You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கண்டியில் வெடித்தது போராட்டம்: முஸ்லிம் அமைச்சர், ஆளுநர்களை நீக்கக்கோரிக்கை
முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மற்றும் இரண்டு முஸ்லிம் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கண்டி நகரில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரையே பதவி நீக்குமாறு வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் கடந்த 31ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
கண்டி தலதா மாளிகைக்கு முன்னபாக அத்துரெலிய ரத்தன தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், அத்துரெலிய ரத்தன தேரர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பில் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார்.
அத்துடன், அத்துரெலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கண்டி தலதா மாளிகைக்கு அருகில் சென்ற பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், நேற்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னதாக குறித்த அரசியல்வாதிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு கலகொடஅத்தே ஞானசார தேரர் காலக்கேடு விதித்தார்.
இந்த நிலையில், கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு கண்டி வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இதன்படி, கண்டி நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், பல்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகளும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கண்டி நகரை சேர்ந்த வர்த்தகர்கள், தேரர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கண்டி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு மக்கள் நடமாட்டமும் குறைவடைந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :