You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாளவிகா பன்சோத்: படிப்பு, விளையாட்டு இரண்டிலும் சாதிக்கும் வீராங்கனை
படிப்பில் கவனம் செலுத்துவதற்காக விளையாட்டை துறக்கும் பல விளையாட்டு வீரர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இளம் பேட்மிண்டன் வீராங்கனை மாளவிகா பன்சோத்தின் கதை சற்று தனித்துவமானது. மாளவிகாவின் பெற்றோர் பல் மருத்துவர்கள். விளையாட்டில் தனது மகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக அவரின் தாய் விளையாட்டு அறிவியலில் பட்டப் படிப்பு பயின்றுள்ளார்.
மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பன்சோத் தனது குழந்தை பருவத்தில் பல விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்தினார்.
பின் அவரின் பெற்றொர், அவரின் உடல்திறனை மேம்படுத்த ஏதேனும் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த கூறினர். எட்டு வயது பன்சோத் பேட்மிண்டனை தேர்வு செய்தார்.
அவரின் தாய், தந்தை இருவரும் அவருக்கு பக்கபலமாக இருந்தனர். அவரின் பயிற்சிக்கு தேவையானவற்றை வழங்கி, மனதளவில் நம்பிக்கை பெறவும் உறுதுணையாக இருந்தனர்.
அதேபோல விளையாட்டிற்காக தனது படிப்பையும், படிப்பிற்காக விளையாட்டையும் விட்டுகொடுக்க மாளவிகாவிற்கு விருப்பமில்லை. அதுவே அவரின் கடின உழைப்புக்கு காரணமாக இருந்தது. அதற்கான விளைவுகளும் சிறப்பானதாக இருந்தன.
தனது பத்து மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் 90 சதவீத மதிப்பெண் பெற்ற மாளவிகா, அந்த தேர்வு சமயங்களில் நடைபெற்ற போட்டிகளில் 7 சர்வதேச பதக்கங்களையும் வென்றார்.
சவால்களை கொள்ளுதல்
தனது துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கு பெற்றோரை கொண்ட மாளவிகாவிற்கு, தேவையான வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை பெறுவதற்கான சவால்களும் இருந்தன.
வெகுசில சின்தெடிக் ஆடுகளங்களே இருந்தன. அதிலும் சிலவற்றிலேயே போதுமான வெளிச்சம் (Illumination) இருந்தன. மேலும், குறைவான பயிற்சியாளர்களே இருந்தனர்.
ஜூனியர் (19 வயதுக்கு கீழ்) மற்றும் சப் ஜூனியர் (16வயதுக்கு கீழ்) அளவில் விளையாடிய பிறகு, மாளவிகாவின் பெற்றோர் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதற்கு அதிக பணம் தேவைப்படும் என்றும், ஸ்பான்சர்ஷிப் கிடைப்பது கடினம் என்றும் உணர்ந்தனர்.
சிறப்பான வெற்றி
மாநில அளவில் 13 வயதுக்குட்பட்டோர் மற்றும் 17 வயதுகுட்பட்டோருக்கான போட்டிகளில் வெற்றிப் பெற்றபின் பள்ளி மாணவர்களுக்காக இந்திய அளவில் நடத்தப்படும் ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களையும், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் அளவிலான போட்டிகளில் ஒன்பது பதக்கங்களையும் பெற்றார்.
முதல்முறையாக சீனியருக்கான சர்வதேச அளவிலான போட்டியாக அமைந்த மாலத்தீவில் நடைபெற்ற இண்டர்நேஷனல் ஃப்யூச்சர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியிலும் வெற்றி பெற்றார் மாளவிகா.
இடது கை வீராங்கனையான மாளவிகா, மாலத்தீவில் வெற்றி பெற்ற ஒரே வாரத்தில் நேபாளத்தில் நடைபெற்ற அன்னப்பூர்னா போஸ்ட் இண்டேஷனல் போட்டியில் வெற்றி பெற்றார்.
சீனியர் அளவில் வெற்றிகளை பெறுவதற்கு முன் மாளவிகா ஜூனியர் அளவிலான போட்டிகளிலும் பல வெற்றிகளை பெற்றார்.
ஆசிய பள்ளிகளுக்கான பேட்மிண்டன் போட்டி மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் 21 வயதுக்குட்பட்டோருக்கான பேட்மிண்டன் போட்டி ஆகியவற்றில் தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.
மாளவிகாவின் விளையாட்டு திறமை, இந்திய அரசு மற்றும் பல்வேறு விளையாட்டு அமைப்புகளின் கவனத்தை பெற்றது.
இதுவரை அவர் விளையாட்டுச் சார்ந்த பல விருதுகளையும் பெற்றுள்ளார். நாக பூஷன் விருதை பெற்றுள்ளார், கேலோ இந்தியாவின் தடகள வீரர்களின் திறமை வளர்ச்சி திட்டத்தின் அங்கீகாரம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்திலும் தேர்வாகியுள்ளார்.
படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் சிறப்பாக செயல்படும் மாளவிகா, இரண்டையும் இணைக்கும் ஒரு சிறந்த வழியை அமைக்க வேண்டும் என்கிறார்.
தனது படிப்பில் கவனம் செலுத்தி அதே நேரம் நாட்டிற்காக பதக்கங்களை பெற்றுத்தர விரும்பும் பெண்களின் தேவைகளை புரிந்து கொள்ளும் விதமாக கல்வி அமைப்பு இருக்க வேண்டும் என்கிறார் மாளவிகா. அவ்வாறு இருந்தால், பெண்கள் விளையாட்டு, படிப்பு என இரண்டிற்கு மத்தியில் ஏதோ ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்கிறார்.
(மாளவிகா பன்சோத்திற்கு பிபிசி அனுப்பிய மின்னஞ்சலுக்கு கிடைத்த பதில்களின் மூலம் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: