கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள்

இலங்கையின் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த தகவலை கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா - கலிஃபோர்னியா நீதிமன்றமொன்றில் சிவில் வழக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் இளைஞர் ஒருவரும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.

கனடா பிரஜையான ரோயி சமாதானம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சித்தி ரவத்தைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு கடந்த ஞாயிற்றுகிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷஅமெரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலிஃபோனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கோத்தபய ராஜபக்ஷவை தனியார் விசாரணை குழுவொன்றின் மூலம் கண்டறிந்து, இந்த அறிவித்தலை கையளித்ததாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்றால், தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா, அவரை விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் இதுவெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :