இந்தியாவிடம் இருந்து அண்டை நாடுகள் விலகிச் செல்கின்றனவா?
இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து மொத்த உலகிற்கும் தெரியும். ஆனால், 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன துருப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டபோது, இவ்விரு நாடுகளுக்கு இடையேயான உறவிலும் அது முட்டுக்கட்டையாக மாறியது. இதுபோக, இந்தியாவின் நான்கு அண்டை நாடுகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த சில விஷயங்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு சவாலாக அமைந்தன.
இந்தியாவுக்கு அதன் அண்டைநாடுகளுக்கும் இடையேயான உறவு எப்படி உள்ளது? அங்கு நிலவும் நிலையற்ற தன்மை இந்தியாவை எவ்வாறு பாதிக்கிறது? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
நரேந்திர மோதி இந்தியாவின் பிதமராக பதவியேற்ற பிறகு 2014-ல் நேபாளுக்கும், 2015-ம் ஆண்டு இலங்கை, வங்கதேசத்துக்கும் முதல்முறையாக சென்றபோது அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றார். 2016-ல் மாலத்தீவுக்கு சென்றார், பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் 2019ல் இந்தியாவுக்கு வந்தார். இதுவரை, அனைத்துமே நன்றாகவே சென்றது. ஆனால், 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட சம்பவத்துக்கு பிறகு இருநாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த முடியவில்லை.
கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோதியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்தனர். இதற்கு அடுத்த வாரமே தங்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தை சீனா வெளியிட்டது. அதில், அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்திருந்தது. நடப்பாண்டில் கூட அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில் உள்ள 30 பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றியிருக்கிறது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவின் முயற்சியை நிராகரிப்பதாகவும், கற்பனை பெயர்களை பயன்படுத்துவது அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதை எந்தவகையிலும் மாற்றப்போவதில்லை என அறிவித்தது.
எனினும், தனது எல்லை விரிவாக்க கொள்கையை சீனா தொடர்ந்து பின்பற்றி வருகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து அண்டை நாடுகளின் உள்கட்டமைப்பிலும் சீனா அதிக அளவில் முதலீடு செய்து அந்நாடுகளுக்கு கடன்களையும் வழங்கியுள்ளது.
‘ அண்டை நாடுகள் முதன்மையானவை’ என்பதை தனது பேச்சுகளில் பலமுறை மோதி குறிப்பிட்டுள்ளார். அதிகரித்துவரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் ஒரு உத்தியாக இது பார்க்கப்பட்டது.
2021 இல், ஆங் சான் சூச்சியின் ஜனநாயக அரசாங்கம் ராணுவத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதற்கு பின் ராணுவத்துக்கு எதிராகவும் கிளர்ச்சி தொடங்கியது. இன்றும் மியான்மரில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமான ஏராளமான மக்கள் அகதிகளாக இந்தியாவின் மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு வந்துள்ளனர்.
மியான்மரின் தற்போதைய சூழலால், இந்தியாவின் கலாதன் (Kaladan) பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டமும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் வட கிழக்கு பகுதிகளில் இருந்து சரக்குகள் மியான்மரை கடல்வழியாக அடைவதற்கு வழிவகை செய்கிறது. 2008ல் இந்தியாவும் மியான்மரும் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த திட்டம் இந்தியாவின் வடகிழக்கு பகுதிக்கு மிகவும் முக்கியமானது. தற்போது வடகிழக்கில் பொருட்கள் உள்ளே வருவதும் வெளியே செல்வதும் சிலிகுரி காரிடார் வழியே தான். இதற்கான செலவு அதிகம்.
கலாதன் திட்டம் நிறைவடைந்தால், வடகிழக்கு பகுதிகள் கடலை அணுகுவதற்கு புதிய மற்றும் செலவு குறைந்த ஒரு வழி கிடைக்கும். ஆனால், சீனாவும் தனது இருப்பை இங்கு அதிகப்படுத்தியுள்ளது. ஆழ்கடல் துறைமுகத்தை அமைப்பதற்கு மியான்மர் ராணுவத்துடன் சீனாவும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவை விட சீனாவுடனான மியான்மரின் பொருளாதார உறவுகள் வலுவானவை. மியான்மரின் ஆளும் அரசுடன் இந்தியாவின் உறவு நன்றாக இருப்பதாகவும் கூற முடியாது.
ஆப்கானிஸ்தானும் 2021-ல் மாற்றத்தை கண்டது. அமெரிக்க படைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு தாலிபன் ஆட்சியை கைப்பற்றினர். அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. தாலிபனுடன் இந்தியா முழுமையான தூதரக உறவை ஏற்படுத்தவில்லை. ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்ட பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தற்போது நிச்சயமற்றவையாக உள்ளது.
மற்றொரு அண்டை நாடான இலங்கை 2022-ல் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை போன்றவை காரணமாக மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் நாட்டைவிட்டே வெளியேறினர். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா உதவியது. கடந்த ஆண்டு, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அபேவர்தன இந்தியாவுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு பின், இந்தியா ஒரு பழைய சர்ச்சையை மீண்டும் கிளப்பியது. தனது தேர்தல் உரையில் கச்சத்தீவு பிரச்னையை பிரதமர் மோதி எழுப்பியதையடுத்து, இலங்கையின் அதிகாரிகள் பலர் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
மேலும், இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் அரசியல் செய்யும் தலைவர்களுக்கு, ‘இந்தியாவை நம்பலாமா’ என கேள்வி கேட்பதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்தது. இலங்கையில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியா குறித்த புதிய அரசாங்கத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பதை காலம்தான் கூறும்.
2023-ல் மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தார். அதன்பின்னர், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்ற பிரச்சாரத்தை அவர் முன்னெடுத்தார். சீனாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்ட முய்சு வர்த்தகம், சுகாதாரம் மற்றும் உணவு இறக்குமதி போன்றவற்றுக்கு இந்தியாவை சார்ந்திருப்பதை குறைத்துக்கொண்டார். மாலத்தீவில் கடற்படை தளம் ஒன்றை உருவாக்க சீனா விரும்புகிறது. இது இந்தியாவுக்கு கவலைக்குரியதாக இருக்கலாம்.
நேபாளத்தில் 2015-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டபோது, நேபாளத்தின் மீது இந்தியா சத்தமே இல்லாமல் ‘பொருளாதார தடையை’ விதித்ததாக அங்குள்ள அரசாங்கம் குற்றம் சாட்டியது. இதற்குப் பிறகு, நேபாளத்தின் பொது மக்களும் இந்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்தனர்.இதற்கிடையே, இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே எல்லைப் பிரச்னையும் எழுந்துள்ளது. தற்போது நேபாளத்தில், சீனாவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் KP Sharma Oli ஆட்சியில் இருக்கிறார்.
சமீபத்தில், வங்கதேசத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவும் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு உணர்வு ஏற்கனவே வளர்ந்து வருகிறது. ஷேக் ஹசினா இந்தியாவின் ஆதரவுடன் தான் தேர்தலில் வெற்றிபெற்றதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவியது. வங்கதேச அரசியலில் இந்தியா தலையிடுவதாகவும் அங்கே சிலர் பிரசாரம் செய்தனர்.
இந்த நாடுகளில் உள்ள சூழல் வெவ்வேறு விதமாக இருக்கலாம். ஆனால், அவற்றின் அதிருப்தியின் மையத்தில் இந்தியா உள்ளது. இதற்கான காரணங்களில் ஒன்றாக அந்நாடுகளின் அரசியலும் இந்தியாவிற்குள் இருக்கும் அரசியலும் சொல்லப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகிய அண்டைநாடுகள் முஸ்லிம் பெரும்பான்மை உடைய நாடுகள். இந்தியாவில் வகுப்புவாத அரசியல் இருந்தால், அது, இந்த அண்டை நாடுகளுடனான உறவையும் பாதிக்கும். அளவிலும், வளங்களின் அடிப்படையிலும் இந்த நாடுகளை விட இந்தியா பெரியது. இதன் காரணமாக அண்டைநாடுகள் இந்தியாவை பலம் வாய்ந்ததாக பார்க்கின்றன.
அதே சமயம் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளனர். சீனா இந்த நாடுகளில் அதிக முதலீடு செய்துள்ளது, கடன் வழங்கியிருக்கிறது, அதனால் அதற்கு செல்வாக்கு உள்ளது. மற்றொரு முக்கிய விஷயம், ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் சீனா நிரந்திர உறுப்பினராக உள்ளது. இந்தியா நிரந்தர உறுப்பினர் இல்லை. எனவே, நெருக்கடியை சந்திக்கும் அல்லது சர்வதேச உதவி தேவைப்படும் எந்தவொரு நாடும் சீனாவுக்கே முன்னுரிமை அளிக்கிறது.
எனினும், அண்டை நாட்டில் எந்த அரசாங்கம் மாறினாலும்,தனது அடிப்படை நலன்கள் பாதுகாக்கப்படும் வரை அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என இந்தியா நம்புகிறது வங்கதேசத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு பிறகு, அண்டை நாடுகளுடனான உறவைப் பாதுகாப்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு சென்றார். வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். நேபாளத்துக்கு வரும்படி அந்நாட்டு பிரதமர் KP sharma Oli-யும் இந்திய பிரதமர் மோதிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு மத்தியிலும் மாலத்தீவு அதிபர் முய்சு இந்தியாவிடம் நிதி உதவி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



