You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பர்தாவுடன் கைதுசெய்யப்பட்டது புத்த மதத்தை சேர்ந்த தற்கொலை குண்டுதாரியா? #BBCFactCheck
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பர்தா அணிந்த ஆண் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த இலங்கை தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடைய இந்த நபர் புத்த சமயத்தை சேர்ந்தவர் என்று அவ்வாறு பகிரப்பட்டு வரும் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு நிறைவடைந்த உள்நாட்டுப் போருக்கு பின்னர் இலங்கையில் நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
"முஸ்லிம் பெண்ணை போன்று உடை உடுத்தியுள்ள புத்த சமயத்தை சேர்ந்த ஒருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையிலுள்ள தேவாலயங்களில் தாக்குதல் நடத்திய முரடர்களில் இவரும் ஒருவர்" என்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் காணொளியில் பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த 48 மணிநேரத்தில் இந்த காணொளி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளதுடன் இதை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த காணொளி தொடர்பான பின்னணி தகவல்களை ஆராய்ந்ததில், இது போலியானது என்பது தெரியவந்துள்ளது.
இலங்கையில் பெரும்பான்மையினராக உள்ள புத்த சமயத்தை சேர்ந்தவர்களுக்கும், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்குமிடையே கடந்த சில ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது. இந்த கண்ணோட்டத்தில், சிலர் இந்த காணொளியை பரப்பியுள்ளதாக தெரிகிறது.
இருந்தபோதிலும், இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை அந்நாட்டு காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு உள்ளூரை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்னும் இஸ்லாமியவாத அமைப்பே காரணமென்று இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க, "இந்த தாக்குதல் வெறும் உள்நாட்டினரால் மட்டும் நிகழ்த்தப்பட்டதல்ல" என்று தெரிவித்தார்.
அதே சமயத்தில், இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பொறுப்பேற்பதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு நேற்று தனது ஊடக பிரிவின் வழியே அறிவித்துள்ளது.
காணொளியின் உண்மைத்தன்மை
36 நொடிகள் நீடிக்கும் அந்த காணொளியில், பர்தா அணிந்துள்ள நபரொருவரை காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
இந்த காணொளியை முதல் முறையாக யார் வெளியிட்டது என்பது குறித்து இணையத்தில் தேடினோம். அதில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் ஆண்டு 'நேத் நியூஸ்' எனும் இலங்கையை சேர்ந்த உள்ளூர் ஊடகம் இதை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அந்த செய்தித் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியின்படி, இலங்கை தலைநகர் கொழும்புவை அடுத்துள்ள ராஜ்கிரியா பிராந்தியத்தில் காணொளியில் விசாரிக்கப்படும் நபர் பர்தா அணிந்து மூன்று சக்கர வாகனத்தில் வந்ததாகவும், அவரை பார்த்து சந்தேகமடைந்த அதன் ஓட்டுநர், காவல்துறையினரிடம் தெரிவித்ததன் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த 'எக்ஸ்பிரஸ் நியூஸ்' எனும் செய்தித் தளமும் அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், 'நேத் நியூஸ்' செய்தி நிறுவனத்துக்கு சொந்தமான 'நேத் எப்எம்' எனும் ஃபேஸ்புக் பக்கத்தில், தற்போது வைரலாகி வரும் காணொளி உண்மையில் 2018ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று சில தினங்களுக்கு முன்பு விளக்கமளித்துள்ளது.
"விழிப்புணர்வு! இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது; ஆனால், இது 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 29ஆம் தேதி பதிப்பிக்கப்பட்ட காணொளியாகும்" என்று அந்த ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்