You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீபக் சகார்: இந்தியா வெல்ல உதவிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் யார் - ? IND vs SL கிரிக்கெட்
இந்திய மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரையும் வென்றுள்ளது இந்திய அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது.
இரண்டாவதாக சேசிங் செய்யத் தொடங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவடைய ஐந்து பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், ஏழு விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
ஆனால், இந்த வெற்றி அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒரு கட்டத்தில், 27 ஓவர்கள் முடிவதற்குள்ளேயே 160 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்திய அணி.
ஏழாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய க்ருனால் பாண்ட்யா ஓரளவு நிலைத்து நின்று 54 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க, எட்டாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய தீபக் சகார், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 82 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். ஒரு நாள் போட்டிகளில் இது அவரது முதல் அரை சதம்.
இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தபோது தாம் வீசிய எட்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இலங்கையின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்த உதவியிருந்தார்.
நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனான தீபக் சகார் பற்றிய சில முக்கியத் தகவல்கள் இதோ
1. 1992ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பிறந்தவர் தீபக் சகார்.
2. இதுவரை இந்திய அணிக்காக ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், 13 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
3. 2016 முதல் வெவ்வேறு அணிகளுக்காக இதுவரை 55 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
4. இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாகும் முன்னர், ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் அணி, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், அஜ்மீர் பேந்தர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், இந்தியா - ஏ, இந்தியா - பி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் தீபக் சகார்.
5. 2015இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தாலும் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
6. 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். ஆனால், பெரிதாக மிளிரவில்லை.
7. 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடத் தொடங்கிய பின்னரே கவனம் பெரும் கிரிக்கெட் வீரரானார் தீபக் சகார்.
8. 2018 ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் முதல் முறையாக விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்தார் தீபக்.
9. பின்னர் அதே ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகத் தமது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
10. தீபக் சகார் இந்திய அணிக்காக இன்னும் டெஸ்ட் போட்டி எதிலும் விளையாடவில்லை.
பிற செய்திகள்:
- பெகாசஸ் ஸ்பைவேர்: இந்திய ஜனநாயகத்தை ஆட்டம் காண வைக்கும் உளவுப் பிரச்னையா?
- இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை - மத்திய அரசு
- ஜெஃப் பெசோஸின் 11 நிமிட விண்வெளி பயணத்தில் மெய்சிலிர்க்கும் அனுபவம்
- கொரோனாவால் இந்தியாவில் 40 லட்சம் பேர் பலி - அதிர்ச்சி தரும் அமெரிக்க ஆய்வு
- ஐஎஸ் குழுவினரின் ஸ்மார்ட் ஃபோன் மர்மங்கள் - அறியப்படாத தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்