You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமி: ஒருவர் கைது - இதுவரை நடந்தது என்ன?
இலங்கை பண்டாரகம - அட்டலுகம பகுதியில் மர்மமாக கொலை செய்யப்பட்ட சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை பொது மருந்துவமனையில் இன்று (30) பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இந்த சிறுமியின் கொலை தொடர்பில் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் இன்று(30) கைது செய்யப்பட்டார்.
இவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இவர் நீதிமன்றத்தில் முன் இன்று நிறுத்தப்படவுள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த வௌ்ளிக்கிழமை (27) முற்பகல் காணாமல்போன சிறுமியின் சடலம் மறுநாள் மாலை சதுப்பு நிலமொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
என்ன நடந்தது?
இலங்கை களுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு, கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக முற்பகல் 10 மணியளவில் சிறுமி சென்றுள்ளார்.
இவ்வாறு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இந்த சிறுமி கோழி இறைச்சியைக் கொள்வனவு செய்து, மீண்டும் வீட்டிற்கு திரும்பும் காட்சிகள், அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், குறிப்பிட்ட சிறுமியைத் தேடுவதற்காக காவல்துறையின் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
பண்டாரகம காவல்துறையினருக்கு மேலதிகமாக, பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சிறுமியின் சடலம் சனிக்கிழமையன்று மாலை கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக சுமார் இருபதுக்கும் அதிகமானோரின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை தொடங்கியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்