You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை அரசியல் நெருக்கடி: மட்டக்களப்பு ஆர்ப்பாட்டத்தில் வியாழேந்திரனுக்கு கண்டனம்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனநாயகத்தை மீறியதாகக் குற்றம் சுமத்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு காந்திப்பூங்காவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
'ஜனாதிபதியே ஜனநாயகத்தைக் காப்பாற்று' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, அரசாங்கத்தில் இணைந்து பிரதியமைச்சர் பதவி பெற்றுக் கொண்ட, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு எதிராகவும் பதாதை ஏந்தப்பட்டிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், அரசாங்கத்தை குற்றம்சாட்டும் வகையிலான பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு கோஷமெழுப்பினர்.
"சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலைநாட்டு", பாராளுமன்ற உறுப்பினர்களை அமைச்சுப் பதவிகளுக்கு வாங்காதே", ஜனநாயகமா, பணநாயகமா? பாராளுமன்றத்தை உடனே கூட்டு", "மஹிந்தவின் கொடுங்கோல் ஆட்சி எமக்கு வேண்டாம்", "ஜனாதிபதியே தமிழர்களை ஏமாற்றாதே" என்பவை உள்ளிட்ட பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஏந்தியிருந்தனர்.
கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, அமல் என அழைக்கப்படும் எஸ். வியாழேந்திரன், சில தினங்களுக்கு முன்னர், கட்சியின் தீர்மானத்தை மீறி, புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அரசாங்கத்தில் இணைந்து, பிரதியமைச்சர் பதவியொன்றினையும் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையிலேயே, நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :