You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை சிக்கல்: எஞ்சிய 2 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகே பதவி விலகுவேன் - கோட்டாபய ராஜபக்ஷ
தனது எஞ்சிய இரண்டு வருட பதவி காலத்தையும் நிறைவு செய்த பிறகே விலகப்போவதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ப்ளும்பெர்க் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவி விலக போவதில்லை எனவும், ஐந்து வருடங்களுக்கு மக்கள் ஆணை அளித்துள்ளதால் எஞ்சியுள்ள இரண்டு வருடங்களையும் நிறைவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பதவி விலகுமாறு மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்ற நிலையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தான் இனி தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
''தோல்வியடைந்த ஜனாதிபதியாக என்னால் செல்ல முடியாது. எனக்கு ஐந்து வருடங்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், எரிபொருள், எரிவாயு, மருந்து வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதனால், கோட்டா கோ கம என்ற மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு, ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு இன்று 50 நாட்களை கடந்து அரச எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி செயலகம் மாத்திரமன்றி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையின் பணவீக்கம் சுமார் 40 வீதத்தை எட்டியுள்ளது.
இவ்வாறு இடம்பெற்ற போராட்டம், கடந்த மே மாதம் 9ம் தேதி வன்முறையாக மாறியதுடன், அந்த வன்முறைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சுமார் 10 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், 200ற்கும் அதிகமானோர் காயமடைந்ததுடன், பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டிருந்தன.
இந்த வன்முறைகளை அடுத்து, பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மே மாதம் 12ம் தேதி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய பிரதமராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்.
இதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர், சர்வதேச நாணய நிதியம், இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனுதவியாக கோரியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிக காலம் உள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ பதவிக் காலம் முடிவடையும் வரை அரசியல் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர் ஒருவரை மேற்கோள்காட்டி ப்ளும்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் குறைந்தது 6 மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு முன்பாக சென்றிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி கூறியுள்ளார்.
தான் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் உதவியை நாடியுள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் அந்த நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடி, கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மசகு எண்ணெயை நீண்ட கால உடன்படிக்கையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள கத்தார், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுடன் தான் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், மானிய அடிப்படையில் முன்னோக்கி செல்ல வேண்டும். அரச ஊழியர்களை அல்லது ராணுவத்தை குறைக்க முடியாது. ஆள்சேர்ப்பை குறைக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்