மேற்குலகை விஞ்சி உலகை வெற்றி கொள்ள ரஷ்யா முயற்சிப்பது எப்படி? ஒரு விரிவான பகுப்பாய்வு

    • எழுதியவர், ஜூலியானா கிராக்னானி
    • பதவி, பிபிசி குளோபல் டிஸ்இன்பர்மேஷன் யூனிட்
    • எழுதியவர், மரியா கோரென்யுக்
    • பதவி, பிபிசி குளோபல் டிஸ்இன்பர்மேஷன் யூனிட்

ஜேவியர் கல்லார்டோ தனது காலையை தொலைக்காட்சியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சியைப் பார்த்து தொடங்க விரும்புகிறார். இது அவரது தினசரி பழக்கமாக இருக்கிறது. லாரி ஓட்டும் வேலைக்குச் செல்லும் முன், இந்த இசை நிகழ்ச்சி அவரது மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.

ஆனால் ஜூன் மாதம் ஒரு திங்கட்கிழமை அன்று, அவர் தொலைக்காட்சியை பார்க்கத் தொடங்கியபோது, இசை நிகழ்ச்சிக்குப் பதிலாக, திரை முழுவதும் போர்க்களத்தின் காட்சிகள் காணப்பட்டன. அவர் இதுவரை பார்த்திராத ஒரு சேனலில் ஒரு செய்தி அறிக்கை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

"என்ன நடக்கிறது?" என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்ட அவர், 20 நிமிடங்கள் பார்த்த பிறகு, அவர் அதை அணைத்துவிட்டார். "என்னால் அதனைப் பார்க்க முடியவில்லை" என்கிறார் ஜேவியர்.

திரையின் கீழ் மூலையில் ஒரு பச்சை நிற லோகோவில் "RT" என்ற எழுத்துக்கள் இருந்தன. இணையதளத்தில் தேடியபோது, இது ஒரு ரஷ்ய சேனல் என்பதை அவர் கண்டுபிடித்தார்.

ஜேவியர் சிலியில் வசிக்கிறார்.

அந்நாட்டில் தனியாருக்குச் சொந்தமான தொலைக்காட்சி சேனலான டெலிகனல், தனது ஒளிபரப்புச் சிக்னலை ரஷ்ய அரசின் ஆதரவு கொண்ட செய்தி ஒளிபரப்பாளரான ஆர்டிக்கு (RT) (முன்னர் ரஷ்யா டுடே- Russia Today) ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

நாட்டின் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையம், ஒளிபரப்புச் சட்டத்தை மீறியிருக்கலாம் என்ற காரணத்தால் டெலிகனலுக்கு எதிராகத் தடை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. தற்போது அந்த சேனலின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

விளக்கம் கேட்கப்பட்டபோது, டெலிகனல் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதற்கிடையில், பார்வையாளர்கள் குழப்பமடைந்தனர்.

"எனக்கு கஷ்டமாக இருந்தது", "அவர்கள் முன்கூட்டியே எதையும் அறிவிக்கவில்லை. ஏன் இப்படி நடந்தது என்று எனக்குப் புரியவில்லை" என்கிறார் ஜேவியர்.

கடந்த மூன்று ஆண்டுகளில், ரஷ்ய அரசு ஆதரவு பெற்ற செய்தி சேனலான ஆர்டி மற்றும் செய்தி நிறுவனம், வானொலி சேவையாக இயங்கும் ஸ்புட்னிக் ஆகியவை உலக அளவில் தங்களது சேவையை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன. இப்போது இவை ஆப்பிரிக்கா, பால்கன், மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற பிராந்தியங்களில் ஒளிபரப்பு செய்கின்றன.

ஒருபுறம் மேற்கத்திய நாடுகள் அதற்கு தடை விதித்திருந்தாலும், மறுபுறம் அதன் சேவை விரிவடைந்து வருகிறது.

2022 பிப்ரவரியில் ரஷ்யா யுக்ரேனை முழுமையாக ஆக்கிரமித்த பிறகு, போர் பற்றி தவறான தகவல்கள் பரப்பியதாகக் கூறி, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்டி சேனல் மீது கடுமையான தடைகளை விதித்தன.

இந்த நடவடிக்கைகள் 2024-ல் உச்சத்தை எட்டின.

அந்த ஆண்டில், ஆர்டியின் தலைமை ஆசிரியர் மார்கரிட்டா சிமோனியன் உட்பட நிர்வாகிகள் மீது அமெரிக்க அதிகாரிகள் தடை விதித்தனர்.

நாட்டின் நிறுவனங்களின் மீது "பொதுமக்களின் நம்பிக்கையை" பாதிக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தான் அதன் காரணம்.

அதே நேரம், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட ரஷ்யா பெரிய அளவில் பிரசாரம் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் வந்தன. ஆர்டி இதை மறுத்தது.

ஆனால் மற்ற இடங்களில், ஆர்டியின் செல்வாக்கு அதிகரித்து வந்தது.

2023-இல் ஆர்டி அல்ஜீரியாவில் ஒரு அலுவலகம் திறந்து, செர்பிய மொழியில் தொலைக்காட்சி சேவையை தொடங்கியது, அதன்பிறகு ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கான இலவச பயிற்சித் திட்டங்களை தொடங்கியது.

ஆர்டி இந்தியாவிலும் அலுவலகம் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், ஸ்புட்னிக் எத்தியோப்பியாவில் பிப்ரவரி மாதத்தில் செய்தி அலுவலகத்தைத் தொடங்கியது.

இவை மேற்கத்திய ஊடகங்கள் சில பகுதிகளில் பலவீனமடைந்த நிலையோடு ஒத்துப்போகின்றன.

பட்ஜெட் குறைப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை மாற்றங்களின் காரணமாக, சில ஊடகங்கள் தங்கள் சேவைகளைக் குறைத்து, சில பகுதிகளில் இருந்து முற்றிலும் வெளியேறின.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிபிசி தனது அரபு வானொலி சேவையை நிறுத்தி, ஆடியோ, வீடியோ, உரை அடிப்படையிலான டிஜிட்டல் செய்தி சேவையைத் தொடங்கியது. பின்னர், காஸா மற்றும் சூடானுக்கு அவசர வானொலி சேவைகளை அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் லெபனானில் 24 மணி நேர சேவையைத் தொடங்கியது, பிபிசி அரபு விட்டுச் சென்ற அலைவரிசையை அது ஆக்கிரமித்தது.

இதற்கிடையில், அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா (Voice of America) என்ற சர்வதேச ஒளிபரப்பு சேவை, அதன் பெரும்பாலான ஊழியர்களை குறைத்துள்ளது.

"ரஷ்யா தண்ணீரைப் போன்றது. சிமெண்டில் பிளவுகள் இருந்தால், அது உள்ளே பாய்கிறது," என்கிறார் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானி முனைவர் கேத்ரின் ஸ்டோனர்.

ஆனால் ரஷ்யாவின் இறுதி நோக்கம் என்ன? என்பது தான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

மாறிக்கொண்டிருக்கும் உலக ஒழுங்கில், அந்தப் பகுதிகளில் ஊடக செல்வாக்கு இவ்வாறு மெதுவாக விரிவடைவது எதைச் சுட்டிக்காட்டுகிறது?

'சாதாரண மக்கள் கூட அந்த தவறான தகவல்களை நம்பலாம்'

"மேற்கத்திய நாடுகளுக்கு வெளியே உள்ள நாடுகள் அறிவு, கலாசாரம், சித்தாந்தம் ஆகியவற்றில் மிகவும் வளமானவை. ஏனெனில், அவற்றில் அமெரிக்கா எதிர்ப்பு, மேற்கத்திய எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகள் உள்ளன", என்கிறார் பேராசிரியர் ஸ்டீபன் ஹட்ச்சிங்ஸ்.

ரஷ்யாவின் பிரசாரம் புத்திசாலித்தனமாகப் பரப்பப்படுகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப உள்ளடக்கம் தயாரிக்கப்படுகிறது. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சித்தாந்தங்களை பயன்படுத்தினாலும், பார்வையாளர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு தகவல்கள் உருவாக்கப்படுகின்றன.

ஆர்டியை எடுத்துக்கொள்ளுங்கள். மேற்கத்திய நாடுகளில் இது "ரஷ்ய அரசின் கருவியாகவும், தவறான தகவல்களை பரப்புபவராகவும்" பார்க்கப்படுகிறது. ஆனால் உலகின் பிற பகுதிகளில், இது சொந்த தலையங்கக் கொள்கையுடன் செயல்படும் உண்மையான ஊடகமாகக் கருதப்படுகிறது.

இதனால் சாதாரண மக்கள் கூட அந்த தவறான தகவல்களை நம்பும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

"கோட்பாட்டாளர்கள் மட்டும் அல்ல, விவேகமான சிந்தனையுடன் இருக்கும் நபர்களும் இந்த போலி செய்திகளால் பாதிக்கப்படலாம்" என்கிறார் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் விரிவுரையாளரான முனைவர் ரைஸ் கிரில்லி.

ஆர்டி உலக நிகழ்வுகளை எப்படி செய்தியாக்குகிறது என்பதிலிருந்து, அது பரந்த அளவிலான பார்வையாளர்களை ஈர்க்கும் திறன் கொண்டது என்று அவர் கருதுகிறார். "உலகளாவிய அநீதிகளைப் பற்றி உண்மையாகக் கவலைப்படுவோரும், மேற்கு நாடுகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என நினைக்கும் சம்பவங்களைப் பற்றி அக்கறைக் கொள்பவர்களும் இதனால் ஈர்க்கப்படுகிறார்கள்" என அவர் விளக்குகிறார்.

'மிகவும் கவனமாக கையாளுதல்'

மேலோட்டமாகப் பார்த்தால், ஆர்டியின் சர்வதேச இணையதளம் ஒரு சாதாரண செய்தித்தளமாகவே தோன்றுகிறது, மேலும் சில செய்திகளை அது துல்லியமாகவும் வெளியிடுகிறது.

இது, "மிகக் கவனமாகக் கையாளப்படுகிறது" என்று தி ஓபன் யுனிவர்சிட்டியின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் துறையின் மூத்த விரிவுரையாளரான முனைவர் பிரீசியஸ் சாட்டர்ஜே-டூடி கூறுகிறார். அவர் பேராசிரியர் ஹட்ச்சிங்ஸ், முனைவர் கிரில்லி மற்றும் பலருடன் சேர்ந்து ஆர்டி குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

அவரும் அவரது சக ஆய்வாளர்களும் 2017 மே முதல் 2019 மே வரை ஆர்டியின் சர்வதேச செய்திகளை ஆய்வு செய்தனர். ஆர்டி எந்த செய்திகளைத் தேர்ந்தெடுத்தது, எவற்றை தவிர்த்தது என்பது, குறிப்பிட்ட கதையாடல்களுக்கு ஏற்ப இருந்தது என்று கண்டறிந்தனர்.

உதாரணமாக, ஐரோப்பிய நாடுகளில் சமூக அமைதியின்மை ஏற்பட்டால், அதற்கு முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிட்டது. ஆனால், ரஷ்யாவின் உள்நாட்டு செய்திகளில் ராணுவப் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஆர்டி பொய்யான தகவல்களையும் பரப்புகிறது.

உதாரணமாக, 2014-ல் க்ரைமியாவை ரஷ்யா கைப்பற்றியதை, ராணுவ தலையீட்டுக்கான தெளிவான ஆதாரங்கள் இருந்தும் அதனை மறுத்து, 'அமைதியான முறையில் இணைக்கப்பட்டது' என்று சித்தரித்தது.

2022-இல் யுக்ரேனில் தொடங்கிய முழுமையான படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யா நடத்திய போர் குற்றங்களுக்கான ஆதாரங்களை ஆர்டி தொடர்ந்து மறுத்து வருகிறது.

2014 ஜூலையில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு யுக்ரேனைக் குற்றம் சாட்டும் செய்திகளை ஆர்டி வெளியிட்டது. ஆனால், ஐ.நா. விமான அமைப்பு இதற்கு ரஷ்யாவே காரணம் என்று கூறியது. ரஷ்யாவிலிருந்து கிழக்கு யுக்ரேனுக்கு கொண்டு செல்லப்பட்ட ஏவுகணையை ரஷ்யர்களும், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளும் பயன்படுத்தியதாக சர்வதேச புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.

இந்தச் செய்திகளைப் பற்றி பார்வையாளர்களின் கருத்து முக்கியமானது.

2018 முதல் 2022 வரை, பிரிட்டனில் ஆர்டி செய்திகளைப் பார்த்த 109 பேரை ஆராய்ச்சியாளர்கள் நேர்காணல் செய்தனர்.

பின்னர், Ofcom என்ற ஊடக அமைப்பு ஆர்டியின் ஒளிபரப்பு உரிமத்தை ரத்து செய்தது. பலர் "ஆர்டி ஒருதலைப்பட்சமானது" என்று கூறினர், ஆனால் எது உண்மை, எது பொய் என்பதைத் தாங்கள் புரிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்ததாக முனைவர் சாட்டர்ஜீ-டூடி கூறுகிறார்.

ஆனால், "[பார்வையாளர்கள்] ஆர்டி எவ்வாறு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது, மேலும் அதன் பொய்கள் எவ்வாறு பரப்பப்படுகின்றன என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை" என தனது ஆய்வின் அடிப்படையில் அவர் எச்சரித்தார்.

ரஷ்யா ஏன் ஆப்பிரிக்காவில் கவனம் செலுத்தியுள்ளது?

ரஷ்ய அரச ஊடகங்களின் சமீபத்திய விரிவாக்கம், பெரியளவில் ஆப்பிரிக்காவில் நடக்கிறது என்கிறார் பேராசிரியர் ஹட்சிங்ஸ்.

பிப்ரவரியில், ஸ்புட்னிக் பத்திரிகைக்கு புதிய தலையங்க மையத்தைத் தொடங்க ரஷ்ய அதிகாரிகள் எத்தியோப்பியாவுக்குச் சென்றனர். ஸ்புட்னிக் ஏற்கனவே ஆப்பிரிக்காவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் ஒளிபரப்பு செய்கிறது. இப்போது எத்தியோப்பியாவின் அதிகாரப்பூர்வ மொழியான அம்ஹாரிக் மொழியிலும் விரிவடைந்துள்ளது.

ஆர்டியும் தனது பிரெஞ்சு மொழி சேனலை பிரெஞ்சு பேசும் ஆப்பிரிக்க நாடுகளை இலக்காகக் கொண்டு மாற்றியமைத்துள்ளது. மேலும், லண்டன், பாரிஸ், பெர்லின், அமெரிக்காவில் இருந்த நிதியை ஆப்பிரிக்காவுக்கு திருப்பிவிட்டதாக ஆர்டியின் தலைமை ஆசிரியர் கூறுகிறார்.

கடந்த ஆண்டு, ரஷ்ய அரசு ஊடகம் ஆர்டிக்கு ஆப்பிரிக்காவில் ஏழு அலுவலகங்கள் உள்ளன என்று கூறியது. ஆனால், பிபிசியால் இதை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

பல ஆப்பிரிக்கர்கள் ரஷ்யாவைப் பற்றி நல்ல எண்ணம் கொண்டுள்ளனர். காலனித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகள் மற்றும் பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியம் விடுதலை இயக்கங்களுக்கு அளித்த ஆதரவு ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன.

இந்த புதிய கவனத்தின் மூலம், ரஷ்யா மேற்கத்திய செல்வாக்கைக் குறைக்கவும், தனது நடவடிக்கைகளுக்கான ஆதரவைப் பெறவும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் முயல்கிறது, என்கிறார் முனைவர் கிரில்லி.

ஆப்பிரிக்க நிருபர்களுக்கான ஆர்டி பாடத்திட்டம்

ஆப்பிரிக்க செய்தியாளர்கள் மற்றும் வலைப்பதிவர்களுக்காக ஆர்டி தனது முதல் ஆன்லைன் பயிற்சியை தொடங்கியபோது, பிபிசியின் Global Disinformation Unit அதைப் பற்றி அறிய அதில் பங்கேற்றது.

"நாங்கள் உண்மையை சரி பார்ப்பதில் சிறந்தவர்கள், பொய்யான தகவல்களை பரப்பியதாக ஒருபோதும் பிடிபடவில்லை," என்று ஆர்டியின் பொது இயக்குநர் அலெக்ஸி நிக்கோலோவ் மாணவர்களிடம் கூறினார்.

ஒரு பாடத்தில் பொய்யான தகவல்களை எப்படி நிரூபிப்பது என்று விளக்கப்பட்டது.

2018-ல் சிரியாவின் டூமா நகரில் ரஷ்ய ஆதரவு அசாத் ஆட்சி நடத்திய வேதி ஆயுதத் தாக்குதலை "போலி செய்தியின் உதாரணம்" என்று பயிற்சியாளர் கூறினார். ஆனால், அந்தத் தாக்குதலை சிரிய விமானப்படை நடத்தியது என்று இரண்டாண்டு ஆய்வில் உறுதிப்படுத்திய 'வேதியியல் ஆயுத தடுப்பு அமைப்பின்' (Organisation for the Prohibition of Chemical Weapons) கண்டுபிடிப்பை அவர் புறக்கணித்தார்.

2022-ல் யுக்ரேனின் புசா நகரில் ரஷ்ய படைகள் பொதுமக்களை படுகொலை செய்ததை, ஆர்டி தொகுப்பாளர் "மிகவும் பிரபலமான பொய்" என்று கூறி மறுத்தார். ஆனால், ஐ.நா. மற்றும் சுயாதீன ஆதாரங்கள் ரஷ்ய படைகளையே குற்றம்சாட்டுகின்றன.

பயிற்சிக்குப் பிறகு பங்கேற்றவர்களிடம் பேசியபோது, பலர் இதைப் பற்றி கவலைப்படவில்லை. சிலர் ஆர்டியை, சிஎன்என் (CNN) அல்லது அல் ஜசீராவைப் போல ஒரு சர்வதேச ஊடகம் என்று பிபிசியிடம் கூறினர்.

2024ம் ஆண்டு டிசம்பரில் ஒரு எத்தியோப்பிய பத்திரிகையாளரை பேட்டி கண்டபோது, அவர் புசா படுகொலைகளை "திட்டமிடப்பட்ட நிகழ்வு" என்று ஆர்டியின் கருத்தை எதிரொலித்தார். அவரது சமூக ஊடக சுயவிவரப் படமாக புதினின் புகைப்படம் இருந்தது.

சியாரா லியோனைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் பொய்யான தகவல்களின் ஆபத்தை ஒப்புக்கொண்டார். ஆனால், ஒவ்வொரு ஊடகமும் தனித்தனி "செய்தி மதிப்பு மற்றும் பாணியைக்" கொண்டிருப்பதாகக் கூறினார்.

மத்திய கிழக்கிலிருந்து லத்தீன் அமெரிக்கா வரை

மத்திய கிழக்கில், ஆர்டி அரபிக் மற்றும் ஸ்புட்னிக் அரபிக் போன்ற ரஷ்ய அரசு ஊடகங்கள் இஸ்ரேல்-காஸா போரைப் பற்றிய செய்திகளை பாலத்தீன ஆதரவாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கின்றன என்கிறார் பேராசிரியர் ஹட்சிங்ஸ்.

லத்தீன் அமெரிக்காவிலும் ஆர்டி தனது செல்வாக்கை விரிவாக்க முயல்கிறது. அதன் இணையதளத்தின்படி, 10 நாடுகளில் ஆர்டி இலவசமாகக் கிடைக்கிறது. அர்ஜென்டினா, மெக்சிகோ, வெனிசுலா ஆகியவை இதில் அடங்கும். மேலும், மற்ற 10 நாடுகளில் கேபிள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிறது.

இலவச தொலைக்காட்சியில் ஸ்பானிஷ் மொழியில் சர்வதேச செய்திகளை வழங்குவது "ஆர்டியின் வெற்றிக்கு ஒரு காரணம்" , என்கிறார் முனைவர் ஆர்மாண்டோ சாகுவாசெடா.

கியூபா-மெக்சிகோ வம்சாவளியைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும், அரசியல் அறிவியலாளருமான அவர், குடியுரிமைக் கல்வி மற்றும் ஜனநாயகப் பண்பாட்டை ஊக்குவிக்கும் Government and Political Analysis என்ற ஆய்வு அமைப்பில் ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார்.

2022 மார்ச் முதல் உலகம் முழுவதும் யூடியூபில் ஆர்டி தடை செய்யப்பட்டிருந்தாலும், சில இடங்களில் அது தற்போதும் யூடியூபில் நுழைந்து வருகிறது.

அர்ஜென்டினாவில், 52 வயதான அனிபல் பய்கோர்ரியா ஆர்டி தொலைக்காட்சி செய்திகளை பதிவு செய்து, தனது கருத்துக்களுடன் யூடியூப் சேனலில் பதிவேற்றுகிறார்.

"பியூனஸ் ஐர்ஸில் செய்திகள் நகரத்தை மட்டுமே மையப்படுத்துகின்றன," என்கிறார் அவர். "ஆர்டி லத்தீன் அமெரிக்காவின் அனைத்து இடங்களைப் பற்றியும், உலகச் செய்திகளையும் தருகிறது."

"ஒவ்வொருவருக்கும், தாங்கள் உண்மை என்று நம்புவதைக் குறித்துத் தீர்மானிக்கும் உரிமை உண்டு"என்றும் அவர் கூறுகிறார்.

தாக்கத்தைப் புரிந்துகொள்வது

ரஷ்ய அரசு ஊடகங்களின் உலகளாவிய தாக்கத்தை அளவிடுவது கடினம்.

ஆர்டி, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 900 மில்லியன் தொலைக்காட்சி பார்வையாளர்களை சென்றடைவதாகவும், 2024-ல் 23 பில்லியன் பார்வைகளை ஆன்லைனில் பெற்றதாகவும் கூறுகிறது.

ஆனால், "அது எங்கெல்லாம் கிடைக்கிறது என்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை அளவிட சரியான வழி இல்லை," என்கிறார் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ரச்மஸ் கிளைஸ் நீல்சன். 900 மில்லியன் பார்வையாளர்கள் என்ற கூற்று " சாத்தியமற்றது" என்றும், ஆன்லைன் பார்வைகள் எளிதில் மாற்றப்படக்கூடியவை என்றும் அவர் கூறுகிறார்.

முனைவர் சாட்டர்ஜீ-டூடியும் இதன் தாக்கத்தை அளவிடுவது கடினம் என்று ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், ஆப்பிரிக்காவின் சஹெல் பகுதியில் (செனெகல் முதல் சூடான் வரை) ரஷ்யா ராணுவப் பங்கு வகிப்பதை ஒரு உதாரணமாகக் கூறுகிறார்.

மாலி, புர்கினா ஃபாஸோ, நைஜர் போன்ற நாடுகளில் ராணுவ ஆட்சிகளை ஆதரித்து ரஷ்யா செல்வாக்கு பெற்றுள்ளது, இது "பெரியளவில் பொது எதிர்ப்பு இல்லாமல் நடந்துள்ளது".

யுக்ரேன் மீதான படையெடுப்பை ரஷ்யா நியாயப்படுத்துவதும் மற்றொரு முக்கியக் கதையாக இருக்கிறது.

நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடைந்ததும், யுக்ரேன் அந்தக் கூட்டணியுடன் நெருக்கமாகியதும் தான் முழுமையான படையெடுப்புக்கான காரணம் என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இதனை "பாதுகாப்பு அச்சுறுத்தல்" என்றும், ரஷ்யா "தற்காப்புக்காக" செயல்பட்டதாகவும் அது கூறுகிறது. மேற்கு நாடுகள் இதைப் பொய் என்று மறுத்தாலும், உலகின் தெற்குப் பகுதிகளில் இந்தக் கூற்று இன்னும் தாக்கம் செலுத்துகிறது.

"ரஷ்யாவின் நேட்டோ விரிவாக்க வாதம், குறிப்பாக மெக்சிகோ மற்றும் லத்தீன் அமெரிக்காவில் கல்வி வட்டாரங்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது", என்கிறார் முனைவர் சாகுவாசெடா.

யுக்ரேனுக்கு எதிரான ரஷ்யப் போரை கண்டிப்பதில் சில தெற்கு உலக நாடுகளின் தலைவர்கள் தயக்கம் காட்டியுள்ளனர். 2022-ல் ஐ.நா. பொது சபை வாக்கெடுப்பில் பெரும்பாலான நாடுகள் போரைக் கண்டித்தன. ஆனால், பொலிவியா, மாலி, நிகரகுவா, தென்னாப்பிரிக்கா, உகாண்டா உள்ளிட்ட 52 நாடுகள் தீர்மானங்களுக்கு எதிராகவோ, வாக்களிக்காமலோ, அல்லது விலகியோ இருந்தன.

ரஷ்யாவின் இறுதிக் குறிக்கோள் என்ன என்பது குறித்து முனைவர் கிரில்லி தனது கருத்தை முன்வைக்கிறார்.

"உலகளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஷ்யா, அந்த நிலையை மாற்ற, மேற்கத்திய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டவராகவும், தெற்கு உலகின் பாதுகாவலராகவும் தன்னை காட்ட முயல்கிறது" என்கிறார் முனைவர் கிரில்லி.

"ஆர்டி மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் ரஷ்யாவின் முயற்சி ஜனநாயகத்தின் பலவீனங்களைப் பயன்படுத்தி, யுக்ரேன் ஆக்கிரமிப்பை சாதாரணமாக்குகின்றன. ரஷ்யாவை சர்வாதிகார நாடாக இல்லாமல், உலக அரசியலில் நல்ல சக்தியாக சித்தரிக்கின்றன, என்கிறார் கிரில்லி.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆர்டி, "நாங்கள் உலகம் முழுவதும் விரிவடைகிறோம்," என்று மட்டும் கூறியது. மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்தது. ஸ்புட்னிக் எந்த பதிலும் அளிக்கவில்லை.

ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்து, உலக ஒழுங்கு மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு நாம் கவலைப்பட வேண்டும்.

மேற்கு நாடுகள் ஊடக நிதியை குறைப்பதன் மூலம் "தங்களின் கவனத்தை விலக்கிக் கொள்கின்றன", இதனால் ரஷ்யா டுடே போன்றவர்களுக்கு "களம் திறந்துவிடப்படுகிறது" என பேராசிரியர் ஹட்சிங்ஸ் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "வெற்றி பெறவும், இழக்கவும் பெரிய வாய்ப்புகள் உள்ளன. ரஷ்யா முன்னேறுகிறது, ஆனால் இந்தப் போர் இன்னும் முடியவில்லை" என்கிறார் .

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு