You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டோக்யோ ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து
டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து
2016 ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்துடன் சேர்த்து தனிப்பட்ட வகையில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆகிறார் சிந்து.
டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்த பி.வி. சிந்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்ஜியாவோ வீழ்த்தியுள்ளார்.இன்றைய போட்டின் முதல் ஆட்டத்தில் ஹி பிங்ஜியாவோவை 21க்கு 13 என்ற கணக்கில் சிந்து வீழ்த்தினார். கடும் போட்டி நிறைந்த இரண்டாம் ஆட்டத்திலும் 21க்கு 15 என்ற கணக்கில் சிந்து வெற்றிப்பெற்று பதக்கத்தை வென்றுள்ளார்.
இரு ஒலிம்பிக் பதக்கங்களை பெறும் முதல் இந்திய பெண்
சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டி ஒன்றில் இருமுறை பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
சிந்துவுக்கு முன் இந்தியாவை சேர்ந்த இரு ஆண்கள் இருமுறை ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றிருந்தாலும், முதல் இந்தியப் பெண் என்ற பெருமை சிந்துவை வந்து சேர்கிறது.
1900 ஒலிம்பிக் போட்டியில் நார்மன் பிரிட்சார்ட் இரு பதக்கங்களை பெற்றார். அதன்பின் சுஷில் குமார், மல்யுத்தத்தில் பீய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலமும், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.
சிறு வயது சாம்பியன்
1995 ஜூலை 5ஆம் தேதி பிறந்த சிந்து சிறுவயதிலேயே சாதித்தவர்.
2009 சப்-ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், அதன் பிறகு தன் வெற்றிப் பயணத்தில் பின்னோக்கிப் பார்க்கவே இல்லை.
18 வயதான போது, 2013 உலக சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை ஒருவர் உலக சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்றது அதுவே முதல் முறை.
அதன் பிறகு சிந்துவுக்கு நிறைய சாம்பியன் பட்டங்கள் கிடைத்தன.
2016 ரியோ ஒலிம்பிக்சில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றது அவரது வாழ்க்கையில் மிகவும் பெருமைக்குரிய தருணமாக அமைந்தது.
2017 மற்றும் 2018ல் நடந்த உலக சாம்பியன் போட்டிகளில் இறுதிச் சுற்றுகளில் தோல்வி அடைந்த சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். அதன் பிறகு 2019ஆம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்து தங்கப்பதக்கத்தை பெற்றார்
தான் பெற்ற வெற்றிகளில் உலக சாம்பியன் பட்டம் மிக முக்கியமானது என சிந்து கூறுகிறார். இந்த போட்டிகளில் 2 வெண்கலம், 2 வெள்ளி என பிறகு கடைசியாக தங்கப்பதக்கமும் வென்றார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையான சிந்து உள்ளார். ``ஒலிம்பிக்ஸ் வெற்றி எளிதாக கிடைத்துவிடுவதில்லை. ரியோ ஒலிம்பிக்ஸுக்கு முன்பு எனது செல்போன் 3 முதல் 4 மாதங்கள் வரை பறிக்கப்பட்டு விட்டது. ஐஸ் கிரீம் சாப்பிடுவது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் கூட ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நிறுத்திவிட்டேன்'' என கடந்த ஆண்டு பிபிசிக்கு அளிக்க பேட்டியில் சிந்து குறிப்பிட்டிருந்தார்.
எளிதாக கிடைத்த வெற்றியல்ல
''என் 8 வயதில் நான் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கினேன். என் பெற்றோர் இருவருமே சர்வதேச வாலிபால் வீரர்கள். என் தந்தை அர்ஜுனா விருது பெற்றவர். அவர் செகந்திராபாத் ரயில்வே மைதானத்தில் வாலிபால் விளையாடும்போது, அருகில் பேட்மிண்டன் மைதானங்கள் இருந்தன. நான் அங்கே விளையாடத் தொடங்கினேன்.`` என்கிறார் சிந்து.
இந்திய விளையாட்டு வீராங்கனைகளில் மிகவும் வெற்றிகரமானவர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், பல இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உள்ளார் பி.வி. சிந்து.
பிற செய்திகள்:
- இமயமலை நாட்டின் இமாலய சாதனை: பூட்டானில் 99% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
- ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த எம்மா மெக்கியோன்
- காஷ்மீர் ப்ரீமியர் லீக்: 'வெளிநாட்டு வீரர்களை பிசிசிஐ மிரட்டுகிறது ' - பாகிஸ்தான்
- "பெட்ரோல் பாண்டுகளால்தான் பெட்ரோல் விலை உயர்வதாகச் சொல்வது பொய்" - ஆனந்த் ஸ்ரீநிவாசன்
- நரபலி கொடுக்கும் ஆஸ்டெக் பேரரசு: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பழங்குடிகளை பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்