காணொளி: ஜமைக்காவை கடுமையாக தாக்கிய மெலிசா சூறாவளி

காணொளிக் குறிப்பு, ஜமைக்காவை கடுமையாக தாக்கிய மெலிசா சூறாவளி
காணொளி: ஜமைக்காவை கடுமையாக தாக்கிய மெலிசா சூறாவளி

ஜமைக்காவில் செவ்வாய்க்கிழமை கடும் தாக்கத்தை ஏற்படுத்திய மெலிசா சூறாவளி கியூபாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

இந்த சூறாவளியால், ஜமைக்காவில் மூன்று பேரும், ஹைட்டியில் (Haiti) மூன்று பேரும், டொமினிகன் குடியரசில் ஒருவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என ஏஎஃப்பி செய்தி முகமை கூறுகிறது.

எனினும், சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க தேசிய சூறாவளி மையம் இதனை அதி தீவிர சூறாவளியாக வகைப்படுத்தியுள்ளது. முன்னதாக மெலிசா சூறாவளி கரையை கடந்த போது, சுமார் 298 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இப்போது 205 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது என அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்தது.

ஜமைக்காவில் செவ்வாய்க்கிழமை சூறாவளி கரையை கடந்தபோது, கிங்ஸ்டன் நகரின் தெருக்களில் வெள்ளம் புகுந்தது. கடந்த 174 ஆண்டுகளில் ஜமைக்காவை தாக்கிய மிக வலிமையான சூறாவளி இது என ஏஎஃப்பி செய்தி முகமை கூறுகிறது.

ஜமைக்கா உள்ளூர் அரசுக்கான அமைச்சர் டெஸ்மாண்ட் மெக்கென்சி (Desmond McKenzie), ஜமைக்கா மோசமான காலகட்டத்தை கடந்து வந்திருப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஜமைக்கா இதுவரை சந்தித்த மிக மோசமான காலக்கட்டங்களில் ஒன்றை கடந்துள்ளது. உள்கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உணவுக் களஞ்சியமாகக் கருதப்படும் செயின்ட் எலிசபெத் மாவட்டமும் கடுமையாக சேதமடைந்துள்ளது. மெலிசா சுறாவளியின் தாக்கம் ஜமைக்கா முழுவதும் உணரப்பட்டுள்ளது."

"5 லட்சத்திற்கும் மேலான மக்கள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். வானிலை சாதகமாக இருந்தால், மருத்துவமனை, குடிநீர் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் போன்ற அடிப்படை சேவைகளை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்." எனத் தெரிவித்தார்.

மெலிசா சூறாவளி கியூபாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாண்டியாகோ டி கியூபாவில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

கியூபாவை நோக்கி சூறாவளி நகர்ந்து வரும் நிலையில், கிரான்மா (Granma), சாண்டியாகோ டி கியூபா (Santiago de Cuba), குவாண்டனாமோ (Guantanamo), ஹோல்குயின் (Holguin) மற்றும் லாஸ் துனாஸ் (Las Tunas) ஆகிய ஐந்து மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சாண்டியாகோ டி கியூபாவில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

"அது என்னை அச்சமூட்டுகிறது. ஆனால் அதைவிட அதிகமாக என்னை அச்சப்படுத்துவது என்னவென்றால் — வீட்டிலிருந்து விலகி, எனக்குச் சொந்தமான அனைத்தையும் 2012-ல் ஏற்பட்ட "சாண்டி" புயல் எடுத்துச் சென்றது போல இழந்து, அதன் பிறகு ஒரு சிமெண்ட் பை கூட கிடைக்காமல் இருப்பதுதான்." என்கிறார் சாண்டியாகோ வாசியான ஃப்ளோரைடா டுவானி

அதே பகுதியைச் சேர்ந்தவரான ஜார்ஜ் எட்வர்டோ, "உளவியல் ரீதியான அச்சம் எப்போது இருக்கும். ஏனெனில், இது உண்ஐயிலேயே மிக சக்திவாய்ந்த இயற்கை நிகழ்வாகும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு