You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வள்ளிக்கும்மி vs ஸ்பீடு டேட் - கொங்கு மண்டலத்தில் என்ன நடக்கிறது?
- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் சாதிய அமைப்புகள் மணமகன் – மணமகள் கூட்டம், வள்ளி கும்மி நிகழ்ச்சி நடத்தப்படுவதுடன், காதலர் தினத்துக்கு எதிர்ப்பும் நிலவுகிறது. இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், காதலர்களுக்கு ஆதரவாகவும் ‘ஸ்பீடு டேட்’ போன்றவை நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தில் உள்ள ஈரோட்டில் அண்மையில் நடந்த வள்ளிக்கும்மி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அருகே உள்ள கோவையில் ஸ்பீடு டேட் நடந்துள்ளது. ‘ஸ்பீடு டேட்’ என்றால் என்ன?
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும், பிப்ரவரி 14 காதலர் தினத்துக்கு வலதுசாரி சிந்தனையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அத்துடன், காதலர் தினம் கொண்டாடுவோரை தாலி கட்டி திருமணம் செய்ய வற்புறுத்துவதும், காதலர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து வருகிறது.
பஜ்ரங் தளம், இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஏ.பி.வி.பி அமைப்பு போன்ற வலதுசாரி அமைப்புகள், காதலர் தினத்தை எதிர்த்து வருகின்றனர்.
இந்திய விலங்குகள் நல வாரியம் சில மாதங்களுக்கு முன்பாக பிப்ரவரி 14ம் தேதியை ‘பசு அரவணைப்பு’ தினமாக கொண்டாடப்படுமென அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து உத்தரவை திரும்பப் பெற்றது.
முன்பு மத ரீதியிலான எதிர்ப்புகள் இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக, சாதி ரீதியான அமைப்புகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
வள்ளிக்கும்மி – திருமண சந்திப்புக் கூட்டம்!
தமிழகத்தை பொருத்தவரையில், சாதி மறுப்பு காதல் திருமணத்தை கடுமையாக எதிர்க்கும் சாதிய அமைப்புகள், தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களுக்காக மணமக்கள், மணமகன் தேர்வு செய்ய பிரத்தியேக திருமண சந்திப்புக் கூட்டங்களை நடத்துகின்றனர்.
ஈரோட்டில் நடைபெற்ற வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில் கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சியின் பொருளாளர் கே.கே.சி.பாலு, தங்கள் சாதி ஆணையே திருமணம் செய்து கொள்வோம் என்று கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களிடம் உறுதிமொழி வாங்கிய நிகழ்வும் நடந்தது.
கேரளாவின் ‘அன்பின் முத்தம்’ போராட்டம்!
இப்படியான நிலையில், மதம், சாதியம் என எங்கு பார்த்தாலும் தங்களுக்கு எதிர்ப்பு நிலவுவதாக, காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள் குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். தங்கள் மீதான எதிர்ப்புகளை களைந்து காதல் – அன்பை வளர்ப்பதாகக் கூறி இவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 2014ல், ‘கிஸ் ஆப் லவ் – அன்பின் முத்தம்’ என்ற பெயரில், பேஸ்புக் சமூக வலைதளம் வாயிலாக இணைந்த காதலர்கள் போராட்டம் நடத்தினர். காதலுக்கும், காதலர் தினத்துக்கும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டித்த இவர்கள், வீதியில் இறங்கி தங்களுக்குள் முத்தம் கொடுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். முன்பு கேரளாவில் துவங்கிய இந்தப் போராட்டம் பின்பு நாடு முழுவதிலும் பல இடங்களில் நடந்தது.
‘ஸ்பீடு டேட்’ என்றால் என்ன?
தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், சமூக வலைதளங்கள் வாயிலாக தற்போது புதுப்புது வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, காதலர்களை இணைப்பது, சமூக தொடர்பை விரிவுபடுத்துவதாக் கூறி ‘ஸ்பீடு டேட்’ என்பதை கையில் எடுத்துள்ளனர்.
அறிமுகம் இல்லாத நபர்கள் ஒன்று கூடி அங்கு ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவது, கூட்டமாக சிலவற்றை விவாதிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, உணவு மற்றும் டீ அருந்துவது போன்றவை ‘ஸ்பீடு டேட்’ நிகழ்ச்சியின் செயல்பாடுகள் என்கிறார்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள்.
அதேபோல், முன்பு அறிமுகம் இல்லாதவர்களுடன் டீ குடிப்பது (டீ டேட்), கண்களை கட்டிக்கொண்டு புதிய நபர்களுடன் பேசுவது (பிளைண்டு டேட்), ஓவியம் வரைவதென பலவகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இது போன்ற நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்து வந்த நிலையில், தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூரு, சென்னை, புதுச்சேரியில் அதிக அளவில் நடத்தப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக கோவையிலும் நடத்தப்பட்டுள்ளது. மதம் மற்றும் சாதிய அமைப்புகளை கண்டித்து காதலர் தினத்தை கொண்டாடும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
‘கலாசாரத்துக்கு எதிரானது’
‘ஒரு பக்கம் வள்ளிக்கும்மி பயிற்சி, பெண்களுக்கு அறிவுரை கொடுக்கப்படுகிறது, மறுபக்கம் ‘ஸ்பீடு டேட்’ நிகழ்ச்சிகள் பெருகி வருகிறது. உங்கள் கருத்து என்ன?’ என்ற கேள்வியை, பிபிசி தமிழ் கொங்கு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் முன்வைத்தது.
பிபிசி தமிழிடம் பேசிய ஈஸ்வரன், ‘‘இந்தியாவில் பலதரப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை, பாரம்பரியம், கலாசாரம் இருக்கும். யார் மீதாவது எதையும் வற்புறுத்தி திணிப்பது தான் தவறே தவிர, பிள்ளைகளுக்கு அறிவுரைகள் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை,’’ என்கிறார்.
மேலும் தொடர்ந்த அவர், ‘‘என்னைப் பொருத்தவரையில் ‘ஸ்பீடு டேட்’ போன்ற விஷயங்கள் எல்லாம் நம் கலாசாரத்துக்கு எதிரானது. இதுபோன்ற பெயரில் தவறுகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. ’ஸ்பீடு டேட்’ போன்றவை தமிழகத்தில் எங்காவது ஒரு பகுதியில் சிறிய அளவில் நடப்பதாகவே நினைக்கிறேன், பெரிய அளவில் நடப்பதாக நான் கேள்விப்படவில்லை. இதை பெரிதுபடுத்தி பிரபலமாக்க தேவையில்லை என நினைக்கிறேன்,’’ என்கிறார் ஈஸ்வரன்.
‘கலாசார சீர்கேடு – கடுமையாக கண்டிக்கிறோம்’
‘ஸ்பீடு டேட்’ தொடர்பாக கடுமையான விமர்சனத்தையும், கண்டனத்தையும் முன்வைக்கிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘அன்பை பகிர ரக்ஷாபந்தன் போன்ற தினங்கள் உள்ள நிலையில் காதலர் தினமே தேவையில்லாத ஒன்று தான். இதையே நாங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறோம். தற்போது, ‘ஸ்பீடு டேட்’ போன்றவற்றின் மூலம் நமது பாரதத்தின் கலாசாரம், பாரம்பரியம், குடும்ப முறையை அழிக்கும் முயற்சியை செய்து வருகின்றனர்; இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், இது செய்யக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
இந்த ‘ஸ்பீடு டேட்’, ‘ஹாப்பி ஸ்டிரீட்’ போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மேற்கத்திய கலாசாரத்தை சேர்ந்தவை, இவை நம் கலாசாரத்தை சீரழிக்கிறது, இந்த நிகழ்ச்சிகளில் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்றனர். யாரென்றே தெரியாதவர்களை சந்திப்பது, மது குடிப்பது, டீ குடிப்பது எல்லாம் சீர்கெடுவதற்கான முயற்சி தான்,’’ என்கிறார் அர்ஜூன் சம்பத்.
‘நோக்கம் மாறாமல் இருந்தால் நல்லது’
‘ஸ்பீடு டேட்’ தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், ‘‘சாதியம், மதம் தொடர்பான எதிர்ப்புகளை மீறி அன்பை பகிர ‘ஸ்பீடு டேட்’ போன்றவை நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது.
ஆனால், அதேசமயம் இந்த நிகழ்ச்சிகளின் நோக்கம் மாறாமல், ஒழுக்கத்துடன் நடத்தப்பட்டால் தான் நல்லது. ஏனெனில் சாதிய, மத ஆதரவாளர்கள் தெரிவிப்பது போன்ற பிரச்னைகள் எழாமல் இருக்க வேண்டும், எழாமல் இருந்தால் நிச்சயம் வரவேற்கத்தக்கது தான்,’’ என்றார் சுருக்கமாக.
‘இது சமூக தொடர்பை விரிவுபடுத்துகிறது’
பிபிசி தமிழிடம் பேசிய, ’ஸ்பீடு டேட்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பெயர் தெரிவிக்க விரும்பாத ஐ.டி நிறுவன ஊழியர் ஒருவர், ’’தொழில்நுட்பம் வளருகிறது, எல்லாம் மாறுகிறது, உலகமே மிகவும் சிறிதாகிவிட்டது. ஆனால், இன்னமும் சாதி, மதம் என்று கூறி காதலர்களை அடிப்பது, துன்புறுத்துவது, காதலை எதிர்ப்பது எல்லாம் நடந்து வருகிறது. இது போன்ற பிரச்னைகளை களையவும், சமூக தொடர்பை அதிகரிக்கவும் தான் காதலர் தினத்தை முன்னிட்டு, பல நகரங்களில் ஸ்பீடு டேட் நடத்தப்படுகிறது.
‘ஸ்பீடு டேட்’ காதலர்களுக்காக மட்டுமே நடத்தப்படுவதாகவும் கருதக்கூடாது. இங்கு பலரும் நட்பாகின்றனர். வாழ்வில் அடுத்த கட்ட நகர்வைப் பெறுகின்றனர், தங்களுக்குள் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு குறித்தும் விவாதிக்கின்றனர்,’’ என்கிறார் அவர்.
‘ஸ்பீடு டேட்’ போல பல நிகழ்ச்சிகள் நடப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
‘டேட் என்றாலே தவறா?’
மேலும் தொடர்ந்த அவர், ‘நாடு முழுவதிலும் ‘ஸ்பீடு டேட்’ போல, பெற்றோர்களுடன் வந்து விளையாடி மகிழ ‘பிளே டேட் வித் பேரன்ட்ஸ் டேட்’, படங்கள் வரைந்து திறமையை வெளிப்படுத்த ‘ஆர்ட் டேட்’, பாட்டு பாடி திறமையை வளர்க்க ‘மியூசிக் டேட்’, ஏன் ‘புத்தக டேட்’ வரையில் பல தலைப்புகளில் நடத்தப்படுகிறது. ‘டேட்’ என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதை அனைவரையும் கைவிட வேண்டும்,’’ என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)