You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை போர்க்குற்றம்: "ரணில் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார்" - மஹிந்த ராஜபக்ஷ
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக கூறி சர்வதேச சமூகத்திடம் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் இவை போர்க் குற்றம் அல்ல.
இவ்வாறான நிலையில் வடக்கில் சென்று தமிழ் மக்கள் மத்தியில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக பிரதமர் ரணில் கூறியமை எமது நாட்டை சர்வதேச சமூகத்திடம் கட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது ஆகும்.
இந்த நாட்டில் நிலவிய மோசமான போரை முடிவுக்கு கொண்டுவந்து 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அன்று இருந்த சூழலில் இருந்து நாடு முற்றாக விடுபட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்ட போது அங்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில உரையாற்றும் போது போர்க் குற்றம் இடம்பெற்றது என்று கூறியுள்ளார்.
அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வரவேற்றுள்ளதுடன் நாட்டின் பிரதமரே போர் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதால் ஜெனிவாவில் எமக்கு சாதகமாக செயற்பட முடியும் என்று கூறியுள்ளார்.ஆகவே இவர்களின் நோக்கம் என்ன என்பது இன்று தெட்டத்தெளிவாக விளங்குகின்றது.
போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க் குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின், ராணுவத்தால் குற்றம் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் இவை போர்க் குற்றம் அல்ல.
இன்று காஸ்மீர் பிரதேசத்தில் நிலைமையை பாருங்கள். இவ்வாறான மோசமான நிலைமை தான் இலங்கையிலும் நிலவியது. நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்காது போயிருந்தால் இன்றும் இலங்கை அவ்வாறான நிலமையிலேயே இருந்திருக்கும்.
எனினும் நாம் அவ்வாறான நிலமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுத்ததும், பயங்கரவாதத்தை முற்றாக அழித்ததும் போர்க் குற்றம் அல்ல. பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் போராடினோமே தவிர தமிழ் மக்களுக்காகவோ முஸ்லிம் மக்களுக்கு எதிராகவோ நாம் போர் செய்யவில்லை.
நான்கு ஆண்டுகள் நல்லாட்சியில் தலைமைத்துவத்தை வைத்துகொண்டு ஊழல் மோசடிகளை தடுக்க முடியாது போனதன் காரணத்தினால்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சியுடன் கைகோர்த்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக போராடி வருகின்றார்.இன்று ஜனாதிபதி எமது பக்கம் வந்துவிட்டார் என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அவர் முன்னிலையிலே எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு உரையாற்றினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்