பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா; இலங்கை அரசு மருத்துவர் மீது வழக்கு

அனுராதபுர அரச வைத்திய சாலையில் கணக்காய்வாளர் பிரிவில் அமைந்துள்ள பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் ரகசிய கேமராவோன்றை பொருத்திய அரசு மருத்துவர் ஒருவருக்கு எதிராக போலீசார் அனுராதபுர மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

போலீசார் சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையை ஆராய்ந்த நீதிபதி, சம்பந்தப்பட்ட மருத்துவரை எதிர்வரும் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

அனுராதபுர அரச வைத்திய சாலையில் கணக்காய்வாளர் பிரிவில் பணியாற்றும் பெண்கள் சிலர் சமர்ப்பித்த புகாரை அடுத்து போலீசார் இந்த விசாரணையை ஆரம்பித்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவரை அழைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மருத்துவர் நிராகரித்திருந்தார்.

அதன் பின்னர் கைவிரல் அடையாளம் தொடர்பான விசாரணைகள் மற்றும் வைத்திய சாலை ஊழியர்கள் வழங்கிய வாக்குமூலங்களை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு எதிராக போலீசார் இந்த குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போதிய ஆதாரங்கள் இருப்பதாக சட்ட மா அதிபர் வழங்கிய ஆலோசனையை அடுத்து இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய ஒரு மருத்துவருக்கு எதிராகவே இவ்வாறு போலீசார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :