"பொதுத் தேர்தல் இன்றி பிரதமர் பதவி வகிப்பது எனது எதிர்பார்ப்பு இல்லை" - ராஜபக்ஷ

பொதுத்தேர்தல் இன்றி பிரதமர் பதவியை வகிப்பது தமது எதிர்பார்ப்பு இல்லை. இதனால் தீர்மானங்களை எடுக்கும்போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருக்க பதவியிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளிப்பதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கையெழுத்திட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் மகிந்த ராஜபக்ஷ இதனைக் கூறினார்.

இலங்கையில் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி 50 நாட்கள் வரை தொடர்ந்தது. இந்த நிலையல் மகிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருடன் ஒன்றிணைந்து தேர்தலில் 54 விதமான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்கான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகத்தின் வாக்கு வங்கியுள்ள கட்சிகளுடன் இணைந்து நாட்டிற்கு எதிரான சக்திகளை தடுப்பதற்காக, எவராலும் அசைக்க முடியாத நாடளாவிய அரசியல் கூட்டணியை கட்டியெழுப்புவோம்.'' என்று மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

''ஒரு வருடமும் மூன்று மாதங்களும் தாமதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே தமது முதன்மை இலக்கு'' என்று மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி எடுத்த தீர்மானத்திற்கு தான் மதிப்பளிப்பதாக மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மகிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் இலங்கையில் கடந்த 50 நாட்களாக ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிக்கு தீர்வைத் தருமா? அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விகளை அரசியல் ஆய்வாளர் சத்துர பண்டாரவிடம் பிபிசி தமிழ் முன்வைத்தது.

அடுத்து என்ன நடக்கும்?

ஜனாதிபதி அதிரடியாக பிரதமர் பதவிக்கு நியமித்த மகிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ள நிலையில், புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவார். நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையை நிரூபித்துள்ளதால், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாடுகளே கடந்த 50 நாட்கள் அரசியல் நெருக்கடி ஏற்படக் காரணமாக இருந்தது. மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் என்றே ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. ஆனால், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்கப் போவதில்லை என ஜனாதிபதி இதற்கு முன்னர் கூறியிருந்தார். எனினும், தற்போது வேறு தெரிவு இல்லாததால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்கவேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.

இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தன்மானப் பிரச்சினை என்பதால் ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் பதவியேற்கும் நிலை இருக்கிறது. இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிசெய்துள்ளனர். இதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை ஏற்கும்.

பிரச்சனை தீர்ந்ததா?

கடந்த 50 நாட்களாக ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியினால் பொருளாதார, சமூக ரீதியான பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமாக பொருளாதார பாதிப்பை பார்க்க வேண்டியிருக்கிறது. 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜட் நிறைவேற்றப்படவில்லை. ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் திறைசேரிக்கு நிதியைக் கையாளும் அதிகாரம் இல்லாமல் இருக்கிறது.

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கையே இந்த நெருக்கடிக்கு காரணம் என்ற குற்றச்சாட்டை ஜனாதிபதி எதிர்கொண்டுள்ளார். எனவே இந்தப் பிரச்சினைகளுகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் ஜனாதிபதி மும்முரம் காட்டுவார். ஆனால், பிரச்சனை தீர்ந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. ஜனாதிபதிக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஏற்கனவே இருந்த பிரச்சனைகளுடன் தற்போது தன்மானப் பிரச்சனையும் சேர்ந்துள்ளது. எனவே, அரசாங்கத்தைக் கொண்டுசெல்வதில் அதிகாரப்போட்டி அடுத்தடுத்த நாட்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தும்.

அப்படியெனில் தீர்வு என்ன?

மகிந்த ராஜபக்ஷ தரப்பினர் தேர்தல் ஒன்றை கோருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதால், உடனடியாக தேர்தல் ஒன்றுக்குச் செல்லுமா என்ற கேள்வியும் இருக்கிறது. அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை சரிசெய்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும். டாலருக்கு எதிராக ரூ.180 வரை மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜட் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இன்றி ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பயணம் எவ்வளவு காலத்திற்கு சாத்தியமாகும் என்ற கேள்வியும் இருக்கிறது. எனவே, பிரச்சனைக்குத் தீர்வைத் தேடி ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தல் ஒன்றுக்கு செல்ல முயற்சிக்கலாம். அப்படி தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் அதன் பின்னர் மக்கள் இந்தப் பிரச்சனை நிரந்தர தீர்வை வழங்கும் சந்தர்ப்பத்தைப் பெறுவார்கள். மக்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை காணும் வரையில், இலங்கையின் அரசியல் நெருக்கடி நீடிக்கப் போகிறது.'' என்றார் அரசியல் ஆய்வாளர் சத்துர பண்டார.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: