செளரவ் கங்குலிக்கு முன்பு பிசிசிஐ தலைவராக இருந்த கேப்டன் பற்றி தெரியுமா?

    • எழுதியவர், பிரவீன் காசம்
    • பதவி, பிபிசி தெலுங்கு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி ஒருமனதாக பிசிசிஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கங்குலிக்கு முன்பே ஒரு கிரிக்கெட் கேப்டன் பிசிசிஐ தலைவராக இருந்துள்ளார்.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் கங்குலி தொடரவுள்ளார். சுமார் 65 வருடத்திற்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் பிசிசிஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு 1952ல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த விஜயானந்த கஜபதி ராஜு, பிசிசிஐ தலைவராக பின்னர் பதவி வகித்தார்.

விஜயநகரில் பிறந்த கஜபதி ராஜு, விஜயநகரை ஆட்சி செய்த பூசபட்டி விஜய ராம ராஜுவின் இரண்டாவது மகன். விஸ்ஸி என்று கிரிக்கெட்டர்கள் மத்தியில் அழைக்கப்படும் இவருக்கு சர் விஜய் என்ற பெயரும் உள்ளது.

விஸ்ஸி கிரிக்கெட் விளையாட்டு மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டவர். பிசிசிஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் இவர் தான்.

கிரிக்கெட் வாழ்க்கை

சர்வதேச கிரிக்கெட் வீராக அவரது பயணம் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது. அவர் முதல் தர போட்டிகளை பொறுத்தவரை மொத்தம் 47 போட்டிகளில் விளையாடி, சராசரியாக 1,228 ரன்கள் எடுத்துள்ளார்.

1936ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் சென்றபோது விஜயானந்த கஜபதி ராஜு அணியின் தலைவராக இருந்தார்.

அந்த சமயம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்ததால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். எனவே கிரிக்கெட் வீரராக இதுவே விஸ்ஸின் முதல் மற்றும் கடைசி பயணமாக அமைந்தது.

பி.சி.சி.ஐ தலைவர் பதவி

கிரிக்கெட் வீரராக தோல்வி அடைந்தாலும், 1954 முதல் 1957 என வரை மூன்று ஆண்டு பி.சி.சி.ஐ தலைவராக விஜயானந்தா கஜபதி ராஜு பணியாற்றினார். அவரது பதவி காலத்திலேயே கான்பூரில் கிரீன் பார்க் ஸ்டேடியம் மற்றும் உத்தர பிரதேச கிரிக்கெட் அணி உருவானது.

பி.சி.சி.ஐ இவரின் நினைவாக இவர் பெயரில் இன்டர் யுனிவர்சிட்டி மண்டல போட்டியை நடத்துகிறது. மேலும் விஜயநாகரில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு விஸ்ஸிஜி ஸ்டேடியம் என ஆந்திர கிரிக்கெட் சங்கம் பெயரிட்டுள்ளது.

கிரிக்கெட் அவருடன் இணைக்கப்பட்டே இருந்தது என டாக்டர் பி.எஸ்.ஆர் மூர்த்தி பிபிசியிடம் கூறினார்.

''சிறு வயதிலிருந்தே விஸ்ஸி கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். காசியில் உள்ள அரண்மனையை கவனிக்க விஸ்ஸி ஆந்திராவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் கிரிக்கெட் பயிற்சிகாக சிலர் அவருடன் அழைத்து செல்லப்பட்டனர். காசியில் மைதானம் ஓன்று அமைக்கப்பட்டு தொழில் முறை பயிற்சியாளர்களை நியமித்து பயிற்சி அளிக்கப்பட்டது.''

தேசிய அணிக்கு தேர்வாகும் முன்பே விஸ்ஸி தனது சொந்த அணியை அமைத்து இங்கிலாந்து சென்று விளையாடி வந்ததாக மூர்த்தி தெரிவித்தார்.

உத்தர பிரசேதம் மாற்றும் ஆந்திர கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் விஸ்ஸி பதவிவத்தார். பிறகு பிசிசிஐ தலைவரானார். 1960களில் விசாகபட்டணம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தற்போதைய உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஐக்கிய மாகாணத்தின் சட்ட அமைச்சராகவும் பதவி வகித்தார் விஸ்ஸி.

''பிசிசிஐ தலைவராக பதவி வகித்து நாடு முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை பரப்பியதன் புகழ் சர் விஜய்க்கே சேரும்,'' என ஜி.எஸ்.ராம் மோகன் தனது "Fifty Years of Andhra Pradesh 1956-2006" எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே மதராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா தனி மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அதற்கு இவர் ஆதரவாக இருந்தார்.

மதராஸின் தெலுங்கு பேசும் பகுதிக்கு சிறப்பு பட்ஜெட்டை உருவாக்க மெட்ராஸ் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

சர் ஸ்டாஃபோர்ட் கிரிப் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது விஸ்ஸி அவரை சந்தித்து தனி ஆந்திர மாநிலத்தை நிறுவ தேவையான அம்சங்களை சமர்ப்பித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :