You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா vs பாகிஸ்தான்: மோதி மைதானத்தில் இந்தியாவின் அதிகபட்ச சேஸிங் எது தெரியுமா?
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
குஜராத் நரேந்திர மோதி மைதானம் இந்திய அணிக்கு சேஸிங்கில் சாதகமானதா சுருக்கமான பார்வை: புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது?
18 ஒருநாள் போட்டிகள்
குஜராத் மொட்டேராவில் உள்ள நரேந்திர மோதி விளையாட்டு மைதானத்தில் கடந்த 1984ம் ஆண்டிலிருந்து இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை இந்த மைதானத்தில், இந்திய 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறது.
5 முறைதான் சேஸிங் வெற்றி
இதில், இந்திய அணி 10 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. அதில் 5 முறை மட்டுமே சேஸிங் செய்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தை நரேந்திர மோதி எனப் பெயர் மாற்றம் செய்தபின், இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறது. அதில், கடைசியாக 2022, பிப்ரவரி 6ம் தேதி, நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
பாகிஸ்தான் ஆதிக்கம்
இந்த மைதானத்தில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் ஒருமுறை மட்டுமே மோதியுள்ளன. அந்த ஒரு போட்டியிலும் பாகிஸ்தான் அணியே வென்றுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு, ஏப்ரல் 12ம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 315 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோரையும் பாகிஸ்தான் சேஸிங் செய்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
அணியின் அதிகபட்ச ஸ்கோர்
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 365 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு எதிராக 2010ம் ஆண்டு, பிப்ரவரி 7ம் தேதி தென் ஆப்பிரிக்க அணி இந்த பெரிய ஸ்கோரை சேர்த்து இந்திய அணியை வீழ்த்தியது.
இந்திய அணி இந்த மைதானத்தில் அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 325 ரன்கள் சேர்த்துள்ளது. 2022, நவம்பர்15ம் தேதி நடந்த ஆட்டத்தில், இந்திய அணி இந்த ஸ்கோரை சேர்த்தது.
இந்திய அணியின் அதிகபட்ச சேஸிங்
இந்திய அணி இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 324 ரன்களை சேஸிங் செய்துள்ளது.
2002ம் ஆண்டு, நவம்பர் 15ம் தேதி நடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் சேர்த்து. இந்த ஸ்கோரை 14 பந்துகள் மீதமிருக்கையில் இந்திய அணி சேஸிங் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
மிகக் குறைந்தபட்ச ஸ்கோர்
இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் 85 ரன்களாகும். 2006ம் ஆண்டு அக்டோபர8ம் தேதி நடந்த ஜிம்பாப்பே, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே 85 ரன்களில் சுருண்டது.
இந்த மைதானத்தில் இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 100 ரன்களாகும். கடந்த 1993ம் ஆண்டு, நவம்பர் 16ம் தேதி நடந்த ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 202 ரன்கள் சேர்த்தது, இந்த 203 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல், 100 ரன்களில் இந்திய அணி சுருண்டு தோல்வி கண்டது.
ரோஹித் சர்மா டாப்
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் 342 ரன்கள் சேர்த்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 221 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் 2 அரைசதங்கள் அடங்கும். ரோஹித் சர்மா இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 95 ரன்கள் சேர்த்துள்ளார்.
விராட் கோலி 8 போட்டிகளில் விளையாடி 176 ரன்கள் சேர்த்துள்ளார், இதில் ஒரு அரைசதம் அடங்கும். ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்கள், கேஎல்.ராகுல் 49 ரன்கள், ரவிந்திர ஜடேஜா 48 ரன்கள் சேர்த்துள்ளனர். ஆனால், ராகுல் திராவிட், சச்சின், கங்குலி, கம்பீர், ராயுடு தவிர எந்த இந்திய பேட்டரும் இதுவரை சதம் அடிக்கவில்லை.
சதம் கண்ட வீரர்கள்
தனிநபர் பேட்டர் வரிசையில் சவுரவ் கங்குலி அதிகபட்சமாக 144 ரன்களை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2000ம் ஆண்டு, டிசம்பர் 5ம்தேதி நடந்த ஆட்டத்தில் சேர்த்துள்ளார். அடுத்தார்போல் சச்சின்(123), ராயுடு(121), திராவிட்(109), கம்பீர்(103) ரன்கள் சேர்த்துள்ளனர்.
கடைசித் தோல்வி
இந்திய அணி இந்த மைதானத்தில் கடைசியாக 2011ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 ரன்களில் தோற்றது. அதன்பின் இந்த மைதானத்தில் 4 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணியே வென்றுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)