'தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள், கூட்டணி அதிருப்தி' - பிகார் சட்டமன்ற தேர்தல் நிலவரம்

பட மூலாதாரம், Getty/ANI
பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக (நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11) நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. பிகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
பிகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ), ராம் விலாஸ் பாஸ்வாஸின் லோக் ஜன்சக்தி (எல்ஜேபி), ஜித்தன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா (மதச்சார்பற்ற) (ஹச்.ஏ.எம்) மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரியா லோக் மோர்ச்சா (ஆர்.எல்.எம்) ஆகிய கட்சிகள் கூட்டாக தேர்தலைச் சந்திக்கின்றன.
மறுபுறம் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் 'மகா கூட்டணி' என்கிற பெயரில் தேர்தலைச் சந்திக்கின்றன.
இந்த இரு கூட்டணிகள் தவிர தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் மோர்ச்சா, அசாசுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் மற்றும் தேஜ் பிரதாப் யாதவின் புதிய கட்சியான ஜன்சக்தி ஜனதா தளமும் தனித்தனியாக தேர்தலைச் சந்திக்கின்றன.
வாக்குப்பதிவு தேதி நெருங்கி வருகிற நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிகார் சட்டமன்றத்தில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன, ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை. தற்போது பிகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி ஆட்சி உள்ளது. ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
2020 சட்டமன்றத் தேர்தல் முடிவு
- பாஜக - 74
- ஜேடியூ - 43
- ஆர்ஜேடி - 75
- காங்கிரஸ் - 19
- இதர கட்சிகள் - 32
தேர்தல் அறிக்கைகளில் இருப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இரு கூட்டணிகளின் தேர்தல் அறிக்கைகளில் வேலைவாய்ப்பு, நிதியுதவி உள்ளிட்ட அம்சங்கள் முக்கிய இடம்பெற்றுள்ளன.
மகா கூட்டணி
- வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி
- பழைய ஓய்வூதிய திட்டம் அமல்
- திறன் சார்ந்த வேலைவாய்ப்பு
- பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர நிதியுதவி
- ஈபிசி பிரிவினருக்கு 30% இடஒதுக்கீடு
- பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வது
- 200 யூனிட் வரை இலவச மின்சாரம்
என்டிஏ கூட்டணி
- 1 கோடி வேலைவாய்ப்பு
- 1 கோடி பெண்களுக்கு ரூ.2 லட்சம் வரை நிதியுதவி
- ஈபிசி சமூகத்தினரின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த சிறப்பு குழு அமைக்கப்படும்
- விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.3,000 வழங்கப்படும்
- 125 யூனிட் வரை இலவச மின்சாரம்
20 ஆண்டுகால ஆட்சியை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகள்
இரு கூட்டணிகளின் தேர்தல் அறிக்கையிலும் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் முக்கிய இடம் பிடித்துள்ளன.
என்டிஏ கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பு, தொழிற்துறை, வேளாண்மை மற்றும் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
என்டிஏ தேர்தல் அறிக்கையை புகழ்ந்து பேசிய பிரதமர் மோதி சுயசார்பு மற்றும் வளர்ந்த பிகாருக்கான திட்டம் இதில் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால் இதனை விமர்சித்து பேசிய தேஜஸ்வி யாதவ், நிதிஷ் ஆட்சியில் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை என்றார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி பேசிய பிரதமர் மோதி தமிழ்நாடு மற்றும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் விவாதப் பொருளானது.
இதற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமர் மோதி திமுகவினரைத் தான் குறிப்பிட்டார் என்றும், தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பேசவில்லை என்றும் பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
வாக்கு திருட்டு விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி
பிகார் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி வாக்கு திருட்டு விவகாரத்தை மீண்டும் எழுப்பினார். "மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டனர். பிகாரில் மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் அரசு அமையாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். மகா கூட்டணி அனைவருக்குமான அரசை அமைக்கும்." என்றார்.
பிகாரில் நிலப் பற்றாக்குறை இருப்பதாக அமித் ஷா கூறுவதாக தெரிவித்த ராகுல் காந்தி, அதானிக்கு மட்டும் ஒன்று அல்லது இரண்டு ரூபாய்க்கு நிலம் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
தர்பாங்கா தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ் இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
அரசுப் பணியில் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார் ராகுல் காந்தி.
ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பாஜக

பட மூலாதாரம், ANI
மகா கூட்டணியால் பிகாருக்கு ஏதாவது நல்லது செய்ய முடியுமா எனக் கேள்வி எழுப்பிய அமித் ஷா, நிதிஷ் குமார் - மோதி கூட்டணியால் மட்டுமே பிகாருக்கு நல்லது செய்ய முடியும் எனத் தெரிவித்தார். "லாலு பிரசாத் தன்னுடைய மகனை முதல்வராக்கவும் சோனியா காந்தி தன்னுடைய மகனை பிரதமராக்கவும் நினைக்கின்றனர். ஆனால் இரண்டு பதவிகளும் காலியாக இல்லை." எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "லாலு பிரசாத் தீவன ஊழல், நிவாரண ஊழல், வேலைவாய்ப்பு ஊழல் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி 2004-2014 காலகட்டத்தில் ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளது. இவர்களால் எதுவுமே செய்ய முடியாது." என்றார்.
மகா கூட்டணிக்கு என்ன சிக்கல்?
தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிகாரில் மகா கூட்டணி வெற்றி பெற்றால் விகாஷில் இன்சான் கட்சியின் முகேஷ் சஹானி துணை முதலமைச்சராக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி பேசிய முகேஷ் சஹானி, "இதற்காக மூன்று ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறோம். பாஜக எங்கள் கட்சியை உடைத்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியது. பாஜகவை உடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்." எனத் தெரிவித்தார்.
பிகாரின் தர்பாங்காவில் மீனவ குடும்பத்தில் பிறந்தவர் முகேஷ் சஹானி. 44 வயதாகும் இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக பாலிவுட்டில் பணியாற்றியுள்ளார். 2014-ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு நட்சத்திரப் பேச்சாளராக திகழ்ந்த சஹானி இடஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கையை பாஜக நிறைவேற்றாததால் என்டிஏ கூட்டணியிலிருந்து வெளியேறி விகாஷில் இன்சான் கட்சியைத் (விஐபி) தொடங்கினார்.
2015 தேர்தலில் நிதிஷ் குமாருக்கும் 2020 தேர்தலில் பாஜகவுக்கும் ஆதரவாக செயல்பட்ட முகேஷ் சஹானி பிகாரில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக செயல்பட்டார். 2024-இல் என்டிஏ கூட்டணியிலிருந்து விலகி மகா கூட்டணியில் இணைந்தார்.

பட மூலாதாரம், ANI
ஓவைசி, தேஜ் பிரதாப் யாதவால் மகா கூட்டணிக்குச் சிக்கலா?
இந்தத் தேர்தலில் அசாதுதின் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 25 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மகா கூட்டணியில் இணைய முயற்சித்ததாகக் கூறும் ஓவைசி தனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி பிகாரின் சீமாஞ்சல் மற்றும் கிஷான்கங் பகுதியைக் குறிவைத்து போட்டியிடுகிறது.
முகேஷ் சஹானி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளதை விமர்சித்துப் பேசிய ஓவைசி, "பிகாரில் 3.5 சதவிகிதம் உள்ள மல்லா சமூகத்தைச் சேர்ந்தவர் துணை முதலமைச்சராக முடியுமென்றால் 17 சதவிகிதம் உள்ள சிறுபான்மை சமூகத்தினர் அமைதியாக இருக்க வேண்டுமா? முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவர் துணை முதலமைச்சராக முடியாதா?," எனக் கூறினார்.
அதேபோல், ஆர்.ஜே.டி கட்சியிலிந்து நீக்கப்பட்ட தேஜஸ்வி யாதவின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், ஜன்சக்தி ஜனதா தளம் என்கிற கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். தனது தேர்தல் பிரசாரத்தில் ஆர்ஜேடி கட்சியை விமர்சித்து பேசி வருகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"நட்பு ரீதியிலான சண்டை"
தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீட்டை முன்கூட்டியே அறிவித்த நிலையில் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு அறிவிப்பது தாமதமானது. இதனால் சில தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் தங்களுக்குள்ளாகவே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
உள்ளூர் தலைவர்களின் கோரிக்கை மற்றும் அந்த தொகுதிகளின் சூழ்நிலைகளைப் பொருத்து 5-7 இடங்களில் 'நட்பு ரீதியான போட்டி' உருவாகிறது என காங்கிரஸ் தலைவர் அசோக் கெலோட் தெரிவித்திருந்தார். மகா கூட்டணியில் உள்ள கட்சிகள் பல இடங்களில் தங்களுக்குள்ளாகவே போட்டியிடுகின்றன. காங்கிரஸ் - ஆர்ஜேடி கட்சிகளுமே சில இடங்களில் நேருக்கு நேர் மோதுகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் - ஆர்ஜேடி - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஜே.என்.எம் கட்சி பிகார் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த ஜே.எம்.எம் கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் சுபித்யா குமார், "பெரிய அரசியல் கட்சியான ஜே.எம்.எம் பிகார் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. கூட்டணி தர்மத்தை கடைபிடிக்காததற்கு ஆர்ஜேடியும் காங்கிரசும் தான் பொறுப்பு," எனத் தெரிவித்தார்.
என்டிஏ கூட்டணியில் அதிருப்தி
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவும் ஜேடியுவும் தலா 101 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சிராக் பஸ்வானின் எல்ஜேபி கட்சி 29 இடங்கள், ஹச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம் தலா 6 இடங்களில் போட்டியிடுகின்றன.
தொகுதி பங்கீட்டிற்கு உபேந்திர குஷ்வாஹா மற்றும் ஜித்தன் ராம் மஞ்சி தங்களின் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.
"என்டிஏ-வின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் எங்களுக்கு 6 இடங்கள் மட்டுமே கொடுப்பது என்டிஏவை தான் பாதிக்கும்." என்று தெரிவித்தார் ஜித்தன் ராம் மஞ்சி. உபேந்திர குஷ்வாஹாவும் தன்னுடைய அதிருப்தியை சமூக ஊடகப் பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜேடியூவை பின்னுக்குத் தள்ளுகிறதா பாஜக?

பட மூலாதாரம், Getty Images
பிகாரில் 20 ஆண்டுகளாக பெரிய கட்சியாகப் பார்க்கப்பட்ட ஜேடியூ தன்னுடைய 'பெரிய அண்ணன்' அந்தஸ்தை இழப்பதாக அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கருதுகின்றனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 17 இடங்களிலும், ஜேடியூ 16 இடங்களிலும் போட்டியிட்டன. அதுவே 2009 நாடாளுமன்ற தேர்தலில் ஜேடியூ 25 இடங்களிலும் பாஜக 15 இடங்களிலும் போட்டியிட்டன.
2020 சட்டமன்றத் தேர்தலில் ஜேடியூ 115 இடங்களிலும் பாஜக 110 இடங்களிலும் போட்டியிட்டன. பாஜகவைவிட அதிகமான இடங்களில் போட்டியிட்டாலும் ஜேடியூ 45 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு காரணம் சிராக் பாஸ்வான். அந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட சிராக் பெரும்பாலும் ஜேடியூ போட்டியிட்ட இடங்களிலே வேட்பாளர்களை நிறுத்தினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜேடியூவை மூன்றாவது இடத்திற்கு தள்ளியதற்காக சிராகிற்கு இந்தத் தேர்தலில் வெகுமதி அளிக்கப்படுவதாகக் கூறுகிறார் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் சயின்ஸின் முன்னாள் பேராசிரியரான புஷ்பேந்திரா. "சிராக் பஸ்வானுக்கு சொந்த பலம் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தல் இவர் கட்சியில் ஒருவர் மட்டுமே வென்றபோது இது நிரூபணமானது." என்றார்.
பிரசாந்த் கிஷோரின் கணக்கு என்ன?

பட மூலாதாரம், ANI
பிகாரைச் சேர்ந்த முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்கிற கட்சியைத் தொடங்கி தனியாக தேர்தலைச் சந்திக்கிறார்.
முதலில் அவர் ரகோபூர் தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்தார். ஜன் சுராஜ் கட்சி இந்தத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறது.
ஜன் சுராஜ் கட்சி வாக்காளர்களிடம் பி.எல்.சி என்கிற குடும்ப நல அட்டையை விநியோகித்து வருகிறது. தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோரின் நீண்ட கால அரசியல் கணக்குகள் பற்றி பேசிய பேராசிரியர் புஷ்பேந்திரா, "இந்தத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட்டு தனக்கு வாங்கி வங்கி உருவாக்க வேண்டும். சிராக் பஸ்வானைப் போல பிகார் அரசியலில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என விரும்புகிறார். அடுத்த தேர்தல் நடக்கிற போது, தற்போது சிராக் பாஸ்வான் செய்வதைப் போல ஒரு கூட்டணியில் பேரம் நடத்துவதற்கு தயாராகிறார்." எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












