You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முள்ளிவாய்க்கால்: கிறிஸ்தவ ஆலயத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த அனுமதி
மீளாய்வு விண்ணப்பத்தையடுத்து, முள்ளிவாய்க்கால் கிறிஸ்தவ ஆலயத்தின் உள்ளே நினைவேந்தல் நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் தேவாலய வளவில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்திற்கு அஞ்சலி செலுத்துவதுடன், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு கற்களைப் பதிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக காவல்துறையினரால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடையுத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடையுத்தரவு தொடர்பில் வடக்கு கிழக்கு பிரதேச சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர் எழில்ராஜன் சார்பில் வியாழனன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மனு ஒன்றைப் பரிசீலனை செய்த நீதிபதி, அந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள இடத்திற்குள் எவரும் செல்லக் கூடாது என உத்தரவிட்டது.
மேலும் இறந்தவர்களை நினைவுகூர்வதற்காக அந்த ஆலயத்தின் உள்ளே பூஜை செய்யவும், அந்த ஆலய வளவின் ஏனைய பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்துபவர்கள் கூடியிருந்து செயற்படலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி, அந்த கிறிஸ்தவ ஆலயத்தில் நினைவேந்தல் பூஜையும், வழிபாடுகளும் இடம்பெற்றன.
அத்துடன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களில் ஒரு பகுதியினருடைய பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் அடுக்கப்பட்டு, மலர்மாலைகள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வைக் கண்காணிப்பதற்காக அங்கு வருகை தந்திருந்த இராணுவ புலனாய்வாளர்கள், நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களைப் படம் பிடித்ததுடன் நிலைமைகளை கண்காணித்திருந்தனர்; எனினும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்