You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் திடீர் போராட்டம் - என்ன பிரச்னை? இன்றைய முக்கியச் செய்தி
இன்றைய (06/06/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நேற்று முன்தினம் இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர் என்றும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள், காவல் துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் இந்து தமிழ் திசை நாளிதழின் செய்தி கூறுகிறது.
அந்தச் செய்தியின்படி, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்ற புகார் இருந்துவருகிறது.
நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு மேல், தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல், கோவை, தூத்துக்குடி, திருக்கோவிலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, தேவகோட்டை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால், சுமார் 5,000 பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் குடும்பத்தினருடன் மற்றும் குழந்தைகளுடன் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பயணிகள், நள்ளிரவு 1 மணியளவில் இருந்து புறப்பட்ட ஒரு சில பேருந்துகளையும் சிறை பிடித்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 1,000 பயணிகள் இந்த மறியலில் பங்கேற்றதால், நெடுஞ்சாலையில் 3 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலை மறியல் காரணமாக, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிமீ தொலைவுக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், பேருந்துகளை உடனடியாக இயக்கக் கோரி பயணிகள் காவல்துறையினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கிளாம்பாக்கம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 2 மணி நேரத்துக்கு பிறகு நிலைமை சரியானது.
"சிங்கப்பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெற்று வருவதால், இரவில் பெருமாள் வீதி உலா வரும்போது, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து போக்குவரத்தை தடை செய்து, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்துக்குள் வர வேண்டிய பேருந்துகள் கால தாமதமானதாலும், நள்ளிரவு நேரம் என்பதால் உட"னடியாக போக்குவரத்து ஏற்பாடு செய்ய இயலாமல் போனது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
சென்னையில் போதைப்பொருள், துப்பாக்கி பறிமுதல்
மணிப்பூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் போதைப்பொருள் கடத்தி வந்து விற்ற பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்களிடமிருந்து ரூ.35 லட்சம் மெத்தபெட்டமைன், கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் தினத்தந்தி நாளிதழின் செய்தி கூறுகிறது.
அந்தச் செய்தியின்படி, சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தி வந்து விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் நுண்ணறிவு போலீசார், தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. யார்டு அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்ற பெண் உள்பட 6 பேரிடம் சோதனை நடத்தினர். அவர்களிடம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரிந்தது. 6 பேரையும் ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள், திருவொற்றியூர் காந்தி நகரைச் சேர்ந்த முகமது அலி (வயது 25), சேப்பாக்கத்தைச் சேர்ந்த முகமது அசார் (26), ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டையை சேர்ந்த ரியாஸ்கான் (26), தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்த பர்வேஸ் உசேன் (26), தண்டையார்பேட்டையை சேர்ந்த அப்பாஸ் அலி (30), மணிப்பூரை பூர்வீகமாக கொண்டு தற்போது செங்குன்றத்தில் வசித்து வரும் மீனா என்ற அமீனா (46) என்பது தெரிந்தது.
இவர்கள் 6 பேரையும் ஆர்.கே. நகர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான 700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், ஒரு கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள், 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மணிப்பூர் மாநிலம் மோரையைச் சேர்ந்தவரான அமீனா, தனது மகன் அஸ்லம் உதவியோடு மோரையில் இருந்து ரயில் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சென்–னைக்கு கடத்தி வந்துள்ளார். பின்னர் அவற்றை தனது தம்பி மகனான அப்பாஸ் அலி மற்றும் அவரது கூட்டாளிகள் மூலம் தாம்பரம், ராயபுரம், செங்குன்றம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்கு கடத்திச்சென்று விற்றது தெரியவந்தது.
இவர்கள் 1 கிராம் போதைப்பொருளை ரூ.5 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர். இவர்களிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி யாருடையது? எங்கிருந்து வாங்கினார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றும், கைதான பெண் உள்பட 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு