You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் அதிகரிக்கும் யானைகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
இலங்கையில் ரயில் ஒன்று யானைகள் மீது மோதியதில் மூன்று யானைகள் பலியாகியுள்ளன. இதில் ஒரு யானையின் வயிற்றில் இருந்த குட்டியும் பலியாகியுள்ளது.
பலியான யானைகளில் ஒன்று நிறைமாத கருவுற்றிருந்த நிலையில் விபத்தில் சிக்கியதால் அந்த யானைக் குட்டி வயிற்றிலிருந்து வெளியே வீசப்பட்டு மரணமடைந்துள்ளது. ஏனைய இரண்டு யானைகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.
கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஹபரணைக்கும் பலுகஸ்வௌ ரயில் நிலையத்துக்கும் இடையில் 127 ஆவது கிலோமீட்டர் தொலைவில் அருகில் இந்த விபத்து நடந்துள்ளது.
மூன்று பெண் யானைகள் இந்த விபத்தில் பலியாகியுள்ளன. 18 வயது கர்ப்பிணித் தாய் யானை ஒன்றும், 12 - 10 வயதிற்குட்பட்ட யானை ஒன்றும், 8 வயது யானை குட்டியொன்றும் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளன.
குறித்த காட்டுப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இன்று (புதன்கிழமை) அதிகாலை வேளையில், யானைகள் தண்டவாளத்தில் கூட்டமாக நின்றுள்ள நிலையில், எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் யானைகளுடன் மோதியுள்ளது. இதனால் எரிபொருள் பெட்டியொன்றும் தடம் புரண்டுள்ளது.
விபத்து நடந்த பிரதேசம் யானைகள் உலாவும் இடமென சமிஞ்சை பலகை பொருத்தப்பட்டுள்ளது. எனினும், ரயில் சாரதியின் கவனயீனமும், அதிக வேகமும் விபத்திற்குக் காரணம் என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விபத்து நடந்ததை அடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டியில் இருந்த எரிபொருளை சேமிக்க பிரதேசத்தில் இருந்த மக்கள் முண்டியடித்துள்ளனர். விரைந்து செயற்பட்ட பொலன்னறுவை தீயணைப்புப் பிரிவினர் மக்களை அங்கிருந்து அகற்றி, அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.
சம்பவத்தில் உயிரிழந்த யானை ஒன்றின் தும்பிக்கையின் நுனிப் பகுதி, இனந்தெரியாத ஒருவரினால் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
''இந்தப் பிரதேசத்திலுள்ள பிரதான ரயில் வீதியில், அடிக்கடி யானைகள் மீது ரயில் மோதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் மின்சார வேலிகள் அமைக்கப்பட வேண்டும். அத்துடன், வீதி சமிக்ஞை விளக்குகளும் பொருத்தப்பட வேண்டும்'' என்று பிரதேசவாசியொருவர் தெரிவித்தார்.
இலங்கையில் யானை - மனித மோதல்கள் உள்ளடங்கலாக பல்வேறு காரணங்களினால் ஆண்டுதோறும் இருநூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
யானை - மனித மோதல்களின் பின்புலத்தில் துப்பாக்கிச் சூடு, நஞ்சூட்டல், மின்சார தாக்குதல், பொறி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட மனித செயற்பாடுகளினால் கொல்லப்படும் யானைகளின் எண்ணிக்கையும் அடங்குகிறது. 65 சதவீதமான யானைகளின் மரணங்கள் துப்பாக்கிச் சூடு மரணங்கள் என பதிவாகியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை காட்டுயானைகள் தாக்கி 375 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமவாசிகளால் 1200 யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. காட்டு யானைகளின் நடமாட்டத்தைத் தடுக்க சுமார் 3 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்திற்கு மின்சார வேலி அமைக்க அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
காட்டு யானைகள், விவசாய உற்பத்திகளைச் சேதப்படுத்தியது தொடர்பில் கடந்த ஐந்து வருடங்களில் 5800 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையின் பௌத்த மதச் சின்னமாகிய யானைகள் சட்ட ரீதியாக பாதுகாக்கப்படுகின்றன. யானைகளைக் கொல்வது மரண தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பகுதிகளிலும் 7500 யானைகள் வசிப்பதாக வனவிலங்கு திணைக்களத்தின் புள்ளிவிபரத் தகவல் கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்