You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ: 'மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது; அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்'
தன் மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் - சாலியபுர கஜபா படையணியில் இன்று (10) நடைபெற்ற 72வது இராணுவ தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த இரண்டு வருடங்களாக போராடும் வகையில், நாட்டை முடக்குதல், பல்வேறு தடைகளை ஏற்படுத்துதல் போன்ற செயற்பாடுகளின் ஊடாக நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
பொருளாதாரம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டமைக்காக தான் நியாயம் கூறக்கொண்டிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், மக்களுக்காக தாம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான நிலையில், தன் மீதும் அரசாங்கத்தின் மீதும் மக்கள் வைத்த எதிர்பார்ப்புக்கமைய செயற்படவில்லை என்று, மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தான் மட்டுமன்றி, அமைச்சர்களும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எனினும், கோவிட் தொற்றை கட்டுப்படுத்தி, நாட்டை புதிய உத்வேகத்துடன் அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதாக மக்களுக்கு ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.
தான் உறுதியளித்த வகையில், புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறை ஆகியவற்றை அடுத்த வருடத்திற்குள் உருவாக்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற உறுதிமொழியை இந்த வருட இறுதிக்குள் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தனது கொள்கையாக காணப்படுகின்றது என அவர் கூறுகின்றார்.
இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்காமல் இருக்கும் வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே தனது பிரதான பொறுப்பு எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
பிரிவினைவாத தீவிரவாதத்தை தாம் தோற்கடித்து, தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணிகளை கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.
அடிப்படை மதவாதத் தீவிரவாதம், உலகம் முழுவதும் இன்று காணப்படுவதாக கூறிய அவர், இன்று அதற்கு முகம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு நிலைக்கு நாடு செல்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- சீனாவுடன் மோதும் சின்னஞ்சிறு தீவு: தைவானின் வரலாறு தெரியுமா?
- சசிகலாவை தூண்டிவிடுகிறதா தி.மு.க - பொன்விழா நேரத்தில் அ.தி.மு.க குற்றச்சாட்டு ஏன்?
- கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது லாபகரமானதா? - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் விளக்கம்
- 'பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தின் தந்தை' அப்துல் கதீர் கான் மரணம் - யார் இவர்?
- ஜெனோபியா: ரோமாபுரி பேரரசுக்கே சவால் விட்ட பால்மைரா சிற்றரசியின் வரலாறு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்