காணொளி: கோவையில் பேருந்தில் சாதிய பாகுபாடு காட்டப்படுகிறதா? பிபிசி கள ஆய்வு
''ஒரே ஊர்தான்... ஆனால், கிராமம் இரண்டு. ஊருக்குள் நிற்கும் பேருந்து அரை கிலோ மீட்டருக்குள் இருக்கும் எங்கள் பகுதிக்குள் வராது. ஏனென்றால், நாங்கள் ஏறி உட்கார்ந்தபின்பு, அங்கே இருப்பவர்கள் பேருந்தில் ஏறி இடமில்லை என்றால், 'அவர்கள் உட்கார நாங்கள் நின்றுகொண்டு வருவதா' என்ற மனோபாவத்தில்தான் 21ஆம் எண் பேருந்தை இங்கே வரவிடாமல் தடுக்கிறார்கள்!''
கோவை அருகிலுள்ள கெம்பனுார் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ரம்யா, பிபிசி தமிழிடம் முன் வைத்த குற்றச்சாட்டு இது.
இதே குற்றச்சாட்டை வேறு பலரும் தெரிவிக்கும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் பலரும் இதுபற்றி பேசுவதற்கு மறுக்கின்றனர். இந்த சாதிய பாகுபாடு குற்றச்சாட்டு குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிபிசி தமிழ் நடத்திய களஆய்வில், மற்ற ஊர்களிலிருந்து இயக்கப்படும் வேறு பல பேருந்துகளும் இந்த பகுதி வழியாக இயக்கப்படும் நிலையில், கெம்பனுாரிலிருந்து கோவைக்கு அதிகமுறை இயக்கப்படும் 21 ஆம் எண் நகரப்பேருந்து கெம்பனுாரிலிருந்தே புறப்படுவது தெரியவந்தது. கெம்பனுாரில் அரசு செய்துள்ள பணிகளை விளக்கிய மாவட்ட நிர்வாகம், அண்ணாநகருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது. ஆனால், '21 ஆம் எண் பேருந்தை அண்ணாநகரிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை'.
கோவை நகருக்கு அருகிலுள்ள தொண்டாமுத்துார் பேரூராட்சிக்குட்பட்ட கெம்பனுார் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் அண்ணாநகர் பகுதியிலிருந்து பேருந்து வசதிகளை ஏற்படுத்தாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோருக்கு, தேசிய எஸ்.சி.–எஸ்.டி. ஆணையம் கடந்த நவம்பர் 3 ஆம் தேதியன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் ஆணையத்துக்கு வரப்பெற்றுள்ள புகாரை இணைத்து, அதுகுறித்து 15 நாட்களுக்குள் விசாரித்து விளக்கம் அளிக்குமாறு ஆணையத்தின் மாநில இயக்குநர் ரவிவர்மன் அறிவுறுத்தியுள்ளார். உரிய காலத்துக்குள் பதில் தராவிடில் ஆணையத்தின் அழைப்பாணையின்படி ஆணையம் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள புகாரில், கெம்பனுாரிலிருந்து கோவை காந்திபுரத்துக்கு இயக்கப்படும் 21 ஆம் எண் நகரப்பேருந்தை அண்ணாநகரிலிருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததன் பின்னணியில் சாதிய பாகுபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த புகார் குறித்தும், ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்தும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தகவல் பரவி பலரும் பலவிதமான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை நிலையை அறிவதற்காக பிபிசி தமிழ் களஆய்வு மேற்கொண்டது. முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



