காஸாவில் பாலத்தீனர்கள் தஞ்சம் புகுந்திருந்த பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் - என்ன நடந்தது?
இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் தாக்குதல் நடத்தப்பட்ட அல் டபாஈன் பள்ளி ஹமாஸ் மற்றும் இஸ்லாமியவாத ஜிகாதிய தீவிரவாதகளின் மையமாக செயல்பட்டதாகவும் அதில் 20 தீவிரவாதிகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 47 பேர் காயமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சகத்தின் அவசர ஊர்தி சேவை தெரிவித்ததாக ஏபி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
முன்னதாக மீட்பு சேவையான காசாவின் பொது பாதுகாப்பு முகமை, குறைந்தது 90 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவித்தது. ஆனால் இந்த எண்ணிக்கையை பிபிசியால் சுயாதீனமாக பரிசோதிக்க முடியவில்லை.
கடந்த சில வாரங்களாக இம்மாதிரியாக மக்கள் தஞ்சம் அடைந்த பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
ஜூலை 6ஆம் தேதி வரையில் காசாவில் உள்ள 564 பள்ளிகளில் 477 பள்ளிகள் நேரடியாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன என ஐநா தெரிவித்துள்ளது.
தற்போது தாக்குதலுக்கு உள்ளான அல் டபாஈன் பள்ளியில் 1000க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். பெய்ட் ஹனோன் நகர மக்களை அங்கிருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டிருந்த நிலையில் அங்கிருந்த மக்கள் அந்த பள்ளியில் தஞ்சம் அடைந்தனர்
அந்த கட்டடம் மசூதியாகவும் செயல்பட்டு வந்ததாகவும் அதிகாலை தொழுகையின்போது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய உளவு அமைப்புகளின் தகவல்படி அல் டபாஈன் பள்ளியில் மூத்த கமாண்டர்கள் உட்பட சுமார் 20 ஹமாஸ் மற்றும் இஸ்லாமியவாத ஜிகாதிகள் முகாமிட்டிருந்ததாகவும் அங்கிருந்து தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹமாஸ் அதிகாரிகள் வெளியிட்ட பலி எண்ணிக்கை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்ட எண்ணிக்கையுடன் ஒத்துப் போகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலை கொடூரமான குற்றம் என்று தெரிவித்துள்ள ஹமாஸ் பாலத்தீன மக்களை அழிக்கும் இஸ்ரேலின் போரை மேலும் தீவிரப்படுத்தும் ஒரு ஆபத்தும் இதனால் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த வாரங்களில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்தும் தாக்குதல்களில் இம்மாதிரியாக பள்ளி கட்டங்களை இலக்கு வைப்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனை ஹமாஸின் ராணுவ கட்டமைப்புகளுக்கு எதிரான தாக்குதல் என இஸ்ரேல் தெரிவிக்கிறது.
ஜூலை மாதம் தொடக்கத்திலிருந்து இம்மாதிரியாக பல பள்ளிகள் இலக்கு வைக்கப்பட்டன.
தாக்குதல் நடக்கும் ஒவ்வொரு சமயமும், ஹமாஸ் குழுவினர் அங்கு ஒளிந்திருப்பதாகவும், தாக்குதல்கள் நடத்துவதற்கான திட்டங்கள் வகுப்பதற்கான கமாண்ட் செண்டராக அந்த கட்டடத்தை பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் தெரிவிக்கிறது. ஆனால் ஹமாஸ் அதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.
தங்களது இருப்பிடங்களிலிருந்து தப்பி வந்து இம்மாதிரியான கட்டடங்களில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்கள்தான் இந்த தாக்குதலுகளுக்கானக்கான விலையை கொடுக்க வேண்டியதாகிவிடுகிறது.
போருக்கு முன்னதாக இந்த பள்ளிகள் பல ஐநாவால் நடத்தப்பட்டன. எனவே ஐநாவும் இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனிய கொல்லப்பட்டதால் சுணக்கமடைந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த மாதிரியான தாக்குதலால் மேலும் தடைப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை.
போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டுவதில் மத்தியஸ்தம் செய்து வரும் எகிப்து ஆயுதமற்ற பாலத்தீன மக்களை வேண்டுமென்றே கொல்வதன் மூலம் அரசியல் ரீதியாக இஸ்ரேல் போரை நிறுத்த விரும்பவில்லை என்பது தெரிகிறது என தெரிவித்துள்ளது.
இம்மாதிரியான தாக்குதல்கள் போர் நிறுத்தத்திற்கு தடை ஏற்படுத்தும் இஸ்ரேல் அரசாங்கத்தின் முயற்சிகளின் அறிகுறிகள் என ஜோர்டான் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



