'பெரும் லாபத்தை அள்ளித் தரும் தொழில்' - உலகெங்கிலும் விண்கற்களை தேடி அலையும் வேட்டையர்கள்

ராபர்டோ வர்காஸ்

பட மூலாதாரம், Courtesy of Roberto Vargas

படக்குறிப்பு, விண்வெளியில் இருந்து விழுந்த விண்வெளி பாறைகளைத் தேடி உலகம் முழுவதும் பயணம் செய்வதற்காக, ராபர்டோ வர்காஸ் தனது மனநல ஆலோசகர் பணியை விட்டு விலகினார்.

"வானத்திலிருந்து பணம் கொட்டாது"

இந்தப் புகழ்பெற்ற கருத்துக்கு இன்று உலகெங்கிலும் உள்ள ஒரு சிறிய, ஆனால் வளர்ந்து வரும் குழுவினர் சவால் விடுத்து வருகின்றனர்.

இவர்கள் விண்வெளியில் இருந்து விழும் விண்வெளி பாறைகளை தேடி உலகம் முழுவதும் பயணம் செய்யும் 'விண்கல் வேட்டையர்கள்'.

அறிவியல் ஆர்வத்தைத் தாண்டி, சமீப காலங்களில் விண்வெளி பாறைகளைச் சுற்றி ஒரு லாபகரமான சந்தை உருவாகியுள்ளது.

ஒரு துண்டு விண்வெளிப் பொருளுக்குப் பெரும் தொகையை வழங்கத் தயாராக இருக்கும் தனியார் சேகரிப்பாளர்களின் ஆர்வம், ராபர்டோ வர்காஸ் போன்றவர்களை ஈர்த்துள்ளது.

போர்ட்டோ ரிக்கோவில் இருந்து குடிபெயர்ந்தவர்களின் மகனான இந்த அமெரிக்கர், 2021இல் தனது வேலையை விட்டுவிட்டு உலகம் முழுவதும் விண்கற்களைத் தேடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

"வானில் இருந்து ஏதேனும் ஒன்று விழுந்தால், உடனடியாக நாங்கள் கிளம்பிவிடுவோம்" என்று வர்காஸ் பிபிசி உலக சேவையின் 'தி டாக்குமென்டரி' பாட்காஸ்டில் தெரிவித்தார்.

வாழ்க்கையை மாற்றிய ஆர்வம்

வர்காஸின் விண்கல் வேட்டைப் பயணம் வெறும் ஆர்வத்தால் மட்டுமே தொடங்கியது.

"சாதாரண மக்கள் விண்கற்களை வைத்திருக்க முடியாது என்று நான் ஏனோ நினைத்தேன். அதனால் முதன்முதலில் ஒன்றை என் கையில் வைத்திருந்தபோது, நான் மிகவும் உற்சாகமடைந்தேன்," என்று அவர் விளக்கினார். அன்றிலிருந்து அவர் அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினார்.

கடந்த 2019இல் கோஸ்டா ரிகாவில் ஒரு விண்கல் விழுந்ததை அறிந்ததும், அதைத் தேடிச் செல்ல அவர் முடிவு செய்தார்.

அப்போது "என்னால் அதைத் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் என்னால் சிலவற்றை வாங்க முடிந்தது," என்று அவர் கூறினார்.

தனது தேடல் பயணத்திற்கு நிதி திரட்டுவதற்காக அவற்றை விற்பனை செய்ய அவர் முடிவு செய்தார். அதன் முடிவு அவரது எதிர்பார்ப்புகளைத் தாண்டியது.

வானில் எரிகற்கள் விழும் காட்சி

பட மூலாதாரம், Oguzhan Demir/Anadolu via Getty Images

படக்குறிப்பு, பெரும்பாலான மக்கள் விண்கற்கள் ஏற்படுத்தும் காட்சியை வேடிக்கை பார்க்கும்போது, ஒரு குழுவினர் அவற்றைப் பின்தொடர்ந்து செல்கின்றனர்

"கோஸ்டா ரிகாவுக்கு சென்ற அந்த முதல் பயணத்தில் இருந்து நான் ஒரு வெள்ளிக்கிழமை திரும்பினேன். அடுத்து வந்த திங்கட்கிழமைக்குள் நான் அந்த விண்வெளி பாறைகளை விற்று 40,000 அமெரிக்க டாலர்களுக்கும் மேல் சம்பாதித்தேன். அது என் வாழ்க்கையை மாற்றிய அனுபவம்," என்றார் அவர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்டுக்கு 50,000 முதல் 60,000 டாலர் வரை சம்பாதித்து வந்த அவர், மனநல ஆலோசகர் பணியை ராஜினாமா செய்தார். இப்போது பூமியில் விழும் விண்கற்களைக் கண்காணிப்பதையே தனது முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளார்.

புதிய சந்தையை உருவாக்குதல்

விண்வெளிப் பாறைகளைக் கண்டுபிடிக்கும் சிக்கலான பணி, இசை புகைப்படக் கலைஞராக இருந்து விண்கல் வியாபாரியாக மாறிய டேரில் பிட் போன்றவர்கள் இல்லாமல் அர்த்தமற்றதாகிவிடும்.

"நான் நியூபோர்ட் ஃபோக் ஃபெஸ்டிவலில் இருந்தபோது, ஒருவர் என்னிடம் 'ராக் ஷோவுக்கு போகலாம்' என்றார். அது பாறைகள், ரத்தினங்கள் மற்றும் தாதுக்களின் கண்காட்சி என்று எனக்குத் தெரியாது; இசை நிகழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன்," என்று டேரில் பிட் கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் அரிசோனாவில் விழுந்த விண்கல்லால் ஏற்பட்ட பள்ளத்தை சிறுவயதில் பார்த்ததில் இருந்தே அவர் விண்கற்களால் ஈர்க்கப்பட்டிருந்தார்.

"நாங்கள் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றோம், நான் சிறுவனாக இருந்தபோது சென்ற அதே இடம், அங்கே ஒருவர் அரிசோனா பள்ளத்தில் இருந்து கிடைத்த விண்கல் துண்டை விற்றுக்கொண்டிருந்தார். நான் அதை வாங்கினேன், அப்படித்தான் எல்லாம் தொடங்கியது," என்று அவர் விவரித்தார்.

"என் ஆர்வத்தை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன், அதே நேரத்தில் பணமும் சம்பாதிக்க நினைத்தேன். இவற்றை ஏல உலகுக்கு அறிமுகப்படுத்துவது முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன்," என்று அவர் மேலும் கூறினார்.

ராபர்டோ வர்காஸ்

பட மூலாதாரம், Courtesy of Roberto Vargas

படக்குறிப்பு, வர்காஸ் ஒரு சேகரிப்பாளராகத் தொடங்கி, விண்வெளிப் பாறைக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை வழங்க மக்கள் தயாராக இருப்பதைக் கண்டறிந்த பிறகு விண்கல் வேட்டையராக மாறினார்.

கடந்த 1990களில் அவர் முதல் விண்கல் ஏலத்தை அவர் ஏற்பாடு செய்தார். அன்றிலிருந்து சேகரிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் விலையும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்தப் பாறைகளின் மீது ஏன் இவ்வளவு ஆர்வம்? அவற்றின் மதிப்பு எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முன், எவை விற்கப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.

"விண்கல் என்பது விண்வெளியில் இருந்து பூமியின் மேற்பரப்பில் வந்து விழும் ஒரு பாறை," என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பணிபுரியும் பேராசிரியர் சாரா ரசல் பிபிசியிடம் விளக்கினார்.

அந்தப் பாறைகள் வளிமண்டலத்தைக் கடக்கும்போது "எரியும் நெருப்புப் பந்துகளாக" இருக்கும்போது அவை 'எரிமீன்கள்' (Meteors) என்று அழைக்கப்படுகின்றன.

"ஒரு விண்கல் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். பெரும்பாலானவை சிறுகோள்களில் (Asteroids) இருந்து வருவதாக நம்பப்படுகிறது. ஆனால் சில நிலவில் இருந்தும், சில செவ்வாய் கிரகத்தில் இருந்தும் வருகின்றன. வேறு சிலவற்றின் மூலம் எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவை அனைத்தும் விண்வெளிப் பாறைகளே," என்று அங்த நிபுணர் குறிப்பிட்டார்.

விண்கல் பாறையின் அளவு, அதுவொரு முழுமையான துண்டா, செயற்கையான பொருளின் மீது மோதியதா, அதன் கலவையின் அபூர்வதன்மை, அதன் வகைப்பாடு, தோற்றம் போன்ற காரணிகள் அதன் மதிப்பை நிர்ணயிக்கின்றன.

விண்கற்கள்

பட மூலாதாரம், Matthew Chattle/Future Publishing via Getty Images

படக்குறிப்பு, சமீபத்திய ஆண்டுகளில், விண்கல்லை அருங்காட்சியகத்தில் பார்த்து ரசிப்பதோடு மட்டும் திருப்தியடையாமல், ஒன்றைச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

"ஒரு கிராம் விண்கல்லை வெறும் 20 அல்லது 30 சென்டுகளுக்கு நீங்கள் வாங்கலாம்," என்று பிட் கூறினார். ஆனால் ஈபே (eBay) போன்ற தளங்களில் பல போலிக் கற்கள் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

இருப்பினும், அரிதான துண்டுகள் லட்சக்கணக்கான டாலர்களுக்கு விற்கப்படலாம். கடந்த ஜூலை மாதம் நியூயார்க்கில் உள்ள சோத்பிஸ் ஏல நிறுவனத்தால் 24 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் 4.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது இதற்கு ஓர் உதாரணம்.

ஒரு விண்கல்லை சாதாரண பாறையில் இருந்து எப்படி வேறுபடுத்துவது?

"ஒரு விண்கல் வளிமண்டலத்தைக் கடந்து செல்லும்போது, அதன் வெளிப்புறம் உருகி, 'ஃபியூஷன் க்ரஸ்ட்' (fusion crust) எனப்படும் மில்லிமீட்டர் தடிமன் கொண்ட ஒரு மெல்லிய ஓடு ஒன்றை உருவாக்குகிறது. இது மிகவும் தனித்துவமானது," என்று ரசல் விளக்கினார்.

மேலும் அவை பூமியிலுள்ள பாறைகளைவிட கனமாக இருக்கும் என்றும், அவற்றின் வேதியியல் கலவையைத் தீர்மானிக்கப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். விண்கற்களில் கல், இரும்பு அல்லது இரண்டின் கலவை என மூன்று வகைகள் இருப்பதாக ரசல் விளக்கினார்.

ஒரு சர்ச்சைக்குரிய வர்த்தகம்

நியூயார்க்கில் விற்கப்பட்ட விண்கல் ஒன்று, இத்தகைய பரிவர்த்தனைகள் குறித்த விவாதத்தை உருவாக்கியது.

அந்தப் பாறை 2023 நவம்பரில் நைஜர் நாட்டில் அநாமதேய நபர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் விற்பனை பொதுவெளியில் தெரிந்தவுடன், அந்த ஆப்பிரிக்க நாட்டின் அதிகாரிகளும் கல்வியாளர்களும் அந்தப் பரிவர்த்தனையின் சட்டபூர்வத் தன்மை குறித்துச் சந்தேகம் எழுப்பினர்.

விண்கல் விழுந்த இடம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விண்கற்கள் நமது தோற்றத்தை மட்டுமல்ல, விண்வெளியில் நம்மைச் சுற்றி உள்ளவற்றையும் புரிந்துகொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

"இந்த விவகாரத்தைத் தெளிவுபடுத்தவும், விண்கல் எப்படி வந்தது, அதை எடுத்தது யார், அதன் அகழ்வாராய்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதா என்பதைக் கண்டறியவும் வெவ்வேறு அமைச்சகங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் கிடைத்த பின்னரே எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்," என்று அப்து மௌனி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவர் பேராசிரியர் இடி உமுரு அமடு பிபிசியிடம் தெரிவித்தார்.

நைஜர் நாட்டில் விண்வெளிப் பொருட்கள் குறித்த தனிச் சட்டம் இல்லை, ஆனால் தாதுக்கள் மற்றும் பாரம்பரிய சொத்துக்கள் குறித்த விதிகள் உள்ளன.

"சாதாரணமாக, நாட்டை விட்டு வெளியேறும் கலாசார சொத்துகள் போன்ற பொருட்கள், அவை சார்ந்த பகுதியைப் பொறுத்து நிர்வாக அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அனுமதி கோரி, அது கிடைத்தவுடன் அந்தப் பொருள் சட்டபூர்வமாக நாட்டை விட்டு வெளியேறலாம். இல்லையெனில், அது திருட்டு அல்லது சூறையாடலுக்குச் சமம்," என்று அந்த நிபுணர் எச்சரித்தார்.

நைஜரின் செவ்வாய் கிரக விண்கல் ஏலமும் அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையும் விண்வெளிப் பாறைகளின் வணிகமயமாக்கலையும், அவை பூமியில் விழும்போது அவற்றின் உரிமையாளர் யார் என்ற கேள்வியையும் முன்னிலைப்படுத்தியுள்ளன.

விதிமுறைகள் நாட்டுக்கு நாடு பெருமளவில் மாறுபடுகின்றன என்று பேராசிரியர் ரசல் ஒப்புக்கொண்டார்.

"உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் விண்கற்களை ஏற்றுமதி செய்ய அனுமதி இல்லை மற்றும் மிகக் கடுமையான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் உள்ளன. ஆனால் பிரிட்டனில் இதற்கென தனிச் சட்டங்கள் இல்லை," என்று அவர் விளக்கினார்.

செவ்வாயிலிருந்து வந்த விண்கல்லின் புகைப்படம்

பட மூலாதாரம், CHARLY TRIBALLEAU/AFP via Getty Images

படக்குறிப்பு, ஜூலை மாதம், நைஜரில் கண்டுபிடிக்கப்பட்ட செவ்வாய் கிரக விண்கல் நியூயார்க்கில் 4 மில்லியன் டாலருக்கும் அதிகமான விலைக்கு ஏலம் போனது

பிற விண்கல் வேட்டையர்கள்

பணத்திற்காக விண்கற்களைச் சேகரிப்பாளர்களிடம் விற்று சம்பாதிப்பவர்கள் ஒருபுறம் இருக்க, இந்தப் பொருட்கள் அறிவியல் நிறுவனங்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யத் தேடுபவர்களும் உள்ளனர்.

அத்தகைய ஒரு குழு லத்தீன் அமெரிக்காவில் உள்ளது. இது பிரேசிலிய பெண் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட "அஸ்மெட்டியோரிகாஸ்" என்ற அமைப்பாகும். ஒரு விண்கல் தாக்கம் குறித்த தகவல் கிடைத்ததும் அவர்கள் பாலைவனங்கள், நகரங்கள் அல்லது காடுகளுக்குப் பயணம் செய்யத் தயங்குவதில்லை.

"நாங்கள் செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு இந்தப் புதிய விண்கல்லைத் தேடிப் புறப்படுவோம். ஏனெனில் முதலில் அதை தேடிப் பிடிப்பது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்," என்று 'அஸ்மெட்டியோரிகாஸ்' குழுவில் ஒருவரான வானிலை ஆய்வாளர் அமண்டா தோசி பிபிசியிடம் கூறினார்.

விண்வெளிப் பாறைகளின் வர்த்தகத்தை அவர் எதிர்க்கவில்லை என்றாலும், முறைப்படுத்துதலை அவர் ஆதரிக்கிறார்.

விண்கற்களின் சேகரிப்பு

பட மூலாதாரம், GUILLAUME SOUVANT/AFP via Getty Images

படக்குறிப்பு, சமீபத்திய ஆண்டுகளில் விண்கல் சேகரிப்பாளர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது, இது விஞ்ஞானிகள் விண்வெளிப் பாறைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளைச் சிக்கலாக்குகிறது.

"வர்த்தகம் இருக்கும்போது மக்கள் அதைத் தேடத் தூண்டப்படுகிறார்கள், இதன் மூலம் முக்கியமான விண்கற்கள் கிடைக்கின்றன. ஆனால் அதை ஒரு கலாசார மற்றும் அறிவியல் பாரம்பரியமாகப் பாதுகாக்கச் சட்டம் தேவை," என்று அவர் கூறினார். அர்ஜென்டினா போன்ற நாடுகளில் சட்டம் இருந்தபோதிலும், கடத்தல்காரர்களால் விண்கற்கள் குறிவைக்கப்படுகின்றன.

"வர்த்தகத்தைத் தடை செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில் விண்கற்களைச் சுற்றி வர்த்தகம் இருக்கும்போது, மக்கள் அதைத் தேடுவதற்குத் தூண்டப்படுகிறார்கள், இதன் மூலம் முக்கியமான விண்கற்கள் கிடைக்கின்றன," என்று அவர் வாதிட்டார்.

"தடை செய்யப்பட்டால், நாங்கள் ஆய்வு செய்வதற்கு விண்கற்கள் குறைவாகவே இருக்கும். ஆனால் விண்கல்லை ஒரு கலாசார மற்றும் அறிவியல் பாரம்பரியமாகப் பாதுகாக்க ஒரு சமநிலை தேவை. அப்போதுதான் எங்களிடம் ஆய்வு செய்யப் போதுமான மாதிரிகள் இருக்கும். அதனால்தான் ஒரு சட்டம் தேவை," என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், விதிமுறைகள் எப்போதும் போதுமானதாக இருப்பதில்லை. அர்ஜென்டினா இதற்கு ஓர் உதாரணம்; இது தொடர்பாகச் சட்டம் இருந்தபோதிலும், அதன் பரந்த விண்கல் சேகரிப்பு சமீபத்திய ஆண்டுகளில் கடத்தல்காரர்களால் குறிவைக்கப்பட்டுள்ளது.

அந்த தென் அமெரிக்க நாட்டில் 'காம்போ டெல் சீலோ' உள்ளது. இது உலகின் மிகப்பெரிய விண்கல் களங்களில் ஒன்று. இது பியூனஸ் அயர்ஸுக்கு வடமேற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பேராசிரியர் ரசலும் இதே போன்ற கருத்துகளைத் தெரிவித்தார்.

"உண்மையிலேயே தனித்துவமான மாதிரிகள் கிடைக்கும்போது, அவை நமது சூரிய மண்டலத்தில் இதுவரை நாம் ஆராய முடியாத ஒரு பகுதிக்கான கதவைத் திறக்கக்கூடும். அந்தப் பாறையைப் பெறும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை என்றால், விண்வெளியைப் பற்றி நம்மால் அதிகம் கற்றுக்கொள்ள முடியாது. இது எதிர்கால விண்வெளித் திட்டங்கள் மற்றும் விண்வெளித் துறைக்கு ஒட்டுமொத்தமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும்," என்று அவர் விளக்கினார்.

"தனியார் துறையில் விண்கற்கள் மீதான ஆர்வம் அதிகமாக இருப்பதால், விலைகள் விண்ணைத் தொடுகின்றன. சில நேரங்களில் அருங்காட்சியகங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்கள் அவற்றைப் பெறுவது குறிப்பாக மிகவும் மதிக்கப்படுபவற்றைப் பெறுவது கடினமாகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால், வர்காஸ் தனது பணியை நியாயப்படுத்திப் பேசியதுடன், தான் ஒரு கொள்ளையர் என்று கூறப்படுவதை மறுத்தார்.

"ஆம், எங்களுக்குப் பொருளாதார ஊக்கம் இருக்கிறது, ஆனால் அறிவியல் ஊக்கமும் இருக்கிறது. இந்தப் பாறைகள் விஞ்ஞானிகளின் கைகளில் இருக்க வேண்டும் என்றும், அவை பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

*பிபிசி வேர்ல்ட் சர்வீஸின் 'தி டாக்குமென்டரி' பாட்காஸ்டின் இந்த எழுத்து வடிவம் ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோவால் எழுதப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு