கச்சத்தீவு விவகாரம்: "தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்து சாத்தியமற்றது" - இலங்கை கடல் தொழில் அமைச்சர்

(இன்றைய (மே 28) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

கச்சத்தீவை விடுவிப்பது தொடர்பான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்து சாத்தியமற்றது என, இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சென்னையில் மே 26 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்திய பிரதமர் மோதியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவென கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்தை நான் மறுக்கா விட்டாலும், அவரின் கருத்து சாத்தியமற்றது. தமிழ்நாடு மக்கள் முதலமைச்சருக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கலாம். அதற்காக முதலமைச்சர் இவ்வாறான கருத்தை தெரிவித்திருக்கலாம். அவரின் கருத்து உண்மையாக இருக்குமாக இருந்தால் இந்திய பிரதமர் நரேந்திர மோதி இதனை கூறியிருப்பார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் ஒரு இணக்கப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கச்சத்தீவால் யாருக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்று சட்டப்பூர்வமாக கடிதமொன்றை அனுப்ப உள்ளேன்" என தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா - ஜப்பான் இணைந்து இலங்கைக்கு உதவ தீர்மானம்

பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது என, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், "டோக்கியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே இலங்கைக்கான உதவிகளை வழங்குவது குறித்து இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது இந்திய - பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானின் அனுசரணையுடன் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் இலங்கை அரசினால் இடைநிறுத்தப்பட்ட பின்னரும் ஜப்பான் இலங்கைக்கு உதவ முன்வந்திருக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு இரண்டு பில்லியன் டாலர் கடனுதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்தியா ஏற்கெவே இலங்கைக்கு 2.4 பில்லியன் டாலர் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. மேலும், 1.5 பில்லியன் டாலர் உதவியை இலங்கை இந்தியாவிடம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவும் ஜப்பானும் தற்போது இணைந்து இலங்கைக்கு உதவி வழங்க தீர்மானம் எடுத்துள்ளது.

"சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை"

பொருளாதார மீட்சிக்காக சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அடுத்தகட்ட தீர்மானம் குறித்து எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது விசேட உரையாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக அச்செய்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு தரப்பினருடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமக்கு உதவிபுரிய நாடுகள் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றவுடன் பெரும் நிதியுதவினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் சர்வதேச நிறுவனத்துட ந் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன். ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருவார காலங்கள் உள்ளன.

சர்வதேச நாயண நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து எமது கொள்கை திட்டங்களை பரிசீலனை செய்து அடுத்தக்கட்ட நகர்வினை முன்னெடுப்பார்கள்.

எரிபொருள். எரிவாயு, உரபிரச்னைக்கு தீர்வு காண உரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: