You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"எங்கள் போராட்டம் ஓயாது" - இலங்கை நடிகை தமித்தா கைதுக்கு முன்பு பேட்டி
இலங்கையின் சிங்கள சினிமா நடிகையும் 'கோட்டா கோ கம' மக்கள் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான தமித்தா அபேரத்னவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது, வலுக்கட்டாயமாக ஜனாதிபதி செயலகத்தினுள் நுழைந்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் தமித்தா அபேரத்ன செப்டம்பர் 7ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து செப்டம்பர் 8ஆம் தேதி கோட்டே நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து தமித்தாவை செப்டம்பர் 14ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் தமித்தா கலந்து கொண்டிருந்தார்.
அப்போது ஊடகங்கள் முன்பாக பேசிய தமித்தா, அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் மிக கடுமையாகச் சாடினார்.
"மக்கள் வாழ முடியாத அளவுக்கு பொருட்களின் விலைகள் தற்போது அதிகரித்துள்ளன. குழந்தைகளுக்கு பால்பெட்டி வாங்குவதற்குக் கூட, தாய்மார்களிடம் பணமில்லை. அங்குள்ளவர்களுக்கு (ஆட்சியில் இருப்பவர்கள்) மக்களின் துயரங்கள் புரிவதில்லை" என்று தமித்தா கூறினார்.
"இவர்கள் நினைக்கிறார்கள் போராட்டம் முடிந்து விட்டது என்று. காலிமுகத்திடலுடன் போராட்டத்தைச் மட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அது அப்படியல்ல என்று நாம் காட்டினோம். தங்கள் கதிரைகளையும் பதவிகளையும் பாதுகாப்பதவர்கள்தான் இவர்கள். இவர்களே இன்று அரசியலில் இருக்கின்றனர் என்று தமித்தா சாடினார்.
இதற்குப் பின்னர் மக்கள் - இந்தக் கட்சிகளுக்கு நிறங்களுக்கு அடிமையாகாமல் அவற்றைத் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்காக, நாங்கள் வென்றெடுத்தவற்றைப் பாதுகாப்பதற்காக எழுச்சியடையாது விட்டால், இந்தக் கெட்டவர்கள் மறுபடியும் வந்து அமர்ந்து விடுவார்கள். தயவு செய்து அதற்கு இடமளிக்க வேண்டாம். உங்களுக்கு நடக்கும் அத்தனை அநியாயங்கள் தொடர்பிலும் வெளியே வந்து பேசுங்கள்" எனவும் அவர் கூறினார்.
"இங்கு கூடியிருக்கும் எங்களை விடவும் மூன்று நான்கு மடங்கு அதிகமான பொலிஸார் இங்கே வந்துள்ளனர். போராட்டத்துக்கு அவ்வளவு பயமா? அப்படிப் பயப்படத்தான் வேண்டும். ஏனென்றால் திருடர்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இவ்வாறு வந்துள்ளார்கள். அப்பாவி போராட்டக்காரர்களைப் பாதுகாப்பதற்காக இவர்கள் இங்கே வரவில்லை" எனக் கூறிய அவர், "இந்தப் போராட்டம் வெற்றியடையும் வரை நாங்கள் திரும்பப் போவதில்லை" என்றார்.
இதன் பின்னரே நடிகை தமித்தா கைது செய்யப்பட்டார்.
அரசியல் தலைவர்கள் கருத்து
இதேவேளை தமித்தா அபேரத்ன கைதுசெய்யப்பட்டமையானது அரச மிலேச்சத்தனம் என்றும் அரச பயங்கரவாதம் எனவும் நாடாளுமன்றில் இன்று தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அதனை நிறுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
கைது செய்யப்பட்டிருந்த தமித்தாவை பார்ப்பதற்காக கோட்டே பொலிஸ் நிலையத்துக்கு சஜித் சென்றிருந்தார்.
இதைத்தொடர்ந்து, நடிகை தமித்தாவை இலக்கு வைப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு நாடாளுமன்றில் வேண்டிக்கொண்ட அவர்; "தமித்தா அபேரத்ன எந்தவித சட்டவிரோத செயலையும் செய்யவில்லை, பொது சொத்துக்களையோ தனியார் சொத்துகளையோ சேதப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடவில்லை" என அவர் கூறினார்.
பேச்சுச் சுதந்திரம், எதிர்ப்பு வெளியிடும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் போன்ற மனித உரிமைகளையே தமித்தா பயன்படுத்தினார் என குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர்; அவரை விடுதலை செய்வதற்கு ஆவண செய்யுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும் கலைஞர்கள், இளைஞர் - யுவதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இந்த அரசாங்கத்தின் கண்களில் காட்ட முடியாதுள்ளது எனவும் சஜித் பிரேமதாஸ இதன்போது கேலியாகக் கூறினார்.
இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்கத்திலிருந்து கூச்சல் சத்தம் எழுந்தது.
அன்போது பேசிய சஜித் பிரேமதாஸ, "நாமல் ராஜபக்ஷ இங்கு கூச்சலிடுகின்றார். தமித்தாவை பற்றித்தான் நான் இங்கு பேசினேன்; நீங்கள் ஏன் கூச்சலிடுகிறீர்கள்" என கேள்வியெழுப்பினார்.
தமித்தா அபேரத்னவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவதற்கு தனக்கு உரிமை உள்ளது எனக் கூறிய சஜித் பிரேமதாஸ, இந்தப் பிரச்சினைகளை ஜெனீவாவில் அல்ல; இந்த நாட்டுக்குள்ளேயே தீர்க்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, தமித்தாவை பொலிஸ் நிலையத்துக்கு செப்டம்பர் 9ஆம் தேதியன்று வருமாறு பொலிஸார் அழைத்திருந்தாகவும், தியத்த உயன பகுதியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமித்தா கலந்து கொண்டமையை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவரின் உரையில் தெரிவித்திருந்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னணிச் செயற்பாட்டாளர்கள் பலர், கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்