மோதி vs ராகுல்: நாடாளுமன்ற விவாதத்தில் ராகுல் காந்தி மேலும் ஒரு வாய்ப்பை தவறவிட்டாரா?
இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவையொட்டி நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோதி நீண்ட உரை நிகழ்த்தினார்.
சுமார் ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் நீண்ட அந்த உரையில் அவர் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். தனது அரசின் சாதனைகளையும் பட்டியிலிட்டார்.
காந்தி குடும்பத்தை குறிவைத்து, "காங்கிரசின் ஒரு குடும்பம் அரசமைப்பிற்கு தீங்கு விளைவிக்கிறது. 75 ஆண்டுகளில் அந்த ஒரு குடும்பம் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அந்த கால கட்டத்தில் நாட்டில் என்ன நடந்தது என்பதை அறிய அனைவருக்கும் உரிமை உள்ளது" என்றார் மோதி.
முன்னதாக, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசியல் சாசனம் குறித்து பேசுகையில், சாவர்க்கரின் கட்டுரையை மேற்கோள் காட்டி மோதி அரசாங்கத்தை விமர்சித்தார்.
பிரதமர் மோதி பேசியது என்ன?
பிரதமர் மோதி தனது உரையில் `காந்தி குடும்பம்' என்று அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும் காங்கிரசின் ஒரு குடும்பம் ஒவ்வொரு மட்டத்திலும் நாட்டிற்கு சவாலாக உள்ளது என்று தெரிவித்தார்.
அவர் தனது உரையில், ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியின் பெயர்களை குறிப்பிட்டு, சுமார் 60 ஆண்டுகளில் அரசியல் சாசனம் 75 முறை மாற்றப்பட்டது என்று கூறினார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரை குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோதி, "சட்டவிரோத கொள்கைகளால் `இந்திரா ஜி'யின் தேர்தலை நீதிமன்றம் நிராகரித்தது. அவர் எம்பி பதவியை விட்டு விலக வேண்டியிருந்தது. அவர் கோபமடைந்து தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள நாட்டின் மீது அவசரநிலையை அமல்படுத்தினார் என்று தெரிவித்தார்
நாட்டில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர தனது அரசு முயற்சித்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், SANSAD TV
முன்னதாக ராகுல் காந்தி பேசும்போது சாவர்க்கரைப் குறிப்பிட்டு, "நமது அரசமைப்புச் சட்டத்தில் இந்தியத்தன்மை என்ற எந்தக் கூறும் இல்லை என்பதை சாவர்க்கர் தனது எழுத்துகளில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா அரசமைப்புச் சட்டத்தால் இயங்க வேண்டியதில்லை, (மனுஸ்மிருதியால் இயங்க வேண்டும் என்று அவர் கூறினார்." என்று ராகுல் குறிப்பிட்டார்.
எனவே ஆட்சியில் இருப்பவர்கள் சாவர்க்கரின் வார்த்தைகளை ஆதரிக்கிறீர்களா? என்று பேசினார்
ராகுல் காந்தி தனது உரையில், சாவர்க்கரைத் தவிர, அக்னிவீர், வினாத்தாள் கசிவு, விவசாயிகள் குறித்தும் பேசினார்.
மேலும் ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கை பற்றிப் பேசிய அவர், குற்றம் செய்தவர்கள் வெளியில் சுற்றித் திரிகிறார்கள், ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வீட்டில் அடைப்பட்டுள்ளனர்." என்றார்
சனிக்கிழமையன்று நடைபெற்ற விவாதத்தில் தனிநபர் அரசியல் குறித்தே அதிகம் பேசப்பட்டதாக பிபிசியிடம் பேசிய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்
பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதி, "அரசியலமைப்பின் முன்னுரை மற்றும் வழிகாட்டுதல் கோட்பாடுகள் மீது விவாதம் நடந்திருக்க வேண்டும், ஆனால் அது விவாதிக்கப்படவில்லை. மேலும் இந்த விவாதத்தை அனைவரும் தங்கள் சமகால அரசியலுக்காக பயன்படுத்தினர்." என்றார்
இந்த விவாதத்தின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை காங்கிரஸ் முற்றிலும் தவறவிட்டதாக விஜய் திரிவேதி தெரிவித்தார்.
மறுபுறம், பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க.வும் பழைய பிரச்சினைகள் குறித்தும், நேரு-காந்தி குடும்பத்தை விமர்சிப்பதற்கும் அதிக நேரத்தைச் செலவிட்டனர்" என்று விஜய் திரிவேதி தெரிவித்தார்.
மூத்த பத்திரிக்கையாளரும் அரசியல் ஆய்வாளருமான வினோத் சர்மா, இந்த விவாதம் அரசியல் சாசனம் குறித்ததாக இருக்க வேண்டும். ஆனால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரு தரப்பிலும் அதுகுறித்த நேர்மையான விவாதத்தை முன்வைக்கவில்லை என்று தெரிவித்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



