You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை மனிதப் புதைகுழி எச்சம்: மாதிரிகள் ஆய்வுக்கு அமெரிக்கா செல்கின்றன
இலங்கை மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித மனித உடலுறுப்பு மீதங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக இன்று வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த மாதிரிகள் அடங்கிய பொதி, மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வழங்கப்பட்டது.
இதுவரை மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளின் மூலம் 23 சிறுவர்கள் உள்ளிட்ட 277 பேரின் மனித உடல் மீதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கண்டறியப்பட்ட மனித உடல் மீதங்கள், மன்னார் நீதிவானின் நேரடி கண்காணிப்பில் தெரிவு செய்யப்பட்டு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகத்துக்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட மனித மீதங்கள் ஒரு சிறிய பெட்டியில் மிகவும் பாதுகாப்பான முறையில் பொதி செய்யப்பட்ட நிலையில் பி.232/18 என்ற வழக்கு இலக்கமிடப்பட்டு போலீஸ் வாகனம் ஒன்றில் கட்டுநாயக்கா விமான நிலையம் எடுத்துச் செல்லப்பட்டது.
எலும்புக்கூடுகள் உள்ளிட்ட உடல் மீதங்களின் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச நேரடியாக அமெரிக்க ஆய்வகத்துக்கு கொண்டுசெல்கின்றார்.
மன்னார் நீதிவான் நீதிமன்றில் கடந்த 17ம் தேதி இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகள் நகர்வு பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து புளோரிடாவில் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்தும்போது அவற்றை அவதானிப்பதற்கு காணமல் ஆக்கப்பட்டோர் சார்பாக ஒருவர் செல்வதற்கு அனுமதி கோரியிருந்தார்கள். இதற்கான அனுமதியினை மன்னார் நீதிமன்றம் வழங்கியிருந்தது.
இதற்கமைய காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் உள்பட 4 பேர்கள் மனித மீதங்கள் அடங்கிய பொதியுடன் அமெரிக்கா செல்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்