வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை

பட மூலாதாரம், Getty Images
நெட்ஸாரிம் பாதை (Netzarim Corridor) என அறியப்படும் சாலையை வழியாக பயணிக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர்.
கடலோர பாதையில் பெருந்திரளான மக்கள் வடக்கு நோக்கி நடந்து செல்வதை டிரோன் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், EPA

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Reuters
பாலத்தீனியர்கள் கடந்த சனிக்கிழமை அன்றே, வடக்கு நோக்கி திரும்புவதாக இருந்தது. ஆனால் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலைச் சேர்ந்த அர்பெல் யெஹுத் என்ற பெண்ணை விடுவிப்பது தொடர்பான சர்ச்சையால், இஸ்ரேல் நெட்ஸாரிம் பாதையை அடைத்து வைத்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவிற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

பிறகு இதில் ஒரு முடிவு எட்டப்பட்டது. யெஹுத், வரும் வியாழக்கிழமை (ஜனவரி 30) சிறைபிடிக்கப்பட்ட மற்ற இரண்டு பணயக்கைதிகளுடன் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார்.
இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனியர்களுக்கு தெற்கு காஸாவில் இருந்து வடக்கு நோக்கி கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images
அதிர்ச்சியூட்டும் யதார்த்த நிலை

பட மூலாதாரம், Getty Images
சிலர் இந்த தருணத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தனர். ஆனால் வடக்கு காஸாவை அடைந்ததும், அங்கு அவர்கள் கண்ட யதார்த்த நிலை அதிர்ச்சியூட்டுவதாவே இருந்தது.
காஸா நகரின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், சில இடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போல காட்சியளிக்கின்றன.

பட மூலாதாரம், Reuters
வடக்கு காஸாவை அடைந்த குடும்பங்களில், முடிதிருத்தும் கலைஞரான முகம்மது இமாத் அல்-தினின் குடும்பமும் அடங்கும். தனது வீட்டை மீண்டும் பார்க்கும் ஆவலுடன் சென்றவருக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.
தனது வீடு முற்றிலும் எரிந்து போயிருந்ததாகவும், தனது சலூன்-அழகு நிலையம் திருடர்களால் சூறையாடப்பட்டதாகவும், அதன் பின்னர் அருகிலுள்ள கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் அது மேலும் சேதமடைந்ததாகவும் முகம்மது இமாத் பிபிசி நிருபரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Reuters
மற்றொன்று, லுப்னா நாசர் என்ற பெண்ணின் குடும்பம். அவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன், வடக்கு காஸாவில் உள்ள தனது கணவருடன் மீண்டும் இணைவதற்காக, சோதனைச் சாவடியின் நீண்ட வரிசையில் ஆவலுடன் காத்திருந்தார்.
ஆனால் தனது வீடு இருந்த பகுதியை அடைந்ததும் அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அவரது வீடு அழிக்கப்பட்ட இடத்திற்கு அருகே, அவரது கணவர் ஒரு கூடாரத்தில் வசித்து வருவதைக் கண்டார் லுப்னா.

பட மூலாதாரம், Reuters
"எங்கள் குடும்பம் மீண்டும் சேர்ந்துவிட்டது, ஆனால் அந்த சந்தோஷத்தை வீட்டை இழந்ததன் துக்கம் மறைத்துவிட்டது. இப்போது வடக்கு காஸாவில் உள்ள ஒரு கூடாரத்தில் வசிக்கிறோம்" என்று பிபிசியிடம் கூறினார் லுப்னா நாசர்.

பட மூலாதாரம், Reuters
ஹமாஸ் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, "இதுவரை திரும்பி வந்தவர்கள் அல்லது அடுத்தடுத்த நாட்களில் வடக்கு காஸாவை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மக்களுக்கு, தங்குமிடம் அளிக்க காஸா நகரத்திற்கு 1,50,000-க்கும் அதிகமான கூடாரங்கள் தேவைப்படும்."
வடக்கு காஸாவில் இத்தகைய நிலை உள்ளபோதிலும், தெற்கு காஸாவில் பல மாதங்களாக துன்பங்களை அனுபவித்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு இதுவொரு குறிப்பிடத்தக்க தருணமாகவே உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












