You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோன்ஸலோ ராமோஸ்: நாக் அவுட்டில் ரொனால்டோவையும் மெஸ்ஸியையும் முந்தியவர்
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பதிலாக களத்துக்குள் செல்லும்வரை, ராமோஸின் பெயரை கால்பந்து உலகில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்காது. ஏனென்றால் உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பாக அவர் போர்ச்சுகலுக்காக சர்வதேசப் போட்டிகளில் முழுமையாக ஆடியது இல்லை.
உலகக் கோப்பை போட்டிகளிலும் அவரை போர்சுகல் அணி பெரிதாகக் களமிறக்கவில்லை. கானா மற்றும் உருகுவே ஆகிய அணிகளுடனான போட்டிகளின்போது கடைசி நேர மாற்று ஆட்டக்காரராக களமிறங்கியதுதான் அவரது சர்வதேச அனுபவம்.
ஒட்டு மொத்தமாகவே உலகக் கோப்பைக்கு முன்னும் பின்னுமாக அவரது அனுபவம் 33 நிமிடங்கள்தான்.
உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டபோது அவருக்கு 26-ஆம் எண் ஆடை வழங்கப்பட்டது. அணிக்காக மொத்தமாகத் தேர்வு செய்யப்பட்ட 26 பேரில் அது கடைசி எண்.
ஆனால் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் அவர் களமிறங்குவதற்கு முன்பாகவே சமூக வலைத்தளங்களில் வைராலாகி விட்டார். 5 உலகக் கோப்பைகளிலும் கோல் அடித்த உலகின் முன்னணி வீரருக்குப் பதிலாக தாக்குலை முன்னின்று நடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் சாதாரணமா?
ரொனால்டோவுக்கு பதிலாக ராமோஸ் வந்து கோல் எதுவும் அடிக்காமல் போயிருந்தால் அவரது கால்பந்து வாழ்க்கை மாத்திரமல்லாமல், அவரை மைதானத்துக்குள் அனுப்பிய மேலாளர் சான்டோஸின் கால்பந்து வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருக்கும் அபாயம் இருந்தது.
ஆனால் அவர் களமிறங்கிய பதினேழாவது நிமிடத்திலேயே தன்னைத் தேர்வு செய்ததற்கு நியாயம் கற்பித்தார். ரொனால்டோவால் செய்ய முடியாத சாதனையை அவர் படைத்தார். இந்த உலகக் கோப்பையில் யாரும் செய்யாத ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தி கால்பந்து உலகை வியப்புக்குள்ளாக்கினார்.
ராமோஸுக்கு 21 வயதுதான் ஆகிறது. போர்சுகல் அணிக்காக ரொனால்டோ களமிறங்கியபோது ராமோஸுக்கு இரண்டு வயதுதான் இருந்திருக்கும். இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ராமோஸ், ‘ரொனால்டோதான் தனக்கு ரோல் மாடல்’ என்று கூறினார்.
உலகக் கோப்பை போட்டிகளில் ஹாட்ரிக் கோல் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் ராமோஸ்.
ரொனால்டோவுக்கு அது இன்னும் கனவுதான்!
ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் 8 கோல்களை அடித்திருக்கிறார் ரொனால்டோ. இவற்றில் ஒன்றுகூட நாக் அவுட் போட்டிகளில் அடித்தவை அல்ல.
அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த உலகக் கோப்பை போட்டியில்தான் தனது முதலாவது நாக் அவுட் கோலை அடித்தார்.
ஆனால், நாக் அவுட் போட்டிகளில் தாம் களமிறங்கிய முதல் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியிலேயே 3 கோல்களை அடித்து போர்ச்சுகல் அணியின் அனைத்து வீரர்களின் சாதனைகளை தகர்த்துவிட்டார் ராமோஸ்.
உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரரான ஜெர்மனியின் மிரோஸ்லவ் குலோஸ் தனது முதல் உலகக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் கோல்களை அடித்தார். அவருக்கு அடுத்ததாக அந்தப் பெருமை ராமோஸுக்கு கிடைத்திருக்கிறது.
சுவிட்சர்லாந்துக்கு எதிராக மூன்று கோல்களை அடித்ததுடன் ஒரு கோலுக்கு உதவியும் செய்திருக்கிறார் ராமோஸ். இதுவும் உலகக் கோப்பை வரலாற்றில் இளம் வயது வீரர் என்ற வகையில் ஒரு சாதனைதான்.
அடுத்த போட்டியில் ரொனால்டோவுக்கு வாய்ப்பு உண்டா?
ரொனால்டாவுடன் ஏதாவது பிரச்னையா என்று சான்டோஸிடம் கேட்டபோது, “ரொனால்டோவுடன் எனக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. 19 வயதாக இருந்தபோதே அவரை எனக்குத் தெரியும். அணியில் ஒரு முக்கியமான ஆட்டக்காரர் என்றே அவரைக் கருதுவேன்” என்று பதிலளித்திருக்கிறார் போர்ச்சுகல் மேலாளர் சான்டோஸ்.
மொரோக்கோவுடனான காலிறுதிப் போட்டியில் ரொனால்டோ ஆடுவாரா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க சான்டோஸ் மறுத்துவிட்டார்.
“என்னிடம் உள்ள அனைத்து வீரர்களையும் பயன்படுத்துவேன். முதல் 11 ஆட்டக்காரர்களாக இல்லாவிட்டால் பின்னர் களமிறக்குவேன்” என்று கூறினார் சான்டோஸ். இதன் மூலம் மொரோக்கோவுடனான போட்டியிலும் தொடக்கத்தில் ரொனால்டோவை பெஞ்சில் அமர வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பை போட்டியே ரொனால்டோவுக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் எனக் கருதப்படும் நிலையில், அவருக்கு இத்தகைய நெருக்கடி ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.
37 வயதான ரொனால்டோ 5 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். ஆனால் அவர் அணிக்காக போதிய பங்களிப்பைச் செய்யவில்லை என்ற புகார்கள் எழுவதைக் காண முடிகிறது.
தென்கொரியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அவரது மிக மோசமான தவறுகளை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். அப்போது சான்டோஸை எரிச்சலூட்டம் வகையில் ரொனால்டோவின் உடல் மொழி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்குப் பிறகே ரொனால்டோவை வெளியே அமர வைத்துவிட்டு பெரிதாக அனுபவம் இல்லாத இளம் வீரர் ராமோஸை களமிறக்குவது என சான்டோஸ் முடிவு செய்திருக்கிறார்.
இந்தப் போட்டியில் வெளியே இருந்தபோது ரொனால்டோவுக்கு இரண்டு வகையில் நெருக்கடி ஏற்பட்டது. ஒன்று தாம் இல்லாமல் போட்டியில் தோற்றுப் போனால் அணியுடன் சேர்ந்து வெளியேற வேண்டியிருக்கும். வெற்றிபெற்றால், அணிக்கு தனது தேவை இருக்காது.
இப்போது ரொனால்டோவுக்கு மாற்றாக களமிறக்கிய வீரர் ஹாட்ரிக் கோல் அடித்திருப்பதன் மூலம் அடுத்து வரும் போட்டிகளில் ரொனால்டோவின் பங்களிப்பு தேவையில்லை என்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.
காலிறுதிப் போட்டிகள் எப்போது?
கத்தார் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. முதல் போட்டியில் குரோஷியாவும் பிரேசிலும் மோதுகின்றன. இந்தப் போட்டி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. அடுத்த போட்டி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது.
மொரோக்கோவுக்கும் போர்சுகலுக்கும் இடையே சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கும் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான போட்டி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கும் நடக்கின்றன.