You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிர் கிரிக்கெட் INDIA Vs WI: 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
நியூசிலாந்தின் ஹாமில்டனில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் அடித்த தலா ஒரு சதத்தால் இந்தியா 317 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய மேற்கிந்திய அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முயன்றபோதும் 162 ரன்களிலேயே சுருண்டது.
12 ஓவர்களில் டாட்டின் மற்றும் மேத்யூஸின் ஆட்டம், மேற்கிந்திய தீவுகள் இந்தியாவை கடுமையாகப் பயமறுத்தப் போவதாகத் தோன்றியது. ஆனால், டாட்டின் ஆட்டமிழந்த பிறகு பேட்டிங் முழுவதுமாகச் சரணடைந்தது.
123 ரன்கள் அடித்த ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகியாகத் தேர்வாகியுள்ளார். ஆனால், அவர் அணிக்கு இன்னொரு சதத்தை வழங்கிய ஹர்மன்ப்ரீத் கவுருடன் அதைப் பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அணி உலகக் கோப்பை பட்டியலில் மூன்று ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளோடு, அதிகப் புள்ளிகளைப் பெற்று உயர்ந்துள்ளது. ரன் ரேட்டில் ஆஸ்திரேலியாவை மிஞ்சியுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், "இதைவிட சிறப்பான ஒன்றை எதிர்பார்க்க முடியாது. இந்த வெற்றியின் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரியும்," என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 119 பந்துகளில் 123 ரன்கள் எடுத்தார். ஹர்மன்பிரீத் கவுர் 107 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்தார்.
முன்னதாக, இந்தியாவின் பேட்டிங்கை தொடர்ந்து களமாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் டியான்ட்ரா டாட்டின் மற்றும் ஹேலி மேத்யூஸ் முதல் பவர்பிளேயில் 81 ரன்கள் குவித்தனர். ஆனால் மேக்னா சிங்கும் சினே ராணாவும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு கள நிலைமை மாறியது. நான்கு விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பரிணமித்த ஸ்மிருதி மந்தனா தனது இன்னிங்ஸில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். எனினும் 43வது ஓவரின் இரண்டாவது பந்தில் மேற்கிந்திய பந்து வீச்சாளர் கானலின் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் மந்தனா.
முன்னதாக, போட்டி தொடங்கியபோது டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா, யாஸ்திகா பாட்டியா ஆகியோர் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
ஆறாவது ஓவரின் மூன்றாவது பந்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் அடி ஆக யாஸ்திகா பாட்டியா 31 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
அதன்பிறகு கேப்டன் மிதாலி ராஜ் களம் இறங்கினாலும் அவராலும் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஒன்பதாவது ஓவரின் மூன்றாவது பந்தில் மிதாலி ராஜ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பத்தாவது ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் ஆக இருந்தது. தீப்தி ஷர்மா சில காலம் மந்தனாவுக்கு துணையாக ஆடினார். ஆனால் அவரும் பதின்மூன்றாவது ஓவரில் 15 ரன்கள் எடுத்த நிலையில், கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த நேரத்தில் இந்திய அணி சற்று சிக்கலில் சிக்கியது, ஆனால் ஸ்மிருதி மந்தனா மறுமுனையில் இருந்தார்.
தீப்தி ஷர்மா ஆட்டமிழந்த பிறகு களம் இறங்கிய ஹர்மன்பிரீத் கவுர் 20வது ஓவரில் மந்தனாவுடன் இணைந்து இந்தியாவின் இன்னிங்ஸை 100 ரன்களுக்கு கொண்டு சென்றனர். இதன் பின்னர் இருவரும் சேர்ந்து ரன்களை குவிக்கத் தொடங்கியதும் ஆட்டம் விறுவிறுப்பானது.
39ஆவது ஓவரில் இருவரும் சேர்ந்து 150 ரன்கள் எடுத்தனர்.
ஸ்மிருதி மந்தனா 40வது ஓவரில் மேத்யூஸின் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். அதன் பிறகு, மந்தனா, ஸ்மோக் பேட்டிங்கை வெளிப்படுத்தினார், 41-வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் தொடர்ந்து 3 பவுண்டரிகளை விளாசினார். இருப்பினும் 43வது ஓவரில் மந்தனா 123 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 262 ரன்களாக இருந்தது. இப்போது ஹர்மன்பிரீத் கவுர் ரன் குவிப்பில் முன்னிலை வகித்தார்.
மணிக்கட்டில் வலி இருந்தபோதிலும், ஹர்மன்பிரீத் கவுர் 47வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்து தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான்காவது ஒருநாள் சதத்தை அடித்தார். உலக கோப்பையில் ஹர்மன்பிரீத் கவுரின் இரண்டாவது சதம் இதுவாகும். ஹர்மன்பிரீத் 100 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார்.
இருப்பினும், ரிச்சா கோஷ் வடிவத்தில் இந்தியாவுக்கு ஐந்தாவது அடி கிடைத்தது. 5 ரன்கள் எடுத்த நிலையில் கோஷ் பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு பூஜா வஸ்த்ரகர் சில நல்ல ஷாட்களை ஆடியதால் இந்தியா 300 ரன்களை எட்டியது. 48வது ஓவரில் பூஜா வஸ்த்ரகரும், இன்னிங்ஸின் 49வது ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுரும் பெவிலியன் திரும்பினர்.
ஜூலன் கோஸ்வாமியின் வடிவத்தில் இந்தியா எட்டாவது அடியைப் பெற்றது, இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 318 ரன்கள் வெற்றி இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமாடியது.
வலுவான தொடக்கம் அதிக நேரம் தொடரவில்லை
மேற்கிந்திய தீவுகள் அணி, விக்கெட் இழப்பின்றி 100 ரன்களுக்கு மேல் எடுத்து வலுவான தொடக்கத்தை வெளிப்படுத்தியது. ஆனால் அதன் பிறகு அந்த அணியின் இன்னிங்ஸ் தடுமாறியது.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் டியான்ட்ரா டாட்டின் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் அரை சதம் அடித்தார். இருப்பினும் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். சிறிது நேரத்தில் 5 ரன்களில் கிஸ்ஸியா நைட் அவுட் ஆனார்.
17வது ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மூன்றாவது அடி கிடைத்தது, ஸ்டெபானி டெய்லர் ஒரு ரன் மட்டுமே எடுத்து திரும்பினார். பதினெட்டாவது ஓவரில் தொடக்க வீரர் ஹேலி மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
பிற செய்திகள்:
- மாறன் - பட விமர்சனம்
- க்ளாப் - பட விமர்சனம்
- யுக்ரேன் Vs ரஷ்யா: போர்க்குற்றம் என்றால் என்ன? புதினை விசாரணை செய்ய முடியுமா?
- தஞ்சாவூர், புதுக்கோட்டையில் களைகட்டும் மொய் விருந்துகள் - கள நிலவரம்
- உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ், பிரியங்காவின் பிரசாரம் எடுபடாமல் போனது ஏன்?
- உத்தர பிரதேச தேர்தல்: அகிலேஷின் 'சைக்கிள்' பஞ்சர் ஆனது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்