You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலையக தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி நிர்ணயம்: தொழிற்சங்கங்கள் தோல்வி
இந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாயாக அதிகரிக்க, முதலாளிமார் சம்மேளனத்திடம், கூட்டு உடன்படிக்கையில் கையெழுத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.
முதலாளிமார் சம்மேளனத்துடன் வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் இந்த இணக்கத்தை வெளியிட்டுள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
அத்துடன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரவிந்திர சமரவீர ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
இன்றைய பேச்சுவார்த்தையின் பிரகாரம், பெருந்தோட்டத் தொழிலாளர் ஒருவரின் முழு சம்பளமாக 855 ரூபா நிர்ணயிக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இதன்படி, அடிப்படை சம்பளமாக 700 ரூபாவும், விலைக்கான கொடுப்பனவாக 50 ரூபாவும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றை உள்ளடக்கி 105 ரூபாவையும், நாளாந்த சம்பளமாக வழங்க இன்றைய பேச்சுவார்த்தையின்போது இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், மேலதிகமாக ஒரு கிலோகிராம் கொளுந்துக்கு 40 ரூபாவை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை சம்பளத் தொகையை வழங்குவதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவிக்கின்றார்.
அத்துடன், எஞ்சிய 50 மில்லியன் ரூபாவை பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, 150 மில்லியன் ரூபாவை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலுவை சம்பளத் தொகையை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் கூறினார்.
இதற்கமைய, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் புதிய சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு உடன்படிக்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (28) கையெழுத்திடுவதை எதிர்பார்த்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டார்.
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட அவர்களின் அடிப்படை வசதிகளை தீர்மானிக்கும் வகையில் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட கூட்டு உடன்படிக்கை கடந்த வருடம் அக்டோபர் மாதம் 18ம் தேதி காலாவதியாகியது.
இதற்கமைய, புதிய உடன்படிக்கையின் பிரகாரம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, நாடு முழுவதும் கடந்த நான்கு மாதங்களுக்கு அதிகமாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக காணப்பட்ட ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள அதிகரிப்பு, இன்றைய தீர்வின் பிரகாரம் தோல்வியில் நிறைவடைந்துள்ளதாக மலையக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
கடந்த முறை கையெழுத்திடப்பட்ட கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம், நாளொன்றிற்கு 805 ரூபா என்ற சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கடந்த கூட்டு உடன்படிக்கையில் காணப்பட்ட, நிர்வாகத்தினால் நிர்ணயிக்கப்படும் கொளுந்தை பறிக்கும் இலக்கு இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், வருகைக் கொடுப்பனவும் இல்லாது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதிக்கு முன்னர் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படாத பட்சத்தில், தான் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதாக கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்திருந்தார்.
எனினும், இலங்கையில் கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் ஆட்சி மாற்றத்தை அடுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், அமைச்சு பொறுப்புக்களை பெற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கையின் ஆட்சி மாற்றம், பெருந்தோட்டத் தொழிலாளர்ளுக்கான சம்பள அதிகரிப்பு பேச்சுவார்த்தைக்கு பெரும் இடையூறாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சி ஏற்படுத்தப்பட்ட நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை வழக்கம் போன்று இடம்பெற ஆரம்பித்திருந்தது.
இதன் பிரகாரம், இன்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிக்கை தோல்வியடைந்துள்ளதாக மலையக அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்