You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணாமல் போனோர் பிரச்சனை : கிளிநொச்சியில் சாலை மறியல் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என கோரி கிளிநொச்சியில் பேராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சி வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், ஏ9 வீதியில் சாலை மறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக தென்பகுதியில் இருந்து வடபகுதிக்குச் சென்ற தனியார் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து மாற்று வழியின் ஊடாக பிரயாணத்தைத் தொடர நேரிட்டது.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்பு கூற வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதகிளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் வியாழனன்று முழு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண மாவட்ட நகரங்களான வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட நகரங்களில் கடைகள் மூடப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் முடங்கிப் போயிருக்கின்றன.
தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆயினும், அரச பேருந்துகள் சில குறுகிய தூர சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் பயணிகளின்றி வெறுமனே ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை. பாடசாலைகள் மாணவர்கள் வரவின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதனால், அரச அலுவலகங்களில் அரச பணியாளர்களின் வருகையும் பெரிதும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தென்பகுதிக்கும் வடபகுதிக்குமான பேரூந்து சேவைகள் வவுனியா நகரத்துடன் நிறுத்தப்பட்டிருப்பதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
எனினும் ரயில் சேவைகள் வழக்கம்போல இடம்பெறுவதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் கூறினர்.
வங்கிகள் செயற்பட்ட போதிலும் பொதுமக்களின் வழக்கமான வருகை காணப்படவில்லை. இதனால் வங்கிகளில் கரும பீடங்கள் வெறிச்சோடியிருக்கின்றன.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கடையடைப்பையடுத்து, போலீஸார் பல இடங்களிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றதாக அறிவிக்கப்படவில்லை.
வவுனியாவில் ஏ9 வீதியோரத்தில் கடந்த 63 தினங்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏ9 வீதியில் வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது அங்கு வருகை தந்த காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
சம்பவத்தை அறிந்து அங்கு விரைந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடனும், காவல்துறையினருடனும் பேச்சுக்கள் நடத்தியதையடுத்து நிலைமை சுமுகமாகியது.
ஆயினும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதிக்குச் செல்கின்ற பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதாகக் குற்றம்சாட்டி சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களிலான இந்த கடையடைப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு புதனன்று பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, கடந்த அரசாங்கத்தில் இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்பட்டிருக்கவில்லை.
தென்பகுதியில் மக்கள் தமது கருத்துக்களையும் எதிர்ப்பையும் வெளியிடுவதற்கு உரிமை அளிக்கப்பட்டிருப்பதை:ப் போலவே, தமிழ் மக்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியில் வழங்கப்பட்டுள்ள இந்த உரிமையை வரவேற்று தமிழ்ப்பிரதேசங்களில் இதற்கென தமிழ் மக்கள் ஒரு ஹர்;த்தாலை மேற்கொள்ள முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசுக்கு எந்தவிதத் தயக்கமும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர், காணாமல் போயுள்ளவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சான்றிதழ் வழங்கிய பின்னர், அவர்கள் உயிருடன் திரும்பி வந்தால் அது சட்டச் சிக்கலாகிவிடும். எனவே சட்ட நடைமுறைகளை மீறி அரசு நடக்க முடியாது என கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போது அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண நிலவரம்
கிழக்கு மாகாணத்தில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களில் மாணவர்கள் வரவு இன்மையால் அரசு மற்றும் தனியார் பள்ளிக் கூடங்கள் வெறிச்சோடிச் காணப்படுகின்றன. அரசு, தனியார் அலுவலகங்கலும் வழக்கமான நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
போக்குவரத்து சேவைகளை பொறுத்தவரை ஆட்டோ சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அரசு, தனியார் உள்ளூர் பஸ் சேவைகள் தடைப்பட்டுள்ளது. தூர இடங்களுக்கான சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஈ .பி.டி.பி , ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்