You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இளவரசியின் மேலாடை இல்லாத படம்: பிரஞ்சு பத்திரிகை 1 லட்சம் யூரோ இழப்பீடு தர உத்தரவு
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி, இளவரசி கேத்தரைனின் மேலாடை இல்லாத புகைப்படத்தை பிரசுரித்த பிரஞ்சு பத்திரிகை, இளவரசிக்கும், அவரது கணவருக்கும் தலா 50 ஆயிரம் யூரோ இழப்பீடு தரவேண்டும் என பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு இத்தம்பதியர் பிரான்சில் உள்ள புரோவான்ஸ் என்ற இடத்தில் விடுமுறையைக் கழித்தபோது எடுக்கப்பட்ட இப்படங்கள் அவர்களது அந்தரங்கத்தில் செய்யப்பட்ட தலையீடு என்று நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டது.
படத்தை வெளியிட்ட 'க்ளோசர்' பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் உரிமையாளருக்கு நீதிபதி , அவர்களுக்கு விதிக்கப்படும் மிக அதிகபட்ச அபராதமான 45,000 யூரோக்கள் அபராதமாக விதித்தார்.
அரச குடும்பத்து தம்பதிகள் 1.6 மில்லியன் யூரோ இழப்பீடு கோரியிருந்தனர்.
மொட்டை மாடியில் கேத்தரைன் சூரியக் குளியல் எடுக்கும் அந்தப் படங்கள், நீண்ட தொலைவில் இருந்து எடுக்கும் லென்ஸ் உதவியால் எடுக்கப்பட்டு, 2012ல் வெளியான க்ளோசர் பத்திரிகையின் அட்டைப் படத்திலும், உள்பக்கங்களிலும் பிரசுரிக்கப்பட்டன.
இளவரசியின் நீச்சல் உடைப் புகைப்படங்களை வெளியிட்ட 'லா புரோவான்ஸ்' என்ற வட்டாரப் பத்திரிகை 3,000 யூரோ இழப்பீடு வழங்கவும் நீதிபதி ஃப்ளாரன்ஸ் லஸ்ஸெர்ரே-ஜீன்னின் உத்தரவிட்டார்.
க்ளோசர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மற்றும் புகைப்படக் கலைஞர் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்கு நடந்தது.
படம் எடுத்தது, பிரசுரித்தது தொடர்பாக, அந்த ஆறு பேர் மீதான குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டன.
மிகுந்த வலியைத் தருகிறது
கடந்த மே மாதம் வழக்கு விசாரணை நடந்தபோது, இளவரசர் வில்லியம் வெளியிட்ட அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டது. விரட்டிப் படமெடுக்கப்பட்டதால் தமது தாய் டயானாவுக்கு நேர்ந்த அனுபவம் இருப்பதால், அந்தரங்க அத்துமீறல் மிகுந்த வலியைத் தருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :