You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கின் காங்: சீனாவில் அதிபர் ஜின்பிங்கிற்கு நெருக்கமான அமைச்சர் திடீர் பதவி நீக்கம் - எங்கே போனார்?
- எழுதியவர், ஸ்டீபன் மெக்டொனெல் & சைமன் ஃப்ரேசர் & கெல்லி என்ஜி
- பதவி, பிபிசி நியூஸ்
சீனாவின் வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து ஏழே மாதங்களில் கின் காங் நீக்கப்பட்டுள்ளார். அதுபற்றிய யூகங்கள் பல தரப்பிலும் கிளம்பியுள்ளன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசர கூட்டத்திற்குப் பிறகு கின் காங் நீக்கப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அவருக்கு முன் இருந்த வாங் யி மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக பொதுமக்களின் பார்வையில் இருந்து கின் காங் எந்தவிதத் தகவல்களும் இல்லாமல் மாயமானது குறித்து அதிகார மட்டத்திலான மௌனம் சீனாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து சமுக ஊடகங்களில் ஏராளமான பொதுமக்கள் தேடித்தேடிப் படித்தன. அவரது திடீர் பதவி நீக்கம் குறித்த சந்தேகங்களும் வெளியாகின.
செவ்வாயன்று சீன அரசு ஊடகங்களில் வெளியான சுருக்கமான அறிவிப்பில், "சீனாவின் உயர்மட்ட ஆட்சிமன்றக் குழு வாங் யியை வெளியுறவு அமைச்சராக நியமிக்க வாக்களித்துள்ளது" என்று மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே வெளியுறவுத் துறை அமைச்சர் கடந்த பல நாட்களாக மாயமாக மறைந்திருந்த நிலையில், அந்நாட்டு அரசின் இந்த அறிவிப்பு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் இருந்தது.
இது போன்ற ஒரு முக்கிய அமைச்சர் பற்றிய வதந்திகள் மற்றும் தகவல்கள் சீன இணைய தளங்களில் முழுமையான தணிக்கை இல்லாமல் விவாதிக்கப்படுவது அசாதாரணமானது என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
"இது போன்ற தணிக்கை இல்லாத தகவல்கள் நிரம்பிவழிவதால், அதிகாரப் போட்டிகள், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பதவி மாற்றம், மற்றும் காதல் உறவுகள் பற்றிய வதந்திகளில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்," என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயன் சோங் கடந்த வாரம் பிபிசியிடம் கூறினார்.
வெய்போவில் பொதுமக்கள் இணையதளங்களில் தேடும் போது அதிக அளவில் பயன்படுத்திய சொற்களில் இது பிரதிபலித்தது. அதில் அவரது மனைவி மற்றும் ரகசிய காதலி குறித்த கேள்விகள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தன.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் 57 வயதான அவர், சீனாவின் வரலாற்றில் இது போன்ற முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களில் மிக இளையவர்.
ஒரு மாதத்திற்கு முன்பு, அவர் பெய்ஜிங்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்து பேச்சு நடத்தினார்.
கின் காங் நீக்கப்பட்டது ஒரு தவறான நடவடிக்கையா?
கின் காங்கின் இது போல் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சியடைந்து பின் அதே வேகத்தில் தலைமையின் கருணையிலிருந்து வெளியேற்றப்பட்டது எதிர்பாராதது என்பது மட்டுமல்ல, இது யாரும் எதிர்பாராத திடீர் நடவடிக்கை என்று ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டேனியல் ரஸ்ஸல் கூறியுள்ளார்.
"இது போன்ற இரண்டு முக்கிய நகர்வுகளும் சீனாவின் அரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுவதால் இந்நடவடிக்கை ஒரு சங்கடமான தோல்வியாக பார்க்கப்படும்."
கின் காங் வெளியுறவுத் துறை அமைச்சராக உயர்ந்தது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்.
அமெரிக்காவிற்கான சீன தூதுவராக இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பதவி வகித்த அவர், அதன் பிறகு, ஒரு மிகப்பெரும் நபராக உருவெடுத்தார். மிக முக்கிய இராஜதந்திரி என்ற நற்பெயரைப் பெற்றார். கடந்த டிசம்பரில் அவர் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதற்கு முன், அவர் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளராக இருந்தார். மேலும், அதிபர் ஷியின் வெளிநாட்டு பயணங்களை ஏற்பாடு செய்வதில் பெரும் பங்காற்றினார். இது அவருக்கு சீனத் தவைருடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியது.
வாஷிங்டனில் உள்ள வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலின் சீன ஆய்வுகளுக்கான மூத்த ஆராய்ச்சியாளர் இயன் ஜான்சன், கின் காங் சம்பந்தப்பட்ட அத்தியாயம் கடந்த 12 மாதங்களாகத் தொடர்ந்து வருவதாகவும், அதிபர் ஷி ஜின்பிங்குடன் இந்த காலகட்டத்தில் அவருக்கு பலமுறை வெளிப்படையாகவே கருத்து மோதல்கள் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கிறார். "மிகவும் பொதுப் பிரச்சினைகளில்" இருவருக்கும் இடையே பல முறை கருத்து மோதல்கள் எழுந்ததாகவும் அவர் கூறுகிறார்.
புதிய வெளியுறவு அமைச்சர் குறித்து தேசிய மக்கள் காங்கிரஸால் அடுத்த மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று ஜான்சன் கூறினார்.
"இந்த விஷயத்தில் கவனமாக ஆராய்ந்து வேறு யாரையாவது பொறுப்பில் அமர்த்த அவர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும்."
சீன கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் கீழ், வெளியுறவுக் கொள்கை ஒரு உயர்மட்ட அதிகாரியால் வகுக்கப்படுகிறது. பின்னர் அவர் அதை செயல்படுத்த வெளியுறவு அமைச்சரை வழிநடத்துகிறார்.
கின் காங் சீன அரசின் மிகவும் பிரபலமான முகங்களில் ஒருவராக விளங்கினார்.
ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தனது வழக்கமான பணிகளில் இருந்து திடீரென மாயமானார். இந்தோனேசியாவில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளத் தவறியபோது, அவருக்கு உடல்நலம் சரியில்லை என தகவல்கள் வெளியாகின.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெலுடனான அவரது சந்திப்பு, ஆரம்பத்தில் ஜூலை 4 இல் திட்டமிடப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் சீனாவில் எந்த வித விளக்கமும் இல்லாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டது. மேலும் பல்வேறு வதந்திகளுக்கும் காரணமாக அமைந்தது.
செவ்வாயன்று கின் காங் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்குச் சிலமணிநேரம் முன்னதாக அவரைப் பற்றிய கேள்வி ஒன்றிற்குப் பதில் அளித்த ஒரு அமைச்சரக செய்தித் தொடர்பாளர் ஒருவர், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் தம்மிடம் இல்லை என்று தெரிவித்தார். இதே பதிலை அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது, சீன அரசின் வெளிப்படைத் தன்மையற்ற நிலைக்கு ஒரு சான்றாக இருந்தது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவராக கின் விளங்கினார்.
ஆனால், சீனாவில் உள்ள உயர்மட்டப் பிரமுகர்கள் நீண்ட காலத்திற்குப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியே செல்வது வழக்கத்துக்கு மாறானது அல்ல. இது போல் பொதுவெளியில் இருந்து மறைந்து போனவர்கள் பின்னர், குற்றவியல் விசாரணையில் சிக்கியவர்களாக வெளிப்படுகின்றனர். அல்லது எந்த வித பிரச்னையும் இல்லாதவராகவும் மீண்டும் அவர் பொதுவெளியில் தோன்றலாம்.
2012 இல் சீனாவின் தலைவராக பதவியேற்றதற்குச் சற்று முன்னர் ஷி ஜின்பிங்கும் இதே போல பொதுவெளியில் இருந்து காணாமல் போனார். இதையடுத்து, அப்போதைய அவரது உடல்நிலை மற்றும் கட்சிக்குள் நிலவிய அதிகாரப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்கள் தோன்றின.
கின் காங்கிற்குப் பதிலாக யார் இருக்கிறார்?
ஜப்பானிய மொழி பேசும் ஒரு சீனத் தூதர் பேசிய போது, வாங் யீ, 2013 மற்றும் 2022 க்கு இடையில் அவர் வகித்த பதவிக்கு மீண்டும் திரும்புகிறார் என்றும், 69 வயதான அவர் அண்மைக் காலங்களில் கின் காங்கின் இடத்தில் இருந்ததைக் காணமுடிந்தது என்றும் கூறினார்.
வாங் யீ கடந்த ஆண்டு ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக பதவி உயர்வு பெற்றதோடு, அதே நேரத்தில் கட்சியின் மத்திய வெளியுறவு ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கத் தொடங்கினார்.
அவரது நியமனம் சீன இராஜ தந்திரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையாகவே பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
"வாங் யி இதற்கு முன்னரும் வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்துள்ளார். அவர் சீன வெளியுறவுத் துறையைத் திறம்படக் கையாளும் ஒரு நபராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் மிகவும் திறமையான ராஜதந்திரி என்பதால் அவர் அப்பணியைத் திறம்பட மேற்கொள்வார் என்று நான் நம்புகிறேன்," என ஜான்சன் கூறினார்.
சீனப் பகுப்பாய்வு மையத்தின் மூத்த அதிகாரியான ரோரி டேனியல்ஸ், வாங் யீயின் நியமனம் "அமெரிக்க-சீனா உறவுகளை மேம்படுத்துவதற்குப் பெரிதும் உதவும்," என்றார்.
"தொடர்ந்து முக்கிய சர்வதேச சந்திப்புகள் நடைபெறவிருக்கும் நிலையில், தனது பல வெளிநாட்டு சகாக்களுடன் உறவு வைத்திருக்கும் ஒருவரை ஷி ஜின்பிங் இழந்துவிட்டார். நிச்சயமற்ற, சிக்கலான காலங்களில், சீனா ஒரு முழுமையான மற்றும் முன்னேற்பாடு மிக்க நடவடிக்கைகளின் தேவையில் உள்ளது," என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு