You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்: எதற்காக இந்த போராட்டம்?
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இலங்கையின் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
எதற்காக இந்த போராட்டம்?
கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும், தமக்கெதிராக எவ்வித வழக்குகளும் தொடுக்கப்படவில்லை எனக் கூறியும், தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கோரியும் அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு, உடல் நலக்குறைவுடன் இருந்த ஒரு சிறைக்கைதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவர் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தப் போராட்டம் குறித்து, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேலுடன் பிபிசி தமிழ் பேசியது.
''அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவர்களில் ஒரு கைதி நோய்வாய்ப்பட்டதாகக் கூறி கொழும்புவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அனுராதபுர சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சையளிக்க முடியாது எனக் கூறியே இந்த சிறைக்கைதி கொழும்புவிற்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், கொழும்பு வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இந்த சிறைக்கைதிக்கு ஏன் அனுராதபுரத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கவில்லை என்ற கேள்வி எழுக்கிறது. சிறைக்கைதியை கொழும்புவிற்கு அனுப்பி, இந்த போராட்டத்தை தடுக்க முயற்சிக்கின்றனர்.'' என்றார் அருட்தந்தை சக்திவேல்.
வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை
''அரசியல் கைதிகள் விடுக்கப்படவேண்டும் என தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விடுத்த கோரிக்கையை பிரதமர் ஏற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் கூறியிருந்தார். வழங்கிய வாக்குறுதிக்கமைய ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கூடி, இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார். எனினும், இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் ஜனாதிபதி, இலங்கையில் அரசியல்கைதிகள் எவரும் இல்லையென்று கூறுகிறார். 'சாவதற்கு அன்றி வாழ்வதற்கே' அரசியல் கைதிகள் போராட்டம் நடத்துகின்றனர்.'' என்றும் அருட்தந்தை சக்திவேல் கூறினார்.
''அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்புவில் உள்ள அரசியல் கைதிகளும் அடையாள உண்ணாப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அரசியல் கைதிகளின் பிரச்சனை, குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்க்கப்படாவிட்டால், சாகும்வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக கொழும்புவிலுள்ள அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். இந்த அரசாங்கம் தமக்கு நியாயத்தை வழங்கும் என்று அரசியல் கைதிகள் வைத்திருந்த நம்பிக்கை குறைந்ததன் அறிகுறியாகவே அவர்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.'' என்றார் அருட்தந்தை சக்திவேல்.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை
அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள போராட்டம் குறித்து சிறைக்கைதிகளின் உரிமைகளைக் காக்கும் அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.
''சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கவில்லை எனக் கூறி இந்தக் கைதிகளின் வழக்குகள் தாமதப்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரத்தில் உள்ள எட்டு சிறைக்கைதிகள் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எஸ்.செல்வராஜ் என்ற சிறைக்கைதி கொழும்புவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் மூலம் அரசியல் கைதிகளின் உரிமைகளை முடக்க முயற்சிக்கின்றனர். இதனை ஏற்க முடியாது. இவர்களுக்கெதிரான வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே இந்த சிறைக்கைதிகளின் கோரிக்கை'' என்றார் நந்திமால்.
பொது மன்னிப்பு வழங்குவதே சிறந்த தீர்வு
இந்தப் பிரச்சனைக்கு பொது மன்னிப்பு வழங்குவதே சிறந்த தீர்வு என அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய என்ற கட்சியின் பொதுச் செயலாளர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள், பாதுகாப்புப் படையினருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு பொது மன்னிப்பளித்து, இந்த நாடு தேசிய ரீதியிலும் சர்வதேசரீதியிலும் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே எதிர்காலத்தை சுபிட்சமாக்க முடியும். சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி, மன்னிப்பளிப்பதாகும்'' என்றார்.
ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில், நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
''தமிழீழ விடுதலைப் புலிகள் பிரிவினைவாத முயற்சியில் தோல்வியடைந்து, அடுத்த மே மாதத்துடன் 10 வருடங்கள் பூர்த்தியாகிறது. அதனால் ஏற்பட்ட சட்ட, சமூக, சர்வதேசப் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இப்பிரச்சினைகள், ஒன்றோடொன்று பிணைந்த வகையில், வேறு தோற்றத்துடன், வேறு பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.''
''புலிகள் இயக்கத்தின் முதல்நிலைத் தலைவர்களான ராம், நகுலன், கே.பி. போன்றவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று சுதந்திரமாக உள்ளனர். அண்மைக் காலமாக, பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். மேற்சொன்ன புலி உறுப்பினர்களுக்கு எதிராக, சட்டம் தன் கடமையைச் செய்யவில்லை. சட்டம் அனைவருக்கும் ஒரே விதத்தில் கடமையைச் செய்ய வேண்டும்.''
"இலங்கையில் விடுதலைப் புலிகள் மட்டும் பிரிவினைவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. ஜே.வி.பி.யினரும், இவ்வாறு செயற்பட்டனர். ஆனால், அவர்களுக்கு இறுதியில் அரசாங்கம் மன்னிப்பு வழங்கியது. அவர்களும், தமது தவறைப் புரிந்து ஏற்றுக்கொண்டனர். யுத்த இலக்குகளைக் கொண்டு செயற்பட்ட பாதுகாப்புத் தரப்பினர், படையினருக்கு ஒத்தாசை வழங்கிய தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்கள், பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்க வேண்டும்.
அதேபோன்று, தற்போது சிறையிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களில், யுத்த இலக்குகளைக் கொண்டு செயற்பட்டவர்களுக்கும், பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். அவர்கள் குறித்து நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். காரணம், அவர்கள் சுமார் 60 பேர் மாத்திரம் தான் உள்ளனர். போர் நிறைவின் போது கைதுசெய்யப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டு 12,600 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களைவிட, பாரிய குற்றங்களைச் செய்தவர்கள், சுதந்திரமாகத் தற்போது வெளியில் உள்ளனர். இதனால், பல தசாப்தங்களாக அவர்களைத் தடுத்து வைத்திருப்பதில், எந்தவொரு பயனும் இல்லை. இதனால், பாதுகாப்புப் படையினரோடு சேர்த்து, மேற்படி 60 பேரையும் விடுவிக்க வேண்டும்.'' என்றார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்