You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் சில அறிவிப்புகளுக்கு இலங்கை அரசு மகிழ்ச்சி
தாலிபன்களின் சில அறிவிப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்தும் மதிக்குமாறும் தாலிபன்களை இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்து ஓரிரு தினங்களில் இலங்கை அரசாங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு தாலிபன்கள், ஒரு மத்திய நிலையமாக இருப்பார்களாயினும், அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?
தாலிபன்கள் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதுடன், எந்த வெளிநாட்டினருக்கும் தீங்கு செய்ய மாட்டோம் என உறுதியளித்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
அதே வேளை, அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்தும் மதிக்குமாறு தாலிபன்களை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்கின்றது என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியப் பாரம்பரியத்தைப் பின்பற்றி ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொழில்களில் ஈடுபடலாம் மற்றும் பெண்கள் பாடசாலைகளுக்குச் செல்லலாம் என தாலிபன்கள் அளித்த உறுதிமொழி தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து தாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதாகவும் இலங்கை கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே தமது முதன்மையான கவலை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு அமெரிக்கா, ஐக்கிய பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளிநாட்டு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உரிய தரப்பினரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான அனைத்து வசதிகளையும் வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் மொத்தமாக 86 இலங்கையர்கள் உள்ளதாகவும், அவர்களில் 46 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.
அத்துடன், தற்போதைய நிலவரப்படி, 20 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், வெளிநாட்டு அமைச்சு அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கிடையில், 20 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது
நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய பொறிமுறையொன்று நிறுவப்படும் என தாலிபன்கள் வெளியிட்ட அறிவிப்பை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்கின்றது என இலங்கை தெரிவிக்கின்றது.
தற்போது தாலிபன் ஆட்சியில் இருப்பதால், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை உறுதிப்படுத்துமாறும், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.
ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்திலும் சீர்குலைக்கும் விளைவை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பான இடத்தையும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தையும் மேம்படுத்த முயலும் தீவிர மதவாதக் குழுக்களின் சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, ஆப்கானிஸ்தானின் அன்றாட நிலைமைகளை இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்க் உறுப்பினர் என்ற வகையில், இந்த விடயம் தொடர்பில் எந்தவிதமான பிராந்திய முயற்சிகளுக்கும் உதவுவதற்கு இலங்கை தனது பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளது என இலங்கை உறுதியளித்துள்ளது.
பிற செய்திகள்:
- உங்கள் பணத்தை எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம் - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் ஆலோசனை
- சென்னை தினம்: மெட்ராஸ் நகரத்தின் உண்மையான வயது என்ன?
- இன்கா நாகரிகம்: ஆன்மிகம், ஆவியுலகம், நம்பிக்கை துரோகத்தை அனுபவித்த வரலாறு
- அலைபேசி ஆபத்து: சமூக ஊடகங்களுக்கு அடிமை ஆனவர்கள் மீள்வது எப்படி?
- ஆஃப்கனில் அஞ்சி நடுங்கும் ஒருபாலுறவினர் - 'தாலிபனால் கண்ட இடத்திலேயே கொல்லப்படுவேன்'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்