You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5ஆம் தேதி கூடுகிறது'
இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 05ஆம் தேதி கூட்டுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் இடையில், இன்று வியாழக்கிழமை காலை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தகவலை அவர் வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தை நவம்பர் 11ஆம் தேதி வரை, ஜனாதிபதி ஒத்திவைத்துள்ள நிலையிலேயே, தற்போது 05ஆம் தேதி கூட்டுவதற்குத் தீர்மானித்திருப்பதாக, மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எனினும் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி இன்னும் தேதி எதையும் தீர்மானிக்கவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நவம்பர் 11ஆம் தேதிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல், அக்டோபர் 27ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று புதன்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய சந்தித்துப் பேசிய போது, நாட்டின் தற்போதைய நிலையினைக் கருத்திற் கொண்டு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்போது, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொள்வேன் எனவும், அது குறித்து அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு, சில வெளிநாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மையை நிரூபணம் செய்வதற்கான வாக்கெடுப்பில் தாம் வெற்றி பெறுவேன் என்று நம்புவதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"நான்தான் இன்னும் பிரதமராக நீடிக்கிறேன். பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எனக்குதான் உள்ளது," என்று பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து வெளியேற மறுக்கும் அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :