கத்தார் உலகக் கோப்பை: அதிகாரிகளுக்கு லஞ்சமா?

பட மூலாதாரம், AFP
கத்தாரில் 2022ம் ஆண்டு உலகக் கோப்பை கால் பந்துப் போட்டியை நடத்த முடிவு செய்யப்படுவதற்காக, உலகக் கால்பந்து நிறுவனமான, பிபாவின் அதிகாரிகளுக்கு 5 மிலியன் டாலர்கள் வரை லஞ்சம் தரப்பட்டதாகக் காட்டும் ஆவணங்களை லண்டன் பத்திரிகை, சண்டே டைம்ஸ், வெளியிட்டிருக்கிறது.
உலகக் கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் துணைத் தலைவரான, கத்தார் பிரஜை, மொஹமத் பின் ஹம்மாம், உலகக்கால்பந்து சம்மேளன அதிகாரிகளுக்கு வெவ்வேறு தவணைகளில் இந்தப் பணத்தை வழங்கினார் என்பதைக் காட்டும் லட்சக்கணக்கான ஆவணங்களை இந்தப் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.
கத்தாரில் 2022ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்துவது என்று 2010ல் நடந்த வாக்கெடுப்பில் முடிவானது.
இந்த வாக்கெடுப்புக்கும் ஒராண்டு முன்னதான காலத்திலிருந்தே, மொஹமத் பின் ஹம்மாம், கத்தாருக்கு ஆதரவை " வாங்கும்" முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் என்பது இந்த ஆவணங்களிலிருந்து புலனாகிறது.
ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த சில கால்பந்து அமைப்புகளின் அதிகாரிகளுக்கு நாரடியாக பின் ஹம்மம் பணத்தைத் தந்துகொண்டிருந்தார் என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.
ஆனால் கத்தாருக்கு இந்த உலகக் கோப்பைப் போட்டியை நடத்த அனுமதி பெற எடுக்கப்பட்ட அதிகார பூர்வ முயற்சிகளில் பின் ஹம்மாமுக்கு எந்தவித அதிகாரபூர்வத் தொடர்பும் இல்லை, பங்கும் இல்லை, அவர் எடுத்த முயற்சிகள் எல்லாம் அவரது தனிப்பட்ட வகையில் எடுக்கப்பட்டவை என்றே கத்தார் வாதிட்டு வருகிறது.
இந்தப் புதிய ஆவணங்கள் குறித்து பின் ஹம்மாமின் கருத்தைப் பெற டைம்ஸ் முயன்றபோது, அவரது சார்பாக, அவர் மகன் , ஹமத் அல் அப்துல்லா கருத்தேதும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.








