தார்.
"சிறைக்கு முன்னால் வெள்ளை சவப்பெட்டி செல்வதை நான் பார்க்கும் வரை நான் அதை நம்பவில்லை," என்று அவர் கூறுகிறார். "நான் அழ ஆரம்பித்தேன், நான் அழுதேன், அழுதேன், அவனால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும், அவன் கொன்று எங்களிடமிருந்து பறித்த அனைத்து பெண்களுக்காகவும் நான் அழுதேன்," என்கிறார்.
இயல்பு நிலைக்குத் திரும்பியது எப்படி?
டெட் பண்டி இனி வேறு யாரையும் காயப்படுத்தப் போவதில்லை என்பதை அறிந்தது, கேத்திக்கு நிம்மதியாக இருந்தது. பல ஆண்டுகளாக இந்தத் தாக்குதல் பற்றி அமைதியாக இருந்த கேத்தி, இயல்பு நிலைக்குத் திரும்ப விரும்பினார்.
தனக்கு 37 வயதாகும் வரை கொலையாளியால் தான் காயப்பட்டதை தனது மகன் மைக்கேலுக்கு அவர் சொல்லவில்லை. கேத்தி இறுதியாக ரோலிங் ஸ்டோன் பத்திரிகைக்கு ஒரு நேர்காணல் வழங்கிய பிறகுதான் மைக்கேல் அதைப் படித்தார்.
'அம்மா, இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கவலைப்படாதீர்கள், நீங்கள் எங்கள் அனைவரையும் போலவே மிகவும் சாதாரணமானவர்,’ என்று அவர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.
‘எங்கள் அனைவரையும் போலவே சாதாரணமானவர்’ என்ற வார்த்தை கேத்தியை ஆசுவாசப்படுத்தியது. பண்டியால் தனக்கு என்ன நடந்தது என்று அவர் உணர்ந்தார். அவர் சாதாரணமாக இருக்க விரும்பினார். அவரது மகனிடம் மட்டுமல்ல, மொத்த குடும்பத்திற்கும் அவர் சாதாரணமானவராக இருக்க விரும்பினார்.
கேத்தி அமெரிக்க வரலாற்றில் மிகவும் இரக்கமற்ற கொலையாளிகளில் ஒருவரிடம் இருந்து தப்பியவர் மட்டுமல்ல. அவர் 12 வயதில் லூபஸ் மற்றும் 34 வயதில் மார்பக புற்றுநோயில் இருந்தும் தப்பியவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)