You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை : கருக்கலைப்பு அனுமதி மசோதா தொடர்பாக இழுபறி
இலங்கையில் கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையிலான உத்தேச சட்ட மூலம் மதத் தலைவர்களுடன் இணக்கப்பாட்டின்றி வர முடியாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பாலியல் வல்லுறவு , பிறப்பு குறைபாடுகள் என்ற மருத்துவ கருத்தின் அடிப்படையில் அதாவது பிரசவமாகவுள்ள குழந்தை குறைபாடுகளை கொண்டிருக்கும் என அறியப்பட்டால் கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் ஆலோசனை அறிக்கையொன்று ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைச்சரவையில் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், நீதி அமைச்சகத்தின் அதிகாரபூர்வ கோரிக்கைக்கு காத்திருப்பதாக சட்ட வரைவு தினைக்களம் கூறுகின்றது.
"பௌத்த , கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய சமூக பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுக்களின்போது, இரண்டு பின்புலங்களில் கருக்கலைப்பை சட்ட பூர்வமாக்குவது என்ற சிபாரிசு அறிக்கை தொடர்பாக ஒரு இணக்கப்பாடு ஏற்படவில்லை" என நீதி அமைச்சகத்தின் செயலாளர் பத்மஶ்ரீ ஜயமான ''த சண்டே டைம்ஸ் ".க்கு தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட வரைவு மதத் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். இதுவரையில் அந்த இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் உள்ளது.
குறித்த சட்ட மூல வரைவு தொடர்பாக சில பிரச்சினைகள் இருப்பதாக சுகாதார சேவைகள் இயக்குநர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர பண்டார '' த சன்டே டைம்ஸ் " க்கு தெரிவித்துள்ளார்.
"குறிப்பாக பாலியல் வல்லுறவு என்பது அது வழக்கொன்றில் நிரூபிக்கப்பட வேண்டும். 12 வாரங்களுக்குள்தான் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பை மேற்கொள்ள முடியும். வழக்கு முடிவடைய ஆண்டுகள் இல்லாவிட்டாலும் மாதங்கள் எடுக்கலாம். இதனால் பாதிப்புக்குள்ளானவர் இந்த சட்ட மூலத்தினால் நன்மை பெறுவது சிரமமானதாகவே இருக்கும் " என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :